Featured Posts

சூதாட்ட திடல்களாக மாறிவரும் விளையாட்டு மைதானங்கள்

– முஹம்மது நியாஸ் –

இன்றைய காலசூழலில் பொழுது போக்கிற்காகவும் உடல் உள ரீதியான ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் விளையாட்டுக்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. அந்தவகையில் நமது பிரதேசங்களில் பெரும்பாலாக உதைப்பந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை நாம் அடையாளப்படுத்த முடியும்.

இவ்வாறான விளையாட்டுகள் காலை மாலை நேரங்களிள் சாதாரண உடல் பயிற்சியை நோக்காகக் கொண்டு விளையாடப்பட்டு வந்தாலும் பல விளையாட்டுக்கழகங்கள் அவ்வப்போது தமக்கிடையிலான பலப்பரீட்சையாகவும் இவ்விளையாட்டுக்களை மேற்கொண்டுவருவதை நாம் காண்கிறோம். இவற்றுக்கு ஒப்பாக நபிகளாருடைய காலத்தில் கூட மல்யுத்தம், அம்பெய்தல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுக்கள அதிகளவு முக்கியத்துவம் அளித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வரலாறுகளையும் நாம் ஆதார பூர்வமான நபிமொழிகளின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. அந்த அடிப்படையிலேதான் சமகாலத்தில் நடைபெற்று வருகின்ற மேற்குறித்த விளையாட்டுகளையும் இஸ்லாம் தடைவிதிக்காமல் அங்கீகரிக்கிறது.

ஆனால் சமகாலத்தில் சர்வதேச மட்டத்தில் நடைபெறுகின்ற உதைபந்தாட்டம், கிரிக்கட் சுற்றுப்போட்டிக்களுக்கு சமமாக நமது பிரதேசங்களிலும் நாம் அவ்வப்போது வெற்றிக்கிண்ணங்களுக்கான, ஏனைய பரிசில்களுக்கான சுற்றுப்போட்டிகள் நடைபெறுவதை நாம் காண்கிறோம்.

குறித்த இச்சுற்றுப்போட்டிகள் இரண்டுவகையாக நடைபெறுகின்றன.

ஒன்று:- ஒரு நிறுவனம் அல்லது ஒரு பிரதேசத்தின் பிரமுகர் அல்லது அரசியல்வாதி அல்லது ஏதேனும் ஒரு வர்த்தக நிறுவனம் அப்பிரதேசத்திலுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக அல்லது தமது பிரபலத்திற்காக, விளம்பரத்திற்காக இவ்வாறான விளையாட்டு போட்டிகளை நடாத்தி அப்போட்டிகளில் வெற்றிபெறுகின்ற அணிகளுக்கு பரிசுப்பொருட்களையோ பணத்தொகையையோ வழங்கிவைப்பார்கள்.

இப்போட்டியில் கலந்துகொள்கின்ற அணிகள் சில இடங்களில் இலவசமாக அனுமதிக்கப்படும். சில இடங்களில் போட்டியை நடாத்துகின்ற தரப்பாருடைய பௌதீக செலவீனங்களை ஈடு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட அளவிலான சிறிய தொகையினை மாத்திரம் கட்டணமாக செலுத்தி அப்போட்டியில் கலந்து கொள்கின்றன.

அந்த செலவீனங்களில் மைதானத்தின் அனுமதிக்கட்டணம், ஒலிபெருக்கி சாதனத்திற்கான செலவுகள் மற்றும் இன்னோரன்ன பௌதீக வளங்களுக்காக அந்த கட்டணப்பணம் பயன்படுத்தப்படும். சுற்றுப்போட்டியின் இறுதியில் வெற்றிபெறுகின்ற அணிக்கு வழங்கப்படுகின்ற கிண்ணம் மற்றும் பரிசில்கள் என்பவற்றுக்கும் போட்டியிடுகின்ற அணிகளால் நுழைவுக்கட்டணமாக செலுத்தப்படுகின்ற பணத்திற்கும் சம்பந்தம் இருக்காது.

வெற்றிபெறுகின்ற அணிகளுக்கான பரிசில்களை ஒரு நபர், அல்லது ஒரு நிறுவனம் தன்னுடைய செலவில் வழங்கிவைக்கும்.

இதற்கு உதாரணமாக அண்மையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் ஒரு பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட மிகப்பாரிய அளவிலான ஒரு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை நாம் குறிப்பிடலாம்.

இப்போட்டி நிகழ்வில் பங்கெடுத்த கழகங்களிடமிருந்து பணமாகவோ பொருளாகவோ எதுவும் அறவிடப்படவில்லை. மாறாக சுற்றுப்போட்டிக்கான அனைத்து செலவுகளையும் இலங்கை இராணுவமே பொறுப்பேற்றுக்கொண்டது. போட்டியின் இறுதியில் வெற்றிபெற்ற கழகங்களுக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் வழங்கவேண்டிய பரிசில்களையும் போட்டியை ஏற்பாடு செய்த இலங்கை இராணுவமே தமது செலவில் வழங்கிவைத்தது.

இவ்வாறான நடைமுறையினைக் கொண்டு நடாத்தப்படுகின்ற விளையாட்டு சுற்றுப்போட்டிகளில் இஸ்லாமிய மார்க்க ரீதியாக எதுவித சர்ச்சைகளும் கிடையாது.

அதேநேரம் இரண்டாவதாக நடைமுறையிலுள்ள ஒரு முறைமையாக,

ஒரு பத்து விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைந்து ஒரு கழகத்திற்கு இவ்வளவு தொகைப்பணம் என்று சமப்படுத்தப்பட்ட தொகையினை தீர்மானித்து அப்பணத்தை நுழைவுக்கட்டணமாக செலுத்தி அப்பணத்தில் இருந்தே வெற்றிக்கிண்ணம் மற்றும் ஏனைய பரிசில்களை கொள்வனவு செய்து இறுதியில் வெற்றிபெறுகின்ற அணிக்கும் திறமையாக விளையாடிய வீரர்களுக்கும் அப்பரிசில்களை வழங்கிவைகின்ற நடைமுறையும் இன்று நமது பிரதேசங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

இவ்வாறான சுற்றுப்போட்டிகளில் பல அணிகள் சேர்ந்து அதிகளவான பணத்தை நுழைவுக்கட்டணமாக செலுத்தி போட்டியில் பங்குகொள்கின்றன. சுற்றுபோட்டி நடைபெற்றுக் கொண்டிருகின்றபோது தோல்வியடைகின்ற அணிகள் அந்த சுற்றிலிருந்து வெளியேறிவிடவேண்டும். அத்தோடு மீண்டும் அதே சுற்றுப்போட்டியில் கலந்துகொள்வதாயின் ஏற்கனவே செலுத்திய நுழைவுக் கட்டணத்தொகையை மீண்டும் மறுபடியும் செலுத்தி அச்சுற்றுப்போட்டியில் பங்கெடுக்க வேண்டும்.

இப்போட்டிகளில் வெற்றிபெறுகின்ற அணிக்கு, திறமையாக விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற பரிசில்கள் அனைத்துக் கழகங்களும் நுழைவுக்கட்டணம் எனும் பெயரில் செலுத்திய பந்தயப் பணத்தில் இருந்தே கொள்வனவு செய்து வழங்கப்படுகின்றன. இதில் தோல்வியடைந்த கழகங்கள் தாம் நுழைவுக்கட்டணமாக செலுத்திய முழுப்பணத்தையும் இழந்து போட்டி நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறுகின்றன.

இந்த நடைமுறை இஸ்லாமிய மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு நடைமுறையாகும். காரணம் ஏனெனில் இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள இந்த நடைமுறையானது கலப்படமற்ற, அப்பட்டமான ஒரு சூதாட்டமாக இருப்பதால் இதை இஸ்லாம் கண்டிப்பாகவே தடைசெய்கிறது.

விளையாட்டுச் சுற்றுப்போட்டிகள் என்னும் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இவ்வாறான ஒரு விதிமுறைதான் ரேஸ் புக்கிகளிலும் இன்னோரன்ன சூதாட்ட விடுதிகளிலும் நடைபெறுகின்றன.

நான்கு பேர் இணைந்து சமமான ஒரு தொகையினை தீர்மானித்து ஒரு விளையாட்டில் ஈடுபடுவார்கள். அதில் வெற்றியடைந்தவர் ஏனைய மூவரும் பந்தயமாகக் கட்டிய பணத்தொகையினை தனதாக்கிக்கொள்வார். பணத்தை இழந்த மூவரும் விளையாட்டிலிருந்து, வெளியேறிவிடவேண்டும். இது ஒரு தெளிவான சூதாட்டம். இந்த நடைமுறைதான் இன்று கிரிக்கட், உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் என்னும் பெயரில் நமது பிரதேசங்களில் பரவலாக நடைபெற்றுவருகின்றன.

ஒரு சூதாட்ட விடுதியில் அதில் தொடர்புபட்டவர்களுடைய பணம் விளையாட்டு என்னும் போர்வையில் எவ்வாறு சூட்சுமமாக அபகரிக்கப்படுகிறதோ அதேபாணியில்தான் இங்கே விளையாட்டுச் சுற்றுப்போட்டிகள் என்னும் போர்வையில் தோல்வியடைந்த கழகங்களின் பணத்தை வெற்றிக்கான பரிசு என்னும் போர்வையில் வெற்றிபெற்ற கழகங்களும் விளையாடிய வீரர்களும் அபகரித்துக் கொள்கின்றனர்.

ஆனாலும் சூதாட்ட விடுதியில் நடைபெறுகின்ற இந்த செயற்பாட்டை சுத்தமான ஹராம் என்று தெளிவாக விளங்கியுள்ள நமது சமூகத்திற்கு விளையாட்டு மைதானங்களில் சுற்றுப்போட்டி என்னும் பெயரில் நடைபெறுகின்ற இந்த ஹராமான பாவகாரியத்தின் யதார்த்த நிலை உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை.

சூதாட்டம் ஹராம் என்று நாம் தெளிவாக விளங்கியிருக்கிறோம். அதேநேரம் விளையாட்டுச் சுற்றுப்போட்டி என்னும் பெயரில் நமது பிரதேசங்களிலுள்ள மைதானங்களில் நடைபெறுகின்ற இவ்வாறான சூதாட்டத்தின் உள்ளார்ந்த ரீதியான யதார்த்தத்தை நாம் இன்னும் சரிவர புரிந்துகொள்ளவில்லை. நமது இளைஞர் சமூகத்திற்கு இதன் பாரதூரம் உரியமுறையில் உணர்த்தப்படவில்லை.

இதன் காரணமாகத்தான் கிரிக்கட் மற்றும் உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை மையமாகக்கொண்டு நடாத்தப்படுகின்ற சுற்றுப்போட்டிகளில் சேர்வுக்கட்டணம் என்னும் பெயரில் பணத்தை பந்தயமாக வைத்து விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. அதில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு என்னும் போர்வையில் அடுத்தவர்களுடைய பணம் அநியாயமாக அபகரிக்கப்பட்டு வெற்றிக்கிண்ணமாக இன்னோரன்ன பரிசில்களாக ஒரு கழகத்திற்கு வழங்கப்படுகின்றன.

எனவே இது ஒரு தெளிவான சூதாட்டமாக இருப்பதனால் இந்த நடைமுறை கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். நமது பிரதேசங்களில் விளையாட்டுக்கழகங்கள் நடாத்துகின்ற இளைஞர்கள் இவ்வாறான சூதாட்டங்களில் இருந்தும் தம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும்.

இன்னும் முஸ்லிம் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மாற்றுமதத்தவர்கள் நடாத்துகின்ற இவ்வாறான சுற்றுப்போட்டிகளிலும் அதன் விதிமுறைகளை தெளிவாக கேட்டறிந்த பின்னரே முஸ்லிம் இளைஞர்கள் அவற்றில் பங்கெடுக்க வேண்டும். இல்லையேல் கண்டிப்பாக அவற்றை தவிர்க்க வேண்டும்.

சூதாட்ட விடுதிகளுக்கு சென்று சூதாட்டங்களில் ஈடுபடுவதன் பாரதூரத்தைப் பற்றி மணிக்கணக்கில் உரையாற்றுகின்ற நமது உலமாக்களும் அமைப்புக்களும் இன்று நமது சமூகத்தின் இளம் தலைமுறையினர் மத்தியில் விளையாட்டு என்னும் போர்வையில் ஊடுருவியுள்ள இந்த தெளிவான சூதாட்டத்தைப் பற்றி அக்கறையுடன் எச்சரிக்கை விடுக்கவேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் தனது அருள்மறையில் கூறுகின்றபோது.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அழ்ழாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (05:91) எனக்கேட்கிறான்.

எனவே அழ்ழாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகவும் வன்மையாகக் கண்டித்த இந்த சூதாட்டம் என்னும் பெரும்பாவத்திலிருந்தும் நாம் முற்றாக விடுபடுவதோடு நம்மைச் சார்ந்த நமது நண்பர்கள், சகோதரர்கள் அனைவரையும் இக்கொடும்பாவத்தில் இருந்தும் மீட்டெடுக்க எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *