நபி(ச) அவர்கள் மதீனா வருவதற்கு முன்னர் மதீனா மக்கள் அவ்ஸ்-கஸ்ரஜ் என்ற இரு கோத்திரமாகப் பிரிந்திருந்தனர். அவ்ஸ் கோத்திரத்தின் தலைவராக ‘ஸஃத் இப்னு முஆத்’, ஹஸ்ரஜ் கோத்திரத் தலைவராக ‘ஸஃத் இப்னு உபாதா’ இருந்தார்கள். நபி(ச) அவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து முடிவெடுக்கும் போது இவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள். நபி(ச) அவர்கள் மரணித்த போது இவ்விருவரில் ‘ஸஃத் இப்னு உப்பாதா’ மட்டுமே உயிருடன் இருந்தார்கள். எனவே, நபி(ச) அவர்கள் மதீனா வர முன்னர் தலைவராக இருந்தவர் என்ற அடிப்படையில் அவரைத் தலைவராகத் தெரிவு செய்ய அந்த மக்கள் முற்பட்டனர்.
இது பொதுவான மனித இயல்புதான். மதீனா மண்ணுக்கு மதீனாவைச் சேர்ந்த ஒருவர்தான் தலைவராக வர வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
இதற்கு மக்காவாசிகள் உடன்படாவிட்டால் அன்ஸாரிகளில் ஒரு தலைவர் முஹாஜிர்களில் ஒரு தலைவர் என்று முடிவெடுக்கவும் அவர்கள் விரும்பினர். ஆனால், அபூபக்கர்(வ) அவர்கள் அவர்களுக்கு நிலைமையை விளக்கிய போது ஏகமனதாக அபூபக்கர்(வ) அவர்கள் கலீபாவாகத் தெரிவு செய்யப்பட்டார். அவரின் கிலாஃபத்தின் போது அன்ஸார்கள் அவருக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு ஒத்துழைத்தனர். “அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்? எனக் காத்துக் கொண்டிருந்தவர்களாக இருந்தால் தமது நீண்டநாள் கனவை இப்படி இலகுவாக விட்டுக் கொடுத்திருப்பார்களா?
அபூபக்கர்(வ) அவர்களின் விளக்கத்தின் பின்னர் முஹாஜிர்களே தலைவர்களாக வர வேண்டும் என்பதை அவர்கள் விளங்கிய பின்னர் மீண்டும் ஒரு முறை நம்மில் ஒருவர் தலைவராக வரவேண்டும் என அவர்கள் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை.
அபூபக்கர்(ச) அவர்கள் மக்காவைச் சேர்ந்தவர்கள்:
உமர்(வ) அவர்களும் மக்காவைச் சேர்ந்தவர்கள். இவ்வாறே உஸ்மான்(வ), அலி(வ), ஹஸன்(வ), முஆவியா(வ), ஸைத்(வ) எனத் தொடராக வந்த அத்தனை கலீபாக்களும் மக்காவைச் சேர்ந்தவர்களாவர். மதீனாவைச் சேர்ந்த எவரும் கலீபாவாக வந்ததே இல்லை. இந்தளவுக்குப் பதவியை விட்டுக் கொடுத்த அந்தத் தூய சமூகத்தைத்தான் அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும் என்ற மாதிரி பதவிக்காகக் காத்துக் கொண்டிருந்த சமூகமாக அன்ஸாரித் தோழர்களைக் கயவர் கூட்டம் சித்தரிக்கின்றது. இதையும் குர்ஆன், ஸுன்னா பேசும் ஒரு கூட்டம் ஏற்றுக் கொள்கின்றது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
நபி(ச) அவர்களின் மரணத்தின் பின்னர் ‘ஸகீபா பனூ ஸாஇதா’வில் நடந்தது பற்றி ஸஹீஹ் புஹாரியில் இப்படி வருகின்றது.
‘அப்போது, அபூ பக்கர்(வ) அல்லாஹ் வைப் புகழ்ந்து அவனைப் போன்றிவிட்டு, ‘முஹம்மத்(ச) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத்(ச) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்’ அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே’ என்னும் (திருக்குர்ஆன் 39:30 ஆம்) இறை வசனத்தையும், ‘முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்’ என்னும் (திருக்குர்ஆன் 03:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அன்சாரிகள் (தம்) ‘பனூ சாஇதா’ சமுதாயக் கூடத்தில் ஒன்று கூடி (தம் தலைவர்) ஸஅத் இப்னு உபாதா(வ) அவர்களிடம், ‘எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்’ என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)’ என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அபூ பக்கர், உமர் இப்னு கத்தாப், அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(வ) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர்(வ) பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூ பக்கர்(வ) மௌனமாக இருக்கச் சொல்லிவிட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூ பக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். எனவேதான் நான் பேச முயன்றேன்’ என்று கூறி வந்தார்கள்.
பிறகு, அபூ பக்கர்(வ) பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், ‘(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்’ என்று கூறினார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் இப்னு முன்திர்(வ), ‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்கர்(ரலி), ‘இல்லை நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும் ஆவர். எனவே, உமர் இப்னு கத்தாப், அல்லது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது உமர்(வ), ‘இல்லை’ நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்’ என்று சொல்லிவிட்டு, அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூ பக்கர்(வ) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர், ‘ஸஅத் இப்னு உபாதா அவர்களை(ப் புறக்கணித்து அவரின் கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள்’ என்று கூறினார். அதற்கு உமர்(வ), ‘அல்லாஹ் தான் அவரைக் கொன்றுவிட்டான்’ என்று பதில் கூறினார்கள்.’ (புஹாரி: 3668)
இதே செய்தி சற்றுக் கூடுதல், குறைவுகளுடன் பல ஹதீஸ் கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ‘அபூ மிஹ்னப்’ எனும் பொய்யனான ஷிஆக் கொள்கையுடையவனால் அறிவிப்புச் செய்யப்பட்ட செய்திதான் மக்கள் மத்தியில் பெரிதும் பரவியுள்ளது.
இமாம் தபரி இவரது செய்தியை அறிவிப்புச் செய்துள்ளார். அதில், அன்ஸாரிகள்தான் தலைவர்களாக வர வேண்டும். அதை மறுப்பவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என ‘ஹூபாப் இப்னுல் முன்திர்(வ)’ அவர்கள் பேசியதாகவும் அபூபக்கர்(வ) அவர்களுக்கு பைஅத் செய்யப்பட்ட பேது ஸஃத் இப்னு உப்பாதா(வ) அவர்கள் அதை ஏற்காமல் கோபித்துக் கொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர் ஜமாஅத்துத் தொழுகையிலும், ஜும்ஆவிலும் கலந்து கொள்ளவில்லை என்றும் நான் என் குடும்பத்தையும் என்னைப் பின்பற்றுபவர்களையும் ஒன்று திரட்டி உங்களுடன் போரிடுவேன் என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
‘உஸைத் இப்னு ஹுழைர்’ என்ற அன்ஸாரித் தோழர்தான் அபூபக்கர்(வ) அவர்கள் தலைவராக வர வேண்டும் என்று கூறி பைஅத்தும் செய்தார். இவர் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஸஃத் இப்னு உப்பாதா கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். தமது எதிர்க் கோத்திரத்தைச் சேர்ந்தவர் தலைவராக வருவதை விட மக்காவாசி தலைவராக வருவதே மேல் என்று கருதித்தான் அவர் அபூபக்கர்(வ) அவர்களுக்கு பைஅத் செய்ததாகவும் அபூ மிஹ்னப் எனும் ஷிஆ இட்டுக்கட்டியுள்ளான்.
இந்த இட்டுக்கட்டுக்கள் அனைத்தையும் சேர்த்துத்தான் அன்ஸாரிகள் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள். சகோதரர் Pது ஸஹாபாக்களை விமர்சனம் செய்யும் அநேக விடயங்களுக்கு இந்த அபூ மிஹ்னப் என்ற ஷிஆவாசியால் இட்டுக்கட்டப்பட்ட வரலாறுகளே காரணமாக அமைந்துள்ளன. ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல் அம்ரிப்னுல் ஆஸ்(வ), உஸ்மான்(வ) பற்றிய விமர்சனங்களுக்கும் இவனால் இட்டுக் கட்டப்பட்ட சம்பவங்களே அடிப்படையாக அமைந்துள்ளன.
நபித்தோழர்கள் பற்றிய நல்லெண்ணத்தைக் குறைத்து அவர்களை மோசமான மனிதர்களாகச் சித்தரிப்பது வழிகேடர்களின் வழிமுறையாக இருந்தது. மார்க்கத்தில் புதிய கொள்கைகளை நுழைக்க விரும்புபவர்கள் நபித்தோழர்களைக் காயப்படுத்தியே வந்தனர். இஸ்லாமிய உம்மத்துக்கான பாதுகாப்பு அரணாக இருக்கும் ஸஹாபாக்களை தாக்காமல் தமது தரங்கெட்ட கொள்கைகளுக்கு இஸ்லாமியச் சாயம் பூச முடியாது என்பதனாலேயே இப்படிச் செய்தனர்.
நபித்தோழர்களைப் பண்பாடு குறைந்தவர்களாகவும் தெளிவற்றவர்களாகவும் மார்க்க விளக்கமற்றவர்களாகவும் சித்தரித்துவிட்டால் நபித்தோழர் காலத்தில் இல்லாத புதுப் புதுக் கொள்கைகளை உருவாக்கிவிட்டு இது நபித்தோழர் காலத்தில் இருக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் மார்க்கத்தைப் பற்றிச் சரியாக ஆராயவில்லை; ஆராயும் அறிவும் அவர்களிடம் இருக்கவில்லை. நாம்தான் சரியாக ஆய்வு செய்து இதைக் கண்டுபிடித்துள்ளோம் எனக் கதை விட இந்த வழிமுறை இவர்களுக்கு அவசியமாகின்றது.
நபி(ச) அவர்களால் உருவாக்கப்பட்ட சமூகத்தை விட எம்மால் உருவாக்கப்பட்ட சமூகம் கொள்கையில் உறுதிதாகவுள்ளதாக, மார்க்கத்தில் தெளிவுள்ளதாக, பட்டம் பதவிகளுக்கு ஆசைப்படாததாக, உலக இன்பங்களுக்கு மயங்கிக் கொள்கையை விட்டுக் கொடுக்காததாக இருப்பதாக இவர்கள் தம்பட்டம் அடிப்பதன் மூலம் நபி(ச) அவர்களையும் ஸஹாபாக்களையும் விட தம்மை உயர்த்திக் கொள்ளவும் முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் விரும்புகின்றனர் என்பதுதான் அர்த்தமாகும்.
இத்தகைய வழிகெட்ட சிந்தனையுடையவர்களிடமிருந்து சமூகத்தைக் காப்பது கட்டாயக் கடமையாகும்.