Featured Posts

முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கும் மார்க்கத்திற்கும் எதிரான போராட்டம் (தொடர்-1)

– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப்
இந்த நாட்டில் பல்வேறுபட்ட இனவாதக் குழுக்கள் பல்வேறு பெயர்களில் காலத்திற்குக் காலம் வெளியாகி, முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் சுலோகங்கள் ஏந்துவதும் விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வதும் பௌத்த மக்களைத் தூண்டி விடுவதும் என்ற வெறியுடன் வெளிப்படையாகவே இயங்கி வருவதைக் காண்கிறோம்.

அண்மைக் காலமாக வீரவிதஹான, சிஹல உறுமய என்ற பெயரில் பௌத்த மதகுருமார்கள் இயக்கங்களை உருவாக்கி, பகிரங்கமாகவே முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் குறிவைத்துத் தாக்கினார்கள். தற்போது இவர்கள் இந்நாட்டு அரசியலில் பங்காளிக் கட்சிகளாக பரிணமித்திருக்கிறார்கள்.

தற்போது பௌத்த குருமார்களை முழுமையாக உள்ளடக்கிய பொது பலசேனா என்றும் சிங்கள ராவய என்றும் பெயர்களில் இயங்கி நேரடியாகவே முஸ்லிம்களைத் தாக்குகின்ற பணியில் இறங்கியுள்ளார்கள்.

இவர்களது குறிக்கோள் முஸ்லிம்களை விரட்டியடிப்பது அல்லது அவர்களது உரிமைகளை இல்லாதொழிக்கச் செய்வது. பெரும்பான்மை சிங்கள சமூகத்திடம் ‘கையேந்திப் பிழைக்கும் சமூகமாக’ மாற்றுவது என்பதாகும். சில இடங்களில் ‘சவூதி நாட்டுக்குச் சென்று விடுங்கள்’ என்று இவர்கள் தூற்றியதையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

30 வருடகால புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்த காலத்தில் ஓரளவு அடங்கியிருந்தார்கள். யுத்தம் முடிந்த பின் முஸ்லிம்களையும் கருவருக்க வேண்டும் என்ற ரீதியில் வீதிக்கு வந்துள்ளார்கள்.

சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும். புன்னிய பூமியிலும் முஸ்லிம்களுடைய பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டிருப்பதனால், உடனே அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரி தேரர்கள் ஊர்வளமாக வந்து -மதக் கிரிகைகளுடன்- பள்ளிவாசல்களை அடித்து உடைத்தார்கள். அனுராதபுரத்தில் தர்கா மற்றும் பள்ளிவாசலை உடைக்கும்போது பொலிஸார் கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, குண்டர்களை அடித்துத் துரத்தவில்லை.

அதன்பின் தம்புள்ளை பள்ளிவாசலுக்குள் அத்துமீறி பள்ளியை அகற்றும் காரியத்தில் இறங்கினார்கள். இதன் தொடராகவே பள்ளிவாசலுக்கு எதிரான இவர்களது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக முஸ்லிம்களுடைய வியாபாரங்களையும் வியாபாரஸ்தலங்களையும் சிங்களவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி, ஊர்வலங்கள் நடத்தி, குயஉநடிழழம மற்றும் இணையத்தளங்கள் ஊடாக வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

பதுளை, எபிளிபிடி. குளியாபிடி, மஹரகம போன்ற பகுதிகளில் முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் வியாபார ஸ்தலங்களுக்கு எதிராக நேரடியாகச் சென்று கூட்டம் போட்டு அச்சுறுத்தல்கள் விடுத்தும் அடித்து காயப்படுத்தியும் அட்டகாசங்கள் புரிந்தார்கள்.

முஸ்லிம்களுடைய கடைகளை புறக்கணிப்பது மட்டுமன்றி, முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஏற்படுத்தி விட வேண்டம் என்பதற்காக பதுள்ளையில் முஸ்லிம் கடையொன்றுக்குச் சென்று கையுறைகளை வாங்கி வந்த, சிங்களவர் ஒருவர் சற்று நேரத்தில் ஒரு குழுவுடன் வந்து அக்கையுறைகளை திருப்பிக் கொடுத்துவிட்டு, இதில் புத்தரை இழிவுபடுத்தும் விதமாக படம் வரையப்பட்டுள்ளது என விஷமத்தனமாகப் பிரச்சாரம் செய்து சிங்களவர்களை கிளர்ந்தெழச் செய்தார்.

இதன் மூலம் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு, பெரும் கலவரத்தை உண்டுபண்ண முனைந்தனர். பொலிஸ் விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்கு என்று போய் அது பொய்யான சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் அவ்வாறான கையுறைகளை அக்கடையில் விற்கப்படுவதில்லை என்றும் வெளியிலிருந்து கொண்டு வந்து (அந்த சிங்களவரால்) போடப்பட்டது என்றும் நிரூபிக்கப்பட்ட பின், பிரச்சினை ஓரளவு தணிந்தது. எம்பிலிப்பிட்டி பகுதிக்குச் சென்று முஸ்லிம் வியாபாரிகளை அடித்துத் துரத்திவிட்டு ‘தம்பிலா இங்கு வரக் கூடாது’ என கண்டித்தார்கள்.

தேரர் ஒருவர் முஸ்லிம் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் செல்ல முனையும்போது குறித்த பொருட்களுக்கான பணத்தைக் கேட்டபோது ‘தாம் பணத்தைத் தந்துவிட்டதாகக் கூறி, தேரர் அடம்பிடித்துள்ளார். பிறகு கடை உரிமையாளர் நிலவரத்தைப் புரிந்துகொண்டு தேரரை உட்கார வைத்து சுமுகமாக பேசிவிட்டு. ‘மதகுருமார் பொய் சொல்ல மாட்டார்கள், அவர் பணம் தந்தை நீங்கள் மறந்திருக்கலாம் என ஊழியருக்குக் கூறி விட்டு சம்பந்தப்பட்ட தேரரை அனுப்பி வைத்தார் கடை உரிமையாளர்.

தேரர் வெளியேறிய பின் அவதானித்தபோது சுமார் 15 பேர் ஏற்கனவே கடைக்கு வெளியில் காத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. கடை உரிமையாளரின் புத்திசாதுர்யமான செயலினால் பெரியதோர் அழிவு தடுக்கப்பட்டது.

அகிம்சை, அன்பு, கருணை என்ற மேலான கொள்கையை போதிப்பதாகக் கூறும் இவர்கள், இப்படி நடக்கிறார்களே என்பது ஆச்சரியமாக இருக்கிறது. முஸ்லிம்கள் குறித்து பொய்யான செய்திகளைப் புனைந்து இவர்கள் நடாத்தும் ஒவ்வொரு செயற்பாடும் அச்சுறுத்தல் மிகுந்ததாகவே உள்ளது.

குளியாபிடியில் நடாத்தப்பட்ட ஊர்வலத்தின்போது ‘ஹலால் லேபல் குத்தப்பட்ட பண்டங்களை சிங்களவர்கள் தவிர்க்க வேண்டும் என கோஷம் எழுப்பி சுலோகங்களுடன் செல்லும்போது வெள்ளை நிற ‘ஜுப்பா அணிவிக்கப்பட்ட பொம்மைக்கு அல்லாஹ் என்று பெயரிட்டு, இழுத்துக் கொண்டு போய் தீயிட்டுக் கொழுத்தினர். சகிப்புத் தன்மை அடுத்த மதத்தினை மதித்தல் என்ற பண்பாடின்றி, கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள்.

இந்த நாட்டின் சட்டங்களை மதித்து, அதற்கு ஏற்ற வகையிலே முஸ்லிம்கள் வியாபார ஸ்தலங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் இந்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம், வாழலாம், தொழிகளில் ஈடுபடலாம் என்ற சட்ட ரீதியான உரிமையுடனே செயற்படுகிறார்கள். ஆனால் இந்த இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களுடைய இருப்பைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள். எங்கே வாழ வேண்டும், எங்கே பள்ளி கட்ட வேண்டும், எங்கே வியாபாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

அண்மைக் காலமாக முஸ்லிம்களுடைய வியாபாரங்களில் படிப்படியாக வீழ்ச்சி ஏற்படத் துவங்கியது என்பதை யாரும் நன்கு அறிவர். பல கெடுபிடிகளுக்கு மத்தியில்தான் முஸ்லிம்கள் தங்களது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை செய்து வருகிறார்கள்.

முஸ்லிம்களுடைய வியாபாரங்களுடன் எவ்வகையான தொடர்புகளும் சிங்களவர்கள் வைக்கக் கூடாது. முஸ்லிம் கடைகளில் எப்பொருளும் வாங்கக் கூடாது என்ற இவர்களுடைய இனவாத, மதவாத, சிந்தனை இன்று நேற்று தொடங்கியதல்ல. 1915 ம் ஆண்டுக்கு முன்பே துவங்கியது. அன்றிருந்த இனவாத சக்திகள் தூவிட்ட நச்சுக் கருத்துக்களே இன்றுவரை, இந்த நிமிடம் வரை முன்னெடுக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

இது பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *