Featured Posts

பெண்ணே பெண்ணே! – (தொடர் 8)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
அநியாயம் வேண்டாம் கண்ணே!

இஸ்லாம் நீதி நெறிகளைப் போற்றும் மார்க்கமாகும். அநியாயத்தை இஸ்லாம் அணுவளவும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ இல்லை. இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்ததால் யூதர்கள் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டது. இந்த வெறுப்புணர்வு கூட அநியாயத்திற்குக் காரணமாகிவிடக் கூடாது எனப் போதித்த மார்க்கம் இஸ்லாமாகும்.

“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநிறுத்துபவர்களாகவும் (அதற்கு) சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு, நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே பயபக்திற்கு மிக நெருக்கமானதாகும். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாவான்.” (5:8)

பெண்களில் பலர் நீதி நெறியை மறந்து அநியாயமாக நடந்துகொள்பவர்களாகவும், அநியாயத்திற்குத் துணை போகின்ற வர்களாகவும் இருக்கின்றனர். தனக்கும், தான் நேசிப்பவர்களுக்கும் ஒரு சட்டம், ஒரு நிலைப்பாடு. தான் வெறுப்பவர்களுக்கு வேறு நிலைப்பாடு என்ற இரட்டை நிலைப்பாடு பெண்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது.

மாமியார் கொடுமை:
பெண்களின் நீதி நெறிக்கு முரணான அநியாயமும், அக்கிரமமும் நிறைந்த கோர முகத்தின் வெளிப்பாடாகவே மாமியார் ஸ்தானம் திகழ்கின்றது. நானும் ஒரு பெண் என் மருமகளும் ஒரு பெண் என்ற நிலைப்பாடு இல்லாமல் மருமகளின் உணர்வுகளை ஊனப்படுத்தும் நடவடிக்கைகளில் சிலர் இறங்கிவிடுகின்றனர். குத்து வார்த்தைகள், கேவலப்படுத்தல், குறைத்துப் பேசுதல், கோள் மூட்டுதல், குற்றம் குறைகளைத் தேடுதல், நன்மை நலவுகளைக் கூட குறைமதியோடு நோக்குதல் போன்ற பல ரூபங்களில் மாமியாரின் அநியாய முகம் களை கட்டும்.

தான் பெற்ற பிள்ளையை ஒரு மாதிரியாகவும் தன் மருமகளை ஒரு மாதிரியாகவும் பார்த்து, அதில் பாகுபாட்டை வெளிப்படுத்துவர். பெண்களின் இந்த இழிகுணங்களால்தான் “மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொற்குடம்” போன்ற பழமொழிகள் நிலவி வருகின்றன.

சில மாமிகள் அவர்கள் மருமகளாக இருக்கும் போது தமது மாமியாரின் கொடுமைக்கு ஆளாகியிருப்பர். இத்தகைய பெண்கள் தமது மருமகள் குறித்து எப்படி நியாயமாக சிந்திக்க வேண்டும். எனது மாமியார் என்னைக் கேவலப்படுத்தும் போது நான் எவ்வளவு கேவலப்பட்டேன். அது போலதான் எனது மருமகளும் அவதிப்படுவாள். அந்த நிலைக்கு அவளை நான் தள்ளக் கூடாது என்று நினைக்க வேண்டும். ஆனால் நான் எவ்வளவு கஷ;டப்பட்டேன் இவள் மட்டும் சொகுசாக இருப்பதா? என்று நினைத்து மாமியார் மருமகளை “ரெக்கின்” (சுயபபiபெ) செய்ய ஆரம்பித்துவிடுகின்றாள்.

தனது மகளுக்கு அவளது மாமியார் வீட்டில் நடக்கும் அநியாயங்களை வாய் கிழிய எதிர்ப்பவள் தனது மருமகளுக்கு அதே அநியாயங்களை முன்நின்று செய்கின்றாள். இவ்வாறு பெண்ணின் கோர முகத்தின் வெளிப்பாடாக மாமியார் அந்தஸ்து மாறிவிட்டதே!

“நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும் நீங்கள் பேசும்போது நீதியாகவே நடந்து கொள்ளுங்கள்.” (6:152)
தனது மகனையும் மருமகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் பெண்கள் இந்த வசனத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சொல்லும், செயலும் நீதியானதாக இருக்க வேண்டும்.

பெண்ணின் அன்பு முகத்தின் வெளிப்பாடு தாய்மையாகும். இந்தத் தாய்மை நிலையிலும் பெண் சிலபோது அநியாயத்தை வெளிப்படுத்துவது ஆச்சர்யமாகும்.

ஆண் பிள்ளைகளை ஒரு மாதிரியும், பெண் பிள்ளைகளை ஒரு மாதிரியும் பார்த்து அநியாயம் செய்துவிடுகின்றாள். சில போது பெண் பிள்ளை பருவமடைந்து அவளை கட்டிக் கொடுக்க முடியாத நிலையில் தானும் கஷ;ப்படும் நிலை வரும் போது இவள் பேசும் பேச்சுக்களும் நடக்கும் விதங்களும் அந்த இளம் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தி விடுகின்றது. பொறந்த நேரமே செத்துத் தொலஞ்சிருந்தா நிம்மதியா இருந்திருக்கும். இதுட தரித்திரியம் முடிஞ்சபாடில்ல. இப்படியெல்லாம் பேசி அவளின் உள்ளத்தைக் காயப்படுத்தும் உள்ளமும், ஆண் பிள்ளை-பெண்பிள்ளை என வேறுபாடு காட்டிப் பார்ப்பது தாய்மையின் அநியாயமாகும்.

இந்த நிலை அவள் பாட்டியாகும் போது வேறு ரூபத்தில் வெளிப்படுகின்றது. ஒரு பாட்டி தனது மகனின் பிள்ளைகளுடன் நடந்து கொள்ளும் முறையையும் மகளின் பிள்ளைகளுடன் நடந்து கொள்ளும் முறையையும் எடுத்து நோக்கினால் அதிலும் வேறுபாடும், வித்தியாசமும் இருக்கின்றது.

மகளின் பிள்ளைகளிடம் மிக அன்பாக இருக்கும் பாட்டி மகனின் பிள்ளைகளிடம் குறைவாகவே அன்பை வெளிப்படுத்துகின்றாள். மகனின் பிள்ளைகளுக்கும், மகளின் பிள்ளைகளுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படும் போது மகளின் பிள்ளைகளின் பக்கம் சாய்ந்துவிடுவதைப் பார்க்கலாம்.

மருமகளின் மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடாக இந்தப் பாகுபாடு வெளிப்படுகின்றது. இவ்வாறு அன்பு முகம் கூட அநியாய முகமாக மாறும் ஆச்சர்யம் நிகழ்ந்து வருகின்றது.

மருமகள்கள் மாமியார்களால் பாதிக்கப்பட்டால் அதற்கும் அவர்கள் குறைவில்லாமலே பழி தீர்த்துக் கொள்கின்றனர். மாமியார் கொடுமை என்பது திருமணம் முடித்து ஒரு வருடங்களுக்குள் முடிந்துவிடும். ஆனால் மருமகள் இதற்குப் பல வருடங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழி தீர்த்துக் கொள்கின்றாள்.

நான் ஒரு வயது முதிர்ந்த தாயை நோய் விசாரிப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர் தன் மருமகள் வீட்டில்தான் இருந்தார். அப்போது அந்தத் தாயின் மகனும், மருமகளும் ஒரு திருமண விருந்திற்காகச் சென்றிருந்தனர். இந்தத் தாய் படுத்த படுக்கையாக இருந்தார். மலசலம் எல்லாம் படுத்த படுக்கையோடு போகும் நிலை. நாம் சென்றதும் அந்தத் தாய் அவசரமாக மருமகள் வர முன்னர் சாப்பிடுவதற்கு ஏதாவது சரி தாங்க! எனக் கெஞ்சினார். சாப்பிட்டால், குடித்தால் கட்டிலிலேயே மலசலம் கழிப்பாள் என்பதால் மருமகள் உணவு, பானம் கொடுப்பதில்லை என அந்த மூதாட்டி கூறினார். பூனையைப் பட்டினி போட்டு சாகடித்த பெண் நரகம் செல்வாள் என்று கூறிய மர்க்கத்தைப் பின்பற்றும் ஒரு மருமகளின் கல் மனதைப் பார்த்தீர்களா? இப்படி எத்தனை பேர் உலகிலேயே நரக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ. அல்லாஹ்தான் அறிவான். இந்தக் காட்சியைக் காணும் போதுதான் நபி(ஸல்) அவர்கள் முதிர் வயதில் வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடியதன் உண்மையான அர்த்தம் புரிந்தது.

மாமியார் என்பது பெண்ணின் அநியாய முகத்தின் ஒரு பகுதியென்றால் மருமகள் என்பது மறு பகுதியாகக் கோர காட்சி தருவதை உலக மட்டத்தில் பரவலாகக் காணமுடிகின்றது. இந்த இருசாராரும் இஸ்லாமிய வரையறைகளை மீறிச் செயற்படுவதுதான் இந்த செயற்பாடு தொடர்வதற்கு வழியாக அமைந்துள்ளது. தனக்கு தன் மாமி செய்ததை மன்னிக்கும் மனநிலை மருமகளுக்கு வர வேண்டும். அறியாமையாலும், தவறான உளவியல் பாதிப்புக்களினாலும் மாமி ஸ்தானத்தில் இருப்போர் சில தவறுகளைச் செய்துவிடுகின்றனர். நான் செய்தது தவறு என்பதை அவர்கள் உணர்ந்து அவதிப்படும் தருணத்தில் மருமகள் தனது பதிலடியையும், பழி தீர்க்கும் நடவடிக்கையையும் ஆரம்பித்து விடுகின்றாள். இந்த நிலையில் நல்ல பெண்களும் தனது இறுதிக் காலத்தைக் கவலையுடன் கழிக்கும் நிலை ஏற்படுகின்றது. இதற்கு முடிவே இல்லையா?

மாமியார்களைப் பெறுத்தவரையில் மகன் மீது கொண்ட அபரிமிதமான பாசம் தனது மகளை எங்கிருந்தோ வந்தவள் ஆள்கிறாளே என்ற தவறான எண்ணம், மருமகள் மகனைக் கைக்குள் போட்டுக் கொண்டு தான் பெற்றெடுத்து வளர்த்த மகனைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவாளோ என்ற எண்ணம். இவளை அடக்கி வைக்காவிட்டால் இவள் என்னை அடக்க ஆரம்பித்துவிடுவாள் என்ற பயமெல்லாம் சேர்ந்து தப்பாகச் செயற்பட வைக்கின்றது.

எனவே, அவர்களின் வயது, தியாகம் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு அவர்கள் விடயத்தில் பழிவாங்கும் போக்கைக் கைவிட்டு பணிந்து போகும் பக்குவத்தை மருமகள்மார் பெற வேண்டும். தான் தனது கணவன் மூலம் அனுபவிக்கும் எல்லா அனுகூலங்களுக்கும் காரணமாக இருந்தவள் தனது மாமிதான் என்பதை உணர்ந்து விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.

பெண்ணின் அன்பு, பாசம், பற்று என்பவை கூட பலவிதத்தில் அவளை அநியாயக்காரியாக மாற்றிவிடுகின்றது. அவற்றை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் நோக்குவேம்.

3 comments

  1. good. enaku yutharhalin soolchiyum islathin eluchiyum patri padika thahaval kidaikuma

  2. assalamu alaikum, enaku pengalukku anneethi seiyum aangalukaana islamiya thandanaigal patri vilakkam vendum. please uthavungal

  3. صفية ميران

    السلام عليكم ورحمة الله وبركاته
    allah ungalukku barakath saiwanaha
    பெண்ணே பெண்ணே தொடரை நான் copy பன்னி whats app இல் போட்டேன் பெரும் வரவேற்பை பெற்றது
    جزاك الله خيرا

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *