Featured Posts

உங்கள் பொன்னான வாக்குகள்!

feather_iconஇதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது!

செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுயர சுவரொட்டிகள்!

செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேகச் சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்!

இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்னதான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கறை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!..

யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்படப் போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச் சுருட்டிய வரிப் பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல! ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக்கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிற்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது?

இதோ அல்லாஹ் சொல்கிறான்:

யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்தத் தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல்குர்ஆன் 4:85)

நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல்குர்ஆன் 5:2)

வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை..

இது 1989 ஜனவரி அல்ஜன்னத்தில் வெளியிடப்பட்ட தலையங்கம் அன்று இதன் ஆசிரியராக பீ. ஜைனுல் ஆபிதீன் என்பவர் இருந்தார். அன்றும் இன்றும் பீஜே என்கிற பீ. ஜைனுல் ஆபிதீன் எப்படியிருந்தார் என்ன சொன்னார் என்பதனை தெரிந்து கொள்ளும் பொருட்டு இத்தலையங்கம் வெளியிடப்படுகின்றது

– நன்றி அல்-ஜன்னத் மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *