– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
”எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் தந்தருள்வாயாக! மேலும், நரக வேதனையை விட்டும் எம்மைப் பாதுகாப்பாயாக!’ என்று பிரார்த்திப்போரும் அவர்களில் உள்ளனர்.’ (2:201)
ஆன்மீகம் போதித்த பலர் உலக வாழ்விற்கான வழிகாட்டலில் தவறுவிட்டனர். உலக வாழ்வு பற்றிப் பேசிய பலரும் ஆன்மீகத்தை மறந்தனர். இஸ்லாம் ஆன்மீகத்தையும் லௌகீகத்தையும் இணைத்து வழிகாட்டும் மார்க்கமாகும்.
இந்த வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது வர்த்தகம் செய்வதை இஸ்லாம் அனுமதித்தது. அது மட்டுமன்றி ‘யா அல்லாஹ்! இந்த உலகத்திலேயே எல்லாவற்றையும் தா!’ எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர் எனக் கூறிவிட்டு உண்மையான முஸ்லிம்கள் ‘உலக வாழ்வு, மறுமை வாழ்வு இரண்டிலும் நல்லதைத் தா!’ என்றே பிரார்த்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதுடன்,
‘(இவ்வாறு பிரார்த்திக்கும்) அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றிலிருந்து நற்பேறுண்டு. அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிரமானவன்.’ (2:202)
என்று வாழ்த்துக் கூறப்படுகின்றது.
இந்த வகையில், முஸ்லிம்கள் தமது உலக வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் ஆகுமான வழிகள் மூலம் முயற்சிக்க வேண்டும். மறுமையை மறந்துவிடக் கூடாது; மறுமைக்காக முயற்சிக்கின்றேன் என்ற பேரில் இம்மையை மறந்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்துச் செல்லும் சீரிய வழியில் பயணிக்க வேண்டும்.