Featured Posts

சிகைக்கு கருப்பு சாயம் பூசுதல்

சரியாகச் சொல்வதென்றால் இது ஹராமாகும். ஏனெனில் இது குறித்து நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. ‘புறாக்களின் (கருத்த) மார்புப் பகுதியைப் போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத், நஸயீ.

முடி நரைத்தோர்களில் பெரும்பாலோரிடம் இச்செயல் பரவலாகக் காணப்படுகின்றது. தங்கள் நரையை கருப்புச்சாயம் பூசி அவர்கள் மாற்றி விடுகின்றனர். இவர்களது இச்செயல் பல தீமைகளின் பால் இட்டுச் செல்கின்றது. ஏமாற்றுதல், அல்லாஹ் படைத்த அமைப்பை மாற்றுதல், தன்னுடைய எதார்த்த நிலையை மறைத்து பொய்யான தோற்றத்தைக் காட்டுதல் ஆகியவை அத்தீமைகளில் சில. மனிதனுடைய பண்பாட்டின் மீது ஒரு தீய தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. சிலபோது இதனால் ஒரு வகையான ஏமாற்றத்திற்குக் கூட அவன் ஆளாகலாம்.

நபி (ஸல்) அவர்கள் தமது நரையை மருதாணி போன்றவற்றால் – அதாவது மஞ்சள் அல்லது சிகப்பு அல்லது பழுப்பு நிறத்தால் – மாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது.

‘மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் நபி (ஸல்) அவர்களிடம் அபூகுஹாஃபா (அபூபக்கர் (ரலி)யின் தந்தை) கொண்டு வரப்பட்டார்கள். அவருடைய தலையும், தாடியும் அதிக வெளுப்பின் காரணத்தால் வெண்ணிறப் பூக்கள், காய்கள் கொண்ட செடியைப் போன்று வெளுத்து போய் இருந்தது. (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், இந்த நரையை எதாவது வண்ணம் கொண்டு மாற்றுங்கள். கருப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

இவ்விஷயத்தில் பெண்ணும் ஆணைப் போன்றுதான். அவளும் தனது முடிக்கு கருப்புச்சாயம் பூசக்கூடாது என்பதே சரியான முடிவாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *