Featured Posts

மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-1)

Article திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வி தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதில் குர்ஆன் இறைவேதம் என்பதையும் பைபிள் மனிதக் கரங்களால் மாசுபட்ட காரணத்தால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். அவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நியாயமான மறுப்பைத் தரவியலாத கிறித்தவ சபை சில குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளது. குர்ஆன் மீது வைக்கப்படும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் ஒரு முஸ்லிமால் நியாயமான முறையில் உறுதியான சான்றுகளுடன் பதிலளிக்க இயலும். இது ஒரு முஸ்லிமுடைய திறமையின் காரணத்தால் அல்ல. மாறாக அது குர்ஆனின் தனித்தன்மை ஆகும்.

அது அகில உலக இறைவனால் அருளப்பட்டது என்பதாலாகும். எனவே விமர்சனங்களை நேரிடுவது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை மிகச் சாதாரணமான விஷயம் ஆகும்.

கிறித்தவ சபை கூறிய குற்றச் சாட்டுகள்!

• ஆரம்பத்தில் அல்லாஹ் குடிக்க அனுமதி அளித்தானாம்!
• குடிப்பது ஷைத்தானின் செயல் என்று ஆரம்பத்தில் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போனதாம்.
• முஸ்லிம்கள் குடித்துக் கொண்டு தொழுகையில் உளறினார்களாம்!
• வெங்காயம் மற்றும் பூண்டின் வாடை மதுவின் வாடையை விடத் தீயதாக இஸ்லாம் கருதுகிறதாம்!
• கானாவில் கல்யாணவிருந்தில் இயேசு வழங்கியதாக பைபிள் கூறும் மது பானம் போதையற்றதாம்!

இவர்கள் கூறியுள்ள இத்தகைய குற்றச் சாட்டுகளில் இவர்களின் அறியாமை எவ்வளவு மலிந்து காணப்படுகிறது என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் ஞானத்தைக் குறித்த அறியாமை!

குடிப்பது ஷைத்தானின் செயல் என்று குர்‍ஆன் 5:90 யில் சொல்லும் அல்லாவிற்கு இந்த செயல் ஷைத்தானின் செயல் என்று ஆரம்பத்தில் தெரியவில்லையா? என்று அல்லாஹ்வின் ஞானத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதலில் இறைவனைக் குறித்து இவர்கள் எந்த கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

இறை வேதத்தின் தன்மைகளுள் முதன்மையானது அது கூறும் இறை கொள்கை குழப்பமற்றதாகவும் முரண்பாடுகளற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். இது இறை வேதத்தை அளக்கும் அளவு கோல் ஆகும். இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடுகளால் மட்டுமே அவனது உயர்ந்த தன்மைகள் குறித்த சரியான கருத்தைத் தர இயலும். காரணம் தனது உயர்ந்த பண்புகள் குறித்து முற்றிலும் அறிந்தவன் இறைவன் மட்டுமே. மனிதக் கற்பனைகளால் அவன் வர்ணிக்கப்படும் போது அவனது தன்மையில் களங்கமும் முரண்பாடுகளும் ஏற்படுவது இயல்பு ஆகும்.

பைபிளையும் குர்ஆனையும் ஒப்பிட்டு இதற்கு முன் இது விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. எல்லாம் அறிந்தவனாகவும், சர்வ வல்லமையும் அடக்கியாளும் தன்மை மிக்கவனாகவும், ஓய்வோ உறக்கமோ தேவைப் படாதவனாகவும் ஞாபக மறதியோ முரண்பட்ட செயல்பாடுகளோ அற்றவனாகவும் தனது உயர்ந்த பண்புகளால் முழுமை பெற்றவனாகவும் இறைவனைத் திருக்குர்ஆன் படம் பிடித்துக் காட்டுகிறது.

இத்தகைய தன்மைகளில் சிலவற்றையேனும் பைபிள் குறிப்பிட்டிருந்தாலும் அவனது உயர்ந்த தன்மைகளுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் ஏராளமான குறிப்புகள் பைபிளில் காணப்படுகின்றன. உண்டு குடித்து ரசித்து ரமித்து மலக்குடலைச் சுமந்து நடக்கக்கூடிய மனிதனின் சாயலை உடையவனாகவும், களைப்பும் ஓய்வும் உடையவனாகவும் ஒளிந்திருக்கும் தன் அடிமையைத் தேடி அலைபவனாகவும் தான் செய்த செயல் குறித்து வருத்தப் படக் கூடியவனாகவும் இறைவனைத் தரம் தாழ்த்தும் வரிகளும் பைபிளில் காணப்படுகின்றன. அதோடு மட்டுமன்றி ஒன்றாக இருந்தவன் மூன்றாக பரிணமித்த போது மனிதனுக்கு ஏற்படக் கூடிய எல்லா உணர்ச்சிகளையும் உடையவனாக அழுபவனாக உதவி தேடக் கூடியவனாக ஏன் இறந்து போகக் கூடியவனாகவும் இறைவனைத் தரம் தாழ்த்தியது பைபிள். இப்படி இறைவனைக் குறித்து சரியான கொள்கை இல்லாதவர்கள் திருக்குர்ஆன் கூறும் இறைவனின் உயர்ந்த பண்புகளை விமர்சனம் செய்துள்ளனர்.

இதனால் முஸ்லிம்களை வழிகெடுத்து விடலாம் என்று கருதியுள்ளனர். அல்லாஹ்வின் அருளால் அவன் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களை உள்ளத்தில் ஏந்தியிருக்கும் முஸ்லிம்களிடம் இவர்களது தந்திரம் செல்லுபடியாகாமல் போய்விடுவது நிச்சயம்.

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க டியாது. எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)

“அல்லாவிற்கு இந்த செயல் ஷைத்தானின் செயல் என்று ஆரம்பத்தில் தெரியவில்லையா?” “பாவம் அல்லா என்ன செய்வார்?” ”அல்லாவிற்குக் கொஞ்சம் ஞானம் வந்து”

போன்ற வரிகளில் அல்லாஹ் என்ற பதத்தைப் பயன்படுத்தி கிண்டல் செய்துள்ளதன் மூலம் இவர்களின் ஆழ்ந்த அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர். வானத்தை நோக்கி உமிழ்ந்த போது எச்சில் தங்கள் முகத்திலேயே திரும்ப விழுந்ததை இவர்கள் அறியவில்லை. அல்லாஹ் என்ற பதம் அகில உலகையும் படைத்து அடக்கியாளும் அந்த வல்லமை மிக்க இறைவனைக் குறிக்கும் அரபிப் பதம் என்பதையும் இன்று கூட அரபு மொழி பேசும் கிறித்தவர்களும் இறைவனைக் குறித்து அல்லாஹ் என்றே கூறுகின்றனர் என்பதையும் இன்று காணப்படும் அரபு பைபிளில் இவர்கள் கடவுள் என்று குறிப்பிடும் இடங்களில் அல்லாஹ் என்றே உள்ளது என்பதையும் அகிலங்களின் இறைவன் அல்லாஹ் என்ற தொடரில் விளக்கியிருந்தோம். இவர்கள் இயேசுவைக் கடவுள் என்றது போல் அல்லா என்பது முஸ்லிம்களுக்குரிய குலதெய்வம் என்று நினைத்து விட்டார்கள் போலும்!

இதோ அரபு பைபிளிலிருந்து சில வரிகள்

1 فِي الْبَدْءِ كَانَ الْكَلِمَةُ، وَالْ كَلِمَةُ كَانَ عِنْدَ اللهِ، وَكَانَ الْكَلِمَةُ اللهَ.

2 هَذَا كَانَ فِي الْبَدْءِ عِنْدَ اللهِ. 1. தொடக்கத்தில் வாக்கு இருந்தது: அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது:2. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.

மேலே காணப்படுவது புதிய ஏற்பாட்டின் யோவான் அத்தியாயத்தின் தொடக்க வரிகள். இவர்கள் தமிழில் கடவுள் என்று குறித்திருப்பதன் அரபிப் பதம் எவ்வாறுள்ளது அல்லாஹ் என்றிருப்பது அடிக்கோடிடப் பட்டுள்ளது.

குர்ஆன் மதுவை எங்ஙனம் தடை செய்தது?

நபித்துவத்துக்கு முன்னர் உள்ள அரேபிய சமுதாயத்தை இருண்ட காலம் அல்லது அறியாமைக் காலம் என்று அழைக்கின்றனர் சரித்திர வல்லுனர்கள். ஒழுக்கக் கேட்டின் அதல பாதாளத்தில் இருந்த சமூகம். மது அருந்துதல் என்பது அன்றாட வாழ்வின் சர்வ சாதாரணமான ஒரு பழக்கமாகவே அவர்களிடம் காணப்பட்டது.

மது அருந்துவதை பெருமைக்குரியதாக கருதினர். மது அருந்துவதை பெருமைப்படுத்தியும் புகழ்ந்தும் பல அரபுக்கவிதைகள் அறியாமைக் காலத்தில் இயற்றப்பட்டதை நாம் பார்க்கிறோம். நான் இறந்துவிட்டால் என்னை திராட்சைச் செடியின் அடியில் புதைத்து விடுங்கள் அதனால் என் எலும்புகளாவது திராட்சை ரசத்தைச் சுவைக்கட்டும் என்று கவிதை வடிவில் உயில் எழுதி வைத்தவர்களும் அவர்களில் உண்டு. இத்தகைய ஒரு சமூகத்தை இறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வழி நடத்தி உன்னத சமுதாயமாக ஆக்கும் மகத்தான பொறுப்பு முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. மதுவில் ஊறித் திளைத்த ஒரு சமூகத்தை 23 வருட காலகட்டத்தில் மது பானத்தை முற்றிலும் விட்டொழித்த உன்னத சமூகமாக மாற்றியமைத்த மகா புரட்சியை ஏற்படுத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இது எங்ஙனம் சாத்தியப்பட்டது? அவர்களுக்கு இறக்கப்பட்ட இறை வழிகாட்டுதல்கள் அடங்கிய குர்ஆன் மூலம் அத்தகைய புரட்சியை ஏற்படுத்தினர்.

ஆம் குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்று ஆகும் அது. ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்து மனிதனை விடுவித்து அவனைப் பரிசுத்தப் படுத்தவே குர்ஆன் அருளப்பட்டது.

“அவன்தான் எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தமாக்கி அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.” (அல்குர்ஆன் 62:2)

மதுபானத்தை குர்ஆன் படிப்படியாகத் தடை செய்த சம்பவத்தை விமர்சித்தபோது குறுமதியாளர்களின் உள்ளத்தில் உள்ள வக்கிரத் தன்மை வெளிப்படுவதைப் பாருங்கள். அவர்கள் கூறுகிறார்கள்

”மதுபானம் குடிக்ககலாமா என்று முகமதுவிடம் முஸ்லிம்கள் கேட்டபோது அல்லா மதுபானத்தை தடை செய்யாமல், மதுபானம் குடிப்பதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. நன்மையை விட தீமைதான் அதிகம் என்று சொன்னாரே தவிர பாருங்கள் முஸ்லிம்களே இனி நீங்கள் குடிக்க வேண்டாம் இது என் கட்டளை என்று சொல்லவில்லை. அதபால் முஸ்லீம்கள் போதை கொண்டார்கள்.”

என்று தங்கள் ஆத்திரத்தை கொட்டியுள்ளனர்.

மதுபானத்தை ஆரம்பத்தில் குர்ஆன் அனுமதித்து விட்டுப் பின்னர் தடை செய்தது எனவே அதில் முரண்பாடு உள்ளது என்று கூற முயன்றுள்ளனர்.

மதுபானத்தைப் பற்றிய மேற்கண்ட வசனத்தில் மதுபானத்தை அருந்துவதைத் தூண்டக்கூடிய ஏதேனும் வாசகம் உள்ளதா என்று சிந்தித்துப் பாருங்கள். மேற்கண்ட வசனம் மட்டுமல்ல மது அருந்துவதை ஊக்குவிக்கக்கூடிய ஒரு வசனம் கூட குர்ஆனில் இல்லை என்பதை இவர்கள் அறிந்து கொள்வார்களாக. மது அருந்ததாத ஒரு சமூகத்துக்கு மத்தியில் மது அருந்துங்கள் தவறில்லை என்று குர்ஆன் கூறவில்லை. மாறாக மதுவில் ஊறித்திளைத்த ஒரு சமூகத்தை படிப்படியாக சீர்திருத்திய ஒரு மகத்தான புரட்சியையே குர்ஆன் செய்தது. குர்ஆன் இறை நூலே என்பதற்கு இது ஒரு மகத்தான சான்றாகும்.

ஒரு நடை முறை உதாரணத்தைப் பார்ப்போம். 1930 ல் அமெரிக்க நாடாளுமன்றம் மதுபானத்தை தடை செய்து சட்டம் இயற்றியது. விளைவு! ஆயிரக்கணக்கான மக்கள் இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டனர். ஏராளமானோர் கொல்லப்படவும் செய்தனர்! மில்லியன் கணக்கில் டாலர்கள் இதற்காக செலவிடப்பட்டன. எனினும் மக்கள் மதுவைக் கைவிடவில்லை. மக்கள் மறைமுகமாக சட்டத்தை மீறி மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இதனால் நோயும் பரவ ஆரம்பித்தது. பிறகு என்ன? வேறு வழியின்றி மதுவிலக்கைக் கைவிட்டது அமெரிக்க அரசாங்கம். ஆம் கிறிஸ்தவம் ஆளும் அமெரிக்கா!

இந்த இடத்தில் தான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறிய ஒரு செய்தியை நினைவு கூறவேண்டும். அன்னை அவர்கள் கூறினார்கள் ”குர்ஆனில் சுவனம் நரகத்தைப் பற்றி எடுத்துக் கூறும் வசனங்களே ஆரம்பத்தில் இறங்கின. பிறகு மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் ஏவல் விலக்கல் பற்றிய சட்டங்களை உள்ளடக்கிய வசனங்கள் இறங்கின. ஒரு வேளை நீங்கள் மது அருந்தாதீர்கள், விபச்சாரம் செய்யாதீர்கள் என்று கூறும் வசனங்கள் முதலில் இறங்கியிருந்தால் நாங்கள் ஒருபோதும் மதுவை விடமாட்டோம், விபச்சாரத்தை விடமாட்டோம் என்று இந்த மக்கள் மறுத்திருப்பர். மேலும் நான் மக்காவில் விளையாடும் சிறுமியாக இருந்த கட்டத்தில்தான் “அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும்.” (54:46) என்றவசனம் இறங்கியது (54:46) (செய்தி சுருக்கப்பட்டுள்ளது) ஆதாரம்: புகாரீ – ஹதீஸ் எண் 4993)

குர்ஆனில் மதுபானம் தடை செய்யப்பட்ட வசனம் இறங்கியபோது, உடனடியாக முஸ்லிம்கள் மதுவைக் கைவிட்டனர். மதுபானம் வைத்திருந்தவர்கள் அதனை அழித்தனர். மதுப் பீப்பாய்கள் உடைக்கப்பட்டன. மில்லியன் கணக்கில் டாலர்களை வாரியிறைத்தும் ஏராளமான உயிர்ப்பலிகள் நிகழ்ந்தும் ஒரு மிகப்பெரிய வல்லரசாகிய அமெரிக்காவால் சாத்தியப்படாத இக்காரியம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எங்ஙனம் சாத்தியப்பட்டது. ஆம் அவர்களுக்கு அருளப்பட்டது இறைவேதம். அதன் மூலம் உறுதியான நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தை வார்த்தெடுத்தார்கள்.

எப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் குர்அன் இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஆராய்ந்தால் விமர்சகர்களின் அறியாமை வெளிச்சத்துக்கு வந்துவிடும். குர்அன் அருளப்படுவதற்கு முன் உள்ள அரேபிய சமூகத்தின் நிலையை மேலே ஆதாரங்களுடன் விளக்கினோம். குடிப்பதை வழக்கமாகக் கொண்ட அந்த சமூகத்தில் முதலில் அவர்களின் இறை நம்பிக்கையை வலுப்படுத்தும் வசனங்கள் இறக்கப்பட்டன. பிறகு மதுவைப் பற்றிய அவர்களது கேள்விக்கு பின்வரும் வசனங்கள் விடையாக அருளப்பட்டன.

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (அல்குர்ஆன் 2:219)

மேற்கண்ட வசனத்தை இறக்கியதன் மூலம் மதுவிலக்கின் முதல் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. மேற்கண்ட வசனம் இறங்கியதும் ஒரு கணிசமான தொகையினர் மதுபானத்தை விட்டு சிறுகச் சிறுக விலகத் தொடங்கினர். ஆனால் குறுமதி கொண்ட விமர்சகர்கள் இதற்கு எதிர் மறையான விளக்கத்தை அளித்துள்ளனர். உதாரணமாக சிகரெட் பிடிப்பதால் உடல் நலத்திற்குக் கேடு என்று சிகரெட் பாக்கெட்டில் எழுதப்பட்டிருக்கும். சிகரெட் பிடிப்பதை ஊக்குவிக்கும் வாசகம் என்று இதனை எவரேனும் கூறுவரா? பாவம் பலனை விடப் பெரியது என்று கூறுவது மதுவை ஊக்குவிப்பதா? அதன் பால் உள்ள நாட்டத்தைக் குறைப்பதா? இன்னும் இவர்களின் உள்ளங்களில் உள்ள நோய் எவ்வளவு அதிகரித்துள்ளது பாருங்கள்.

இறைவன் நாடினால் தொடரும்..

One comment

  1. Mohammed Jalal al-dheen

    Assalamu Alaikum,
    Deer Sir,
    The whole muslim world is appreciates your service.
    My request is, Please make arrangement teach Arabic to us through your web.
    It will be a great opportunity to who is intrest to learn and who does not know arabic.
    wiil you do sir please?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *