– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப்
இலங்கை முஸ்லிம்களுடைய மார்க்க மற்றும் பொருளாதாரத்திற்கு எதிராக பகிரங்கமாக பேசியவரும் பிரச்சாரம் செய்தவரும் பௌத்த மக்களின் அபிமானத்தைப் பெற்றவருமான அனாகரிக தர்மபால என்பவராவார்.
இவர் சிங்கள் மக்களைத் தூண்டும் விதத்தில் முஸ்லிம்கள் குறித்து எழுதிய கடிதங்கள் “அநகாரிக தர்மபாலா லிபி” எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இதன் முதன் பதிப்பு 1965ஆண்டிலும் பிறகு 1991ஆண்டிலும் வெளியிடப்பட்டது.
முஸ்லிம்களுடைய வியாபார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டி விட்டதன் விளைவாகவே 1915ம் ஆண்டு கலவரம் ஏற்பட்டு, முழு இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அத்தகைய கலவரம் ஒன்றையே இன்றைய இனவாதிகள் எதிர்பார்ப்பதாக வெளிப்படையாகவே தென்படுகிறது.
சகோதரர் எம். ஸமீம் அவர்கள் எழுதிய “சிறுபான் சமூகத்தின் பிரச்சினைகள் எனும் நூலில் 1915ம் அண்டு நடைபெற்ற கலவரத்தின் பின்னணியை மிகத் தெளிவாக பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“அந்நியர்கள் இந்நாட்டின் மூலதனத்தைச் சுரண்டி தம் நாட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந் நாட்டின் நிலத்தின் புத்திரர்கள் எங்கே செல்வார்கள்? பிற நாட்டிலிருந்து வந்த அந்நியர்களுக்குச் செல்வதற்குப் பல இடங்கள் உண்டு. ஆனால் சிங்கள மக்கள் இந்நாட்டைத் தவிர வேறு எங்கே செல்ல முடியும்? பூமியின் புதல்வர்கள் அல்லற் படும்போது அந்நியர்கள் இந்நாட்டின் வளத்தைச் சுரண்டி இன்பமுறுவது எவ்வகையில் நியாயமானது? ஏழைச் சிங்கள மக்களின் பாரம்பரிய நாட்டின் சொத்துக்களை இவ்வந்நியர்கள் அபகரிக்கிறார்கள்” என்று 1906ம் ஆண்டில் அநகாரிக தர்மபால பின்வருமாறு எழுதினார்.
அநகாரிக தர்மபாலாவின் தாக்குதல் கள் முஸ்லிம் சமூகத்தவரையே நோக்கிப் பாய்ந்தன. மீண்டும் 1915ம் ஆண்டில் அவர் எழுதிய கட்டுரைகள் முஸ்லிம்களை நேரடியாகவே தாக்கின.
“முகம்மதியர்கள் அந்நிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஷைலொக்கைப் போன்ற யூதர்களின் முறைகளைக் கையாண்டு செல்வந்தரானார்கள். (ஷைலொக் என்பவன் ஷேக்ஸ்பியரின் “வெனிஸ் நாட்டு வர்த்தகர்” என்ற நாடகத்தில் வரும் குரோத -நயவஞ்சகம் படைத்த ஒரு கதாபாத்திரம்)
2358ம் வருடங்களாக இரத்த ஆறு ஓடி அந்நியர்களின் ஆட்சியிலிருந்து மீட்டெடுத்த இந்நாட்டின் புதல்வர்களாக சிங்களவரை பிரித்தானியர்கள் போக்கிரிகள் என்றழைக்கிறார்கள். ஆனால் தென்னிந்திய முஸ்லிம்களான அந்நியர்கள், சிங்கள கிராம மக்களின் ஏழ்மையையும் அவர்களுக்கு வர்த்தகத்தில் அனுபவமில்லாததையும் பயன்படுத்தி, தம் வாழ்வை வளம்படுத்திக் கொள்ளும் அதேவேளையில் இந்நாட்டின் புத்திரர்கள் வறுமையில் வாடுகிறார்கள்” என்று எழுதினார்.
ஏனைய எழுத்தாளர்களும் இவ்வினவாதக் கருத்தை வலியுறுத்தினார்கள். “சிங்கள சாதி” என்ற பத்திரிகையில் நாவலாசிரியர் பியதாஸ சிறிசேன “சம்மான்கார முஸ்லிமுடனோ கொச்சின் தேசத்தவரு டனோ, வேறு எந்த அந்நியருடனோ சிங்களவர் எவ்வித வர்த்தகத் தொடர்பும் வைத்திருக்கக் கூடாது” என்று எழுதினார்.
“லக்மினி” என்ற சிங்கள நாளிதழின் ஆசிரியர் “சம்மான்கார முஸ்லிம்களைப் பற்றி எழுதும்போது இச்சபிக்கப்பட்ட இனத்தை இந்நாட்டை விட்டே விரட்டுவதற்கு ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் “தினமின” என்ற பத்திரிகையின் ஆசிரியர் “எங்களின் பரம விரோதிகளான முஸ்லிம்கள்” என்றும் எழுதினர்.
இவ்வினவாத ஆசிரியர்களின் கருத்துக்களினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் இன உணர்ச்சியின் பகைப்புலனில் தான் 1915ம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலகம் ஏற்பட்டது. நாட்டின் பல பாகங்களுக்கும் பரவிய இக்கலகம் மத அடிப்படையில் தோன்றியது என்று மேலோட்டமாகத் தென்பட்டாலும், உண்மையில் இதன் அடித்தளத்தில் அரசியல், பொருளாதார, வேறுபாடுகளே இக்கலகத்துக்குக் காரணம் என்பதை நாம் உணரலாம்.
இக்கலகம் நடந்து ஒரு மாத காலத்திற்குப் பிறகு அநகாரிக தர்மபால பின்வருமாறு எழுதினார்.
“பிரித்தானியர்களுக்கு ஜெர்மனியர்கள் எப்படி எதிரியோ சிங்களவர்களுக்கு முகம்மதியர்கள் எதிரி. இவர்கள் மதம், மொழி, இனம் ஆகியவைகளினால் சிங்களவர்களிலும் வேறுபட்டவர்கள். அந்நிய நாட்டவர்கள். பௌத்த மதம் இல்லையென்றால், சிங்களவர்களுக்கு சாவே மேலானது.
பிரித்தானிய அரசாங்கம் சிங்களவரைச் சுடலாம். தூக்கிலிடலாம், அங்கவினப் படுத்தலாம், சிறைப்பிடிக்கலாம்… ஆனால் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் என்றைக்கும் இரத்த வெறுப்பு இருந்து கொண்டுதான் இருக்கும் என்றார்.”
இத்தகைய வார்த்தை பிரயோகங்களே இன்று பௌத்தசிறார்களின் உள்ளங்களில் விதைக்கப்படுகிறது.
சமாதானத்தை விரும்பும் சிங்கள அப்பாவி மக்கள் இவ்வந்நியர்களின் ஏளனத்தைப் பொறுக்க மாட்டார்கள். முஸ்லிம்களுக்கெதிராக இந்நாடே கொதித்தெழுந்தது. சிங்கள மக்கள் கொதித்தெழுவதற்குக் காரணம் மதமும் பொருளாதாரமுமே” என்று எழுதி, முஸ்லிம்களுக்கெதிரான இனத் துவேஷத்தைக் கிளப்பி விட்டார் அநாகரிக தர்மபால.
சகோதரர்களே இந்நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியும் இதே நோக்கத்தைக் கொண்டதாகவே இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே இனவாத தீயை மூட்டி, அதில் குளிர் காய்ந்து காய் நகர்த்தும் தீய மனிதர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பது போலவே அமைதி மற்றும் சமாதானத்தை விரும்பும் நல்ல உள்ளம் படைத்த சிங்கள மக்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் எங்களுக்காகக் குரல் கொடுத்த சிங்கள் பௌத்த அமைச்சர்களை மதிக்க வேண்டும்.