Featured Posts

இஸ்லாம் அழைக்கிறது – 01: கடவுள் ஒருவனே!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.

சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர்.

இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளையும் அடியோடு மறுக்கின்றது.

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் அதைப் பகுத்தறிவு வாதம் என்று கூறுகின்றனர். இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் தானாகவோ, தற்செயலாகவோ உருவானது என்பது எப்படி பகுத்தறிவாகும்? படைப்பினங்கள் இருப்பதே படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான பலமான ஆதாரமாகும்.

நுணுக்கமான இந்தப் பிரபஞ்ச ஒழுங்குகளும் அற்புதமான மனித படைப்பும் உயிரினங்களின் அற்புதமான வடிவமைப்பும் மிகப்பெரும் ஆற்றல்மிக்க படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான எடுத்துக் காட்டுக்களேயாகும்.

இந்த உண்மையை உணர்த்தும் விதத்தில் அல்குர்ஆன் பல இடங்களில் கேள்விகளை அடுக்குகின்றது.

‘எப்பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் படைக்கின்றவர்களா?’

‘அல்லது அவர்கள் வானங்கள் மற்றும் பூமியை படைத்தனரா? மாறாக, அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.’ (52:35-36)

‘நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?’

‘அதை நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?’ (56:58-59)

‘நீங்கள் பயிரிடுவதைப் பார்த்தீர்களா?’

‘அதை நீங்கள் முளைப்பிக்கின்றீர்களா? அல்லது நாம் முளைப்பிக்கின்றோமா?’ (56:63-64)

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மறுப்பவர்களைப் பார்த்து குர்ஆன் இப்படி கேள்வி எழுப்புகின்றது.

‘நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்தே இருந்தன. நாமே அவ்விரண்டையும் பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரில் இருந்து நாமே உருவாக்கினோம் என்பதையும் நிராகரித்தோர் அறியவில்லையா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?’ (21:30)

வானம், பூமி அனைத்தும் ஒன்றாக இருந்து பின்னர் வெடித்துச் சிதறியதன் மூலமாகவே வௌ;வேறாக மாறின எனும் ‘பிக்பேன்’ என்ற விஞ்ஞான உண்மை 1400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவரால் கூற முடியாததாகும். வானம், பூமியைப் படைத்தவனால் மட்டுமே கூறக் கூடிய இந்த உண்மையை குர்ஆன் கூறி நீங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டீர்களா! என அழைப்பு விடுக்கின்றது.

இதே வேளை, இஸ்லாம் பலதெய்வ நம்பிக்கையை மறுக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்தில் பல தெய்வங்கள் இருந்தால் பிரபஞ்சம் அழிந்து போயிருக்கும் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
‘(வானம், பூமி ஆகிய) இவ்விரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருப்பின் இவையிரண்டும் சீர்குலைந்திருக்கும். அர்ஷுடைய இரட்சகனாகிய அல்லாஹ் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் தூய்மையானவன்.’
(21:22)

ஒரு பஸ்ஸிற்கு இரண்டு ஓட்டுனர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இலங்கையை ஒரு கடவுள் படைத்தார்; இந்தியாவை இன்னொரு கடவுள் படைத்தார்; பாகிஸ்தானை மற்றொரு கடவுள் படைத்தார்… இப்படி பலரும் கொஞ்சம் கொஞ்சமாகப் படைத்த அனைத்தும் சேர்ந்துதான் உலகமாக உருவானது என்று கூற முடியுமா? நிச்சயமாக முடியாது!

அகில உலகையும் ஒரேயொரு கடவுள்தான் படைத்தான். அந்த ஒரு கடவுள் எல்லாவிதமான பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன் என்றே இஸ்லாம் கூறுகின்றது.

இன்று மக்கள் பல தெய்வங்களை வழிப்படுகின்றனர். அந்தப் போலி தெய்வங்கள் பற்றிக் கூறப்படும் கதைகளைக் கேட்டால் சராசரி மனிதர்களை விட அவர்கள் மோசமாக நடந்தவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

பெண்களைக் கேலி, கிண்டல் செய்பவர்கள், அவர்கள் குளிக்கும் போது அவர்களின் ஆடைகளைத் திருடி சில்மிஷம் செய்பவர்களெல்லாம் கடவுள்களாகச் சித்தரிப்பதாலேயே பலரும் கடவுள் இல்லை என்ற மோசமான நிலைப்பாட்டிற்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். இஸ்லாம் உண்மையான ஒரே இறைவனை ஏற்கச் சொல்லும் அதே நேரம், போலிக் கடவுள்களை முற்றாக மறுக்கச் சொல்கின்றது.

தன்னைக் கடவுளின் அவதாரம் எனச் சொல்லிக் கொள்ளும் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று கூறும் அதேவேளை, மனிதன் கடவுளாகவும் முடியாது; கடவுள் மனித அவதாரம் எடுத்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளவும் மாட்டான் என இஸ்லாம் கூறுகின்றது.

கடவுள் அவதாரம் என்ற பெயரில் உலாவரும் பலரும் ஆன்மீகத்தின் பெயரில் மக்களை ஏமாற்றி பணத்தையும், பெண்களின் கற்பையும் சூறையாடி வருவதை அன்றாடம் கண்டு வருகின்றோம்.

இஸ்லாம் கடவுள் கோட்பாட்டை மிகத் தெளிவாக வலியுறுத்தும் மார்க்கமாகும்.

கடவுள் என்பவன் பிள்ளைகளைப் பெற்றவனாக இருக்கமாட்டான். கடவுளுக்கு குழந்தைகள் இல்லை என இஸ்லாம் கூறுகின்றது. கடவுளுக்கு குழந்தை உண்டு என்று சொன்னால் அந்தக் குழந்தையும் கடவுளாக இருக்கும். அந்தக் குழந்தைக்கும் குழந்தை பிறக்கும், அதுவும் கடவுளாக இருக்கும்… இப்படிப் போனால் மனிதப் படைப்பை விட கடவுள்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். அது அறிவுக்குப் பொருந்தாததாகும்.

கடவுள் பிறந்தவராகவும் இருக்க முடியாது. பிறப்பவனும் இறப்பவனும் கடவுளாக இருக்க முடியாது என இஸ்லாம் கூறுகின்றது. இதுவே அறிவுக்குப் பொருத்தமான கடவுள் கொள்கையாகும். தன்னைப் படைத்த உண்மையான கடவுளை அறிந்து ஏற்பது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படைக் கடமையாகும். இதோ இஸ்லாம் மிகச் சுருக்கமாக அதன் இறைக் கோட்பாட்டைக் கூறுகின்றது கேளுங்கள்!

‘அல்லாஹ் ஒருவன்தான் என (நபியே!) நீர் கூறுவீராக!

‘அல்லாஹ் (எவ்வித) தேவையுமற்றவன்.

‘அவன் (எவரையும்) பெறவும் இல்லை; அவன் (எவருக்கும்) பிறக்கவும் இல்லை.

‘மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. ‘
(112:1-4)

மனிதனால் வடிவமைக்கப்பட்ட கற் சிலைகளையும் கற்பனையில் உருவான கதாபாத்திரங்களையும், எம்மைப் போன்ற சராசரி மனிதர்களையும் வணங்கும் வழிமுறையில் இருந்து உண்மையான ஒரே இறைவனை மட்டும் வணங்கி வழிபட இஸ்லாம் உங்களை அன்போடு அழைக்கின்றது…

One comment

  1. Atthnaium payanullawai Jezakkallaahu khire

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *