-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்-
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பூதாகரமாக உருவெடுத்து நாட்டின் சுபீட்சத்தையும் இளம் சிறார்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கி விடுமோ என்ற அளவுக்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தினசரி பத்திரிகையில் ஒரு செய்தி இடம்பிடித்திருப்பது தவிர்க்க முடியாததாக இன்று மாறியுள்ளது. இது எந்தளவு இப்பிரச்சினை எம் சமூகத்தில் கோலோச்சியுள்ளது என்பதை காட்டுவதற்கான எடுகோளாகும்.
அண்மையில் எமது நாட்டின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைச் சிறுமி ஒருவர் பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிர்நீத்த சம்பவம் நாமனைவரும் அறிந்ததே.
குடும்ப சமூக, சமுதாய ரீதியாக பலவிதமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் நிகழ்வதுடன் வெகுசன தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அதிக சீரழிவுகள் ஏற்படுகின்றன.
இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சமூகப் பிரச்சினைதான் சிறுவர் துஷ்பிரயோகம். பொதுவாக சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளடங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். என்றாலும் சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு நோக்கப்படுகின்றது. வயதில் முதிர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அன்போடு அரவணைப்பது போல் தொட்டுத் தழுவித் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வது போன்ற இழி செயல்களை இது குறிக்கம்.
மனித உரிமைகள் உலகளவில் பேசப்பட்ட காலப் பகுதியில்தான் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 1924 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஒன்றுகூடிய சபை சிறுவர் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து கோவை ஒன்றை வெளியிட்டது. எனினும் சட்டரீதியான அந்தஷ்தை நடைமுறையில் அது சந்திக்காது தோல்வி கண்டது. தவிர 1948 ஆம் ஆண்டு ஐ.நா சபையால் வெளியிடப்பட்ட அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தில் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவர் உரிமைகள் உலகளவில் சட்டரீதியான அமைப்பை பெற்றுக் கொண்டது ஆக 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில்தான சிறுவர் உரிமைகள் உலகளவில் பேசப்பட்டதும் பிற்பட்ட காலப்பகுதியில்தான் அவை சட்டரீதியான அமைப்பை பெற்றமையும் என்பதை நோக்கலாம்.
இக்காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் என்பதனூடாக கருதப்பட்டதெல்லாம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் அவர்களின் கல்வி சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்தல் உள்ளிட்ட விடங்கள் மாத்திரம்தான் ஆச்சரியம் யாதெனில் மனிதன் விஞ்ஞான வளர்ச்சி அறிவியல் முன்னேற்றம் என பெரிதாக பேசிக்கொள்கின்ற இவ் நூற்றாண்டிலேதான் ஒழுக்க விழுமியங்களை பண்பாட்டு பெறுமானங்களை நாசமாக்கக் கூடிய சாபக்கேடுகளை நாம் அனுபவித்து வருகிறோம். அவற்றுள் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதான இடத்தை பிடித்திருக்கிறது.
சிறுவர் துஷ்பிரயோகம் யாரால் அதிகம் நிகழ்கிறது?
01. குடும்ப சூழல்
குடும்ப சூழலில் நெருங்கிய உறவினர்களினாலேயே அதிகமான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றமை அண்மைக்கால ஆய்வுகள் நிதிமன்றங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் என்பன மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர்கள் என்று வரும்போது தந்தை மாமா பாட்டன் சாச்சா (சித்தப்பபா) சகோதரர் மச்சான் (மைத்துனர்) போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் தவிர அயலவர்கள் குடும்ப நண்பர்கள் என்போரும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் வேலியே பயிரை மேயும் சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றமை வேதனை தரும் விடயமாகும்.
02. பாடசாலைச் சூழல்
பாடசாலைச் சூழலில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறும் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. மாணவர்கனளின் அப்பாவித்தனம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஆசிரியர்கள் நரித்தனமாக அறிந்து பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இங்கு அதிபர் ஆசிரியர்-ஆசிரியைகள் உட்பட கல்விசாரா ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் என்போரின் மூலமே பாடசாலைச் சூழலில் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நிகழ்கின்றன. ஒப்பீட்டளவில் குடும்ப சூழலை விட இங்கு துஷ்பிரயோகங்கள் குறைவாக இடம்பெறுவதுடன் அவை வெளிக்கொணரப்படும் சந்தர்ப்பஙகள் அதிகமாக உள்ளன.
ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு வன்முறையினால் 1.5 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 85 வீதமான சிறுவர்கள் உலகில் உளரீதியான தண்டனைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர். உலகில் 150 மில்லியன் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பயங்கரவாதத்தினாலும் ஆயுத மோதலினாலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது. கவலைக்குறிய விடயம் யாதெனில் உலகளவில் அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் நிகழும் நாடுகள் பட்டியலுல் இலங்கை முதன்மை இடத்தை பிடித்திருப்பதாகும்.
இலங்கையில் மூவாயிரம் சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு சுற்றலா பயணிகளினாலேயே அதிகளவான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் இதற்கு எம் நாட்டவர்களே தரகர்களாகச் செயற்பட்டு வருவதாகவும் சிறுவர் பாலியல் ஒழிப்புச் செயற்றிட்டப் பணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, கடந்த கால இலங்கையின் யுத்த நிலை, பெற்றோர் வெளிநாடு செல்லுதல், வறுமை காரணமாகப் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துதல், பிச்சையெடுக்க வைத்தல், பெற்றோர் இருந்தும் தனிமைக்குத் தள்ளப்பட்ட பாதிப்பு, சுற்றுப்புற சூழலின் கூடாத சகவாசம். அத்தோடு சிறுவர் உரிமைகள் சுரண்டப்பட்டு பாதையோரத்துப் பரிதாபங்களும் பாதகங்களும் சீரழிவுக்கு வழிவகுக்கின்றன. பெரும்பாலான சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகி குற்றவாளியாக்கப்படுவது உறவினர்கள் மற்றும் அயலவர்களாலுமே என்பது பரிதாபகரமான நிலையாகும்.
உண்மையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறிப்பாக எமது சமூகத்தில் அதிகரிப்பதற்கு பின்வரும் காரணங்களை குறிப்பிடலாம்
- அறிவீனம்
- உறவு முறை பேணப்படாமை (மஹ்ரமிய்யத்-அஜ்னபிய்யத்)
- பெற்றோரின் போதைப்பாவனை
- குடும்ப வன்முறை
- பெற்றோரின் வெளிநாட்டுப்பயணம்
- தவறான சகவாசம்
- தனிமை
- தாய் தந்தை பிரிவு (மரணம் விவகாரத்து)
- அன்பு கிடையாமை
- போர் சூழல்
எது எப்படியாயினும் இளம் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு அவர்களின் உரிமைகள் தொடர்பாக தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மத வழிபாடுகளில் அதிக ஈடுபாடும் நல்ல பண்புகள் சுய கட்டுப்பாடு போன்ற விடயங்களை எடுத்தியம்ப வேண்டும். எல்லாவற்றையும் விட சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.அரசியல், பணபலம், சாட்சிகள் இன்மை காரணமாகவும் குற்றவாளிக் கூண்டு வெறுமையாகக் காணப்படுகிறது. அத்தோடு குடும்ப பரம்பரை. கௌரவம் அந்தஸ்து காரணமாகவும் பொலிஸ் நிலையத்துக்கு வராத சம்பவங்கள் பல ஆயிரம் இருக்கின்றன.
மேலும், சிறுவர்களைப் பாதுகாப்பவர்களும் பராமரிப்பவர்களும் வேலியே பயிரை மேயும் கதையாகிவிடக் கூடாது. சிறுவர் துஷ்பிரயோக விடயத்தில் அனைத்து இன மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இம்சைப்படுத்தும் நபர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். எது எப்படியாயினும் தண்டனையில் யாருக்கும் பாரபட்சம் காட்டக் கூடாது.
தண்டனைகள் மிக மிகக் கடுமையாக்கப்பட வேண்டும்.குற்றங்கள் களைவதற்கு முதலில் வீட்டிலிருந்தே நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும். நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்க வேண்டுமானால் பொது மக்கள், பொலிஸ், நீதித்துறை ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் பயனிக்க வேண்டும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ளவது அவசியம். இல்லையெனில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் ஆசியாவின் ஆச்சரியமாக மாறும் என்பதில் ஆச்சரியமில்லை.