Featured Posts

போதை தராதவற்றை பருக அனுமதி.

1304. அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி), தம் திருமணத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்(குப் பருகக் கொடுப்பதற்)காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா? இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குகென்றே (தண்ணீரில்) பேரீச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் ஊறப்போட்டு வைத்திருந்தார். (நபி (ஸல்) அவர்கள் மணவிருந்தைச் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.

புஹாரி :5183 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).

1305. அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி) (தம்) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத் (ரலி) அவர்களின் துணைவியார் (மணப்பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரலி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக ஊட்டினார்கள்.

புஹாரி : 5182 ஸஹ்ல் (ரலி).

1306. நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து ‘பனூ சாஇதா’ குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), ‘இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்க, அவள் ‘தெரியாது” என்று பதிலளித்தாள். மக்கள், ‘இவர்கள் தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்” என்று கூறினார்கள். அந்தப் பெண் ‘அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவதியாகி விட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினாள். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் முன்னே சென்று ‘பனூ சாஇதா’ குலத்தாரின் சமுதாயக் கூடத்தில் அமர்ந்தார்கள். பிறகு ‘எங்களுக்குப் பருக (ஏதேனும்) கொடுங்கள். சஹ்லே!” என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன்.(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம் (ரஹ்) கூறினார்: ஸஹ்ல் (ரலி) அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பருகினோம். பிறகு உமர் இப்னு அப்தில் அஜீஸ் (ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.

புஹாரி :5637 ஸஹ்ல் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *