– முஹம்மது நியாஸ் –
விளக்கை தேடிச்சென்று விழுகின்ற விட்டில் பூச்சிகளாக நமது இளைஞர் சமுதாயம் இந்த ஆபாச ஊடகங்களின் மாயவலைகளில் சிக்குண்டு தமது வாழ்வைத்தொலைத்து ஒரு விரக்தியடைந்த மனோநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் விகிதாசாரம் தற்போது அதிகரித்து வருவதனால் அது தொடர்பிலான விழிப்பூட்டல்களும் அவசியமாகக் கருதப்படுகின்றன. அதனை மனதிற்கொண்டே இந்த ஆக்கத்தை சமூகத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், வரைமுறைகள், எல்லைக்கோடுகளை தாண்டி சற்று வெளிப்படையாகவும் விலாவாரியாகவும் தொகுக்கப்படுகிறது என்ற விடயத்தை முன்னுரையாகப்பதிவிடுகிறேன்.
இன்று சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான தொழிநுட்ப வளர்ச்சியானது ஒரு மனிதனின், சமூகத்தின் முன்னேற்றத்திற்கு எந்தளவிற்கு உறுதுணையாக இருக்கின்றதோ அதற்கு சற்றேனும் குறையாமல் மனித குலம் சீர்குலைந்து சின்னாபின்னப்பட்டுப்போவதற்கும் அது வழிகோலுகின்றது.
கடந்த 2014ம் ஆண்டு செக்ஸ் என்ற சொல்லை கூகுள் தேடுபொறியில் அதிகமாகத்தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கைக்கே முதலிடம் கிடைத்துள்ளதென்ற அசிங்கமான செய்தியையும் இங்கே ஞாபகப்படுத்தேண்டும். உலகளாவிய நாடுகளில் பாலியல் ரீதியாக சீரழிந்துபோன, கலாச்சார ரீதியாக தடம்புரண்டு போய்விட்ட எத்தனையோ மேலைத்தேய நாடுகளில் இல்லாதவாறு நமது நாட்டில் மாத்திரம் இந்த செக்ஸ் என்ற சொற்பதம் அதிகமாக இணையதளங்களில் தேடப்பட்டுள்ளதென்றால் அந்தளவிற்கு நம் நாட்டு மக்கள் அதில் ஆர்வம் காட்டியுள்ளார்கள் என்பதே மறைக்கவோ, மறுக்கவோ முடியாத பேருண்மையாகும்.
அந்த வகையில் சமுதாயத்தின் கண்கள் மற்றும் நாளைய வழிகாட்டிகள், தலைவர்கள் என்று பலவாறான நம்பிக்கை நிறைந்த வாசகங்களால் வர்ணிக்கப்படுகின்ற இளைஞர் சமுதாயத்தை எதுவித நோக்குப்போக்குகளும் சிந்தனைகளும் இன்றி ஒருவகையான மயக்க நிலைக்கு தள்ளிவிட்ட வஞ்சகத்தனத்தில் ஆபாச ஊடகங்களின் வகிபாகங்களே அதிகளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இனமத, மொழி பேதமின்றி இளைஞர்கள் தொடக்கம் வயோதிபர்கள் வரைக்கும் இந்த ஆபாச ஊடகங்களின் தாக்கங்களுக்கு ஆட்பட்டு இன்று தாம் அனுபவித்து வாழவேண்டிய வாழ்க்கை என்னும் வரப்பிரசாதத்தை தூர்வாரித்தொலைத்துவிட்டு தட்டலைந்து திரிகின்ற பரிதாபத்தை நாம் காண்கிறோம்.
ஆபாச ஊடகங்கள் என்னும் போது சமகாலத்தில் அதீத வளர்ச்சியை எட்டியுள்ள இணையதளங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், சீடீக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை அடையாளப்படுத்தமுடியும்.
இந்த ஆபாச ஊடகங்களைப் பொறுத்தவரையில் கணவன் மனைவிக்கிடையில் மாத்திரம் நடைபெறவேண்டிய உடல்ரீதியான தொடுகைகளையும் தொடர்பாடல்களையும் பணம் சம்பாதிக்கின்ற அற்பத்தனமான நோக்கத்திற்காக ஒட்டுமொத்த உலகிற்குமே வெளிச்சமிட்டுக்காட்டுகின்ற கீழ்த்தரமான செயற்பாடுகளை பகிரங்கப்படுத்துவதையே தமது தொழிலாகவும் வாழ்வாதாரமாகவும் மேற்கொண்டு வருகின்றன.
எழுத்தறிவென்பது ஒரு மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மாபெரும் அமானிதமும் அருட்கொடையுமாகும். அந்த ஆற்றலைகொண்டு சமூகங்களுக்கு நல்லபல விடயங்களை எழுதி வெளிக்கொணர முடியும். நல்லவற்றை ஏவுவதுடன் தீயவற்றின் பாலிருந்தும் சமூகத்தை மீட்டெடுப்பதற்காக இந்த எழுத்துத்துறையினை நன்கு பயன்படுத்த முடியும். சமயம், கல்வி மற்றும் தொழிநுட்பம் சார்ந்த எத்தனையோ விடயங்களை எழுத்தாற்றல் என்னும் இன்றியமையாத துறையின் மூலம் அழகான முறையில் வெளிப்படுத்த இயலும்.
ஆனால் இந்த ஆபாச இணையத்தளங்களை, பத்திரிகைகளை நாம் பார்கின்றபோது தமக்கு இறைவன் வழங்கிய எழுத்தாற்றலை அற்பத்தனமான சில சில்லறை இலாபங்களுக்காக ஆபாசக்கதைகளை உண்மைச்சம்பவங்கள் போன்று தொகுத்து எழுதி அவற்றின் பால் மக்களை ஈர்த்தெடுக்கின்ற அசிங்கமான, கேவலமான செயற்பாடுகளை மேற்கொண்டுவருவது கவலைக்குரிய விடயமாகும்.
அதேபோன்றுதான் ஆபாச சினிமாக்கள்
இன்றைய நவீன ஊடகங்களை பொறுத்தவரைக்கும் ஒரு மனிதன் நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து கொண்டே இந்த உலகிலும் உலகிற்கு வெளியிலும் நடக்கின்ற சகல விடயங்களையும் வெறுமனே ஓரடித்திரையில் மாத்திரம் பார்த்து அறிந்துகொள்கின்ற அளவிற்கு அவை பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. ஆனால் பரிதாபம், ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் ஏற்படுகின்ற இயற்கையான ஒரு வேட்கையினை அவனது இயலாமையாக அடையாளம் கண்டு அதனைக்கொண்டே அம்மனிதனை, அவனுடைய குடும்பங்களை சீரழிக்கின்ற கேவலமான செயற்பாடுகளை இந்த ஆபாச ஊடகங்கள் தொழில்ரீதியாக செயற்படுத்தி வருகின்றன.
நிழல்களும் நிஜங்களும்
ஆபாச சினிமாக்களை, சம்பவங்களாக எழுதப்படுகின்ற கற்பனைக்கதைகளைப் பொறுத்தவரைக்கும் அவை பார்ப்பவர்களை பரவசப்படுத்துகின்ற இழிந்த நோக்கத்திலேயே படைக்கப்படுகின்றன. நிஜத்தில் செயற்படுத்தமுடியாத, குடும்ப வாழ்க்கைக்கு ஒவ்வாத, சாதாரண குடும்ப வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த இயலாத செய்கைகள் இந்த ஆபாச சினிமாக்களில், கதைகளில் நிறைந்து காணப்படுவது அவற்றின் இழிந்துபோன ஒரு இயல்பாகும். ஆனால் அந்த சினிமாக்களில், கதைகளில் தோன்றுவது போன்று ஒரு ஆண் தனது குடும்ப வாழ்கையில் செயற்படுத்த எத்தனித்தால் அது எந்தளவிற்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறிதான்.
காரணம் ஆபாச சினிமாக்களின் நோக்கங்கள் வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு. இவ்வாறு ஆபாச சினிமாக்களின் மூலம் தான் கற்றுக்கொண்ட பாலியல் செயன்முறைகளை சொந்த வாழ்க்கையில் அமுல்ப்படுத்த எத்தனித்து அது தோற்றுப்போகின்ற போது அதனால் மனமுடைந்துக்போகின்ற எத்தனையோ ஆண்கள் இன்று நம்மத்தியில் வாழ்கின்றனர்.
மாத்திரமின்றி ஆபாச சினிமாக்களில் நீண்ட காலமாக ஈடுபாடுகொண்டு அவற்றில் லயிப்படைந்து ரசித்து உளமார ஒன்றித்ததன் காரணமாக அந்த சினிமாக்களில் தோன்றுகின்ற மேலைத்தேய பெண்களின் உடல் அமைப்புக்களைப்போன்று, பாலியல் செயற்பாடுக்களைப்போன்று தமது வாழ்க்கைத்துணை அமையப்பெறவில்லை என்று வருந்தி உளத்தால் தேம்பியழுகின்ற ஆண்களும் நம்மத்தியில் இல்லாமல் இல்லை.
இன்னும் அந்த மேலைத்தேய ஆபாச நடிகைகளான வேசிகள், பாலியல் உறவு முறையில் பயன்படுத்துகின்ற ஆசன முறைகள் மற்றும் கோணங்கள் (positions & angles) மூலம் தாமும் உடலுறவி ஈடுபடவேண்டும் என ஆசைப்பட்டு திருமணம் முடிக்கின்ற பல இளைஞர்களும் இருக்கின்றனர். ஆனால் திருமணம் முடித்த தனது மனைவிமார்கள் இந்த இழிவடைந்த சினிமாக்கள் தொடர்பில் எள்முனையளவும் அறிவற்றவர்களாக இருக்கின்றபோது அந்த இளைஞர்களுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பு நொடிப்பொழுதில் வீண்போய்விடுகிறது. இதனால் மனமுடைந்து, ஏமாற்றமடைந்து குடும்பங்களில் விரிசல் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களும் தற்கால சூழலில் அதிகரித்துள்ளது.
மனிதர்களை கலாச்சாரக் குற்றவாளிகளாக மாற்றும் ஆபாச ஊடகங்கள்
இன்று சில இணையதளங்களை பார்த்தோமானால் தமிழ் மொழியில் இயங்கிவருகின்ற அவ்விணையத்தளங்கள் சில அருவருப்பான ஆபாசக் சம்பவங்களை பகிரங்கப்படுத்தியிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
அதாவது அண்ணனும் தங்கையும், தாயும் மகனும், தந்தையும் மகளும் போன்ற வேலிகளே பயிர்களை மேய்கின்ற வகையிலான இரத்த உறவுகளுக்குள்ளேயே நடைபெற்ற மிருகத்தனமான, அசூசையான பாலியல் சம்பவங்கள், அதிகப்படியான கதைகள் ரசனைமிக்க சொல்லாடல்களுடன் இணையதளங்களின் வாயிலாக பரப்பிவிடப்பட்டுள்ளன.
இவ்வாறான இணையதளங்களின் தாக்கங்களே நாள்தோறும் நாம் செய்திகளின் வாயிலாக அறிகின்ற “மகளை கற்பழித்த தந்தை”, “தங்கையை கற்பழித்த அண்ணன்” போன்ற அருவருக்கத்தக்க செய்திகளாகும். இவ்வாறு குடும்ப உறுப்பினர்களை, இரத்த உறவுகளைக்கூட கலாச்சாரக் குற்றவாளிகளாக உருவாக்கி அவர்களுடைய எதிர்காலங்களை சீரழித்து, குடும்பங்களை நாதியற்ற நிலையில் நடுச்சந்தியில் நிற்க வைக்கின்ற படுபாதகமான நிலைமைக்கு வழி கோலுபவைகளாக இவ்வாறான அசிங்கமான ஆபாச இணையதளங்களே காணப்படுகின்றன.
ஆண்மையை பாதிக்கும் ஆபாச சினிமாக்கள்
உடலில் ஏற்படுகின்ற எந்தவொரு உணர்வும் அதற்கென இயற்கையாகவே ஏற்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் கிளர்ந்தெழுவதே ஆரோக்கியத்தின் அடையாளமாகும். உதாரணம் பசி. உணவு உண்ணவேண்டிய வேளையில் பசியெடுத்தால் அது உடலுக்கு ஆரோக்கியமானது. ஏனைய நேரங்களில் பசித்தால் அல்லது உணவு உண்ணவேண்டிய நேரத்தில் பசி எடுக்காவிட்டால் நாம் உண்ட உணவில் அல்லது நமது உடலில் ஏதோவொரு கோளாறு இருக்கின்றதென்றே அர்த்தமாகும்.
அதேபோன்றுதான் இந்த ஆபாச சினிமாக்கள், கதைகளால் பாலுணர்வில் ஏற்படுகின்ற தாக்கங்களும் இருக்கின்றன.
கணவன் மனைவிக்கிடையில் நடைபெறவேண்டிய உடலுறவின்போது ஒரு ஆணுடைய பாலுணர்வு கிளர்ச்சியடைந்தால் அது ஆரோக்கியமானது, பயனுள்ளது. அதுவல்லாமல் எந்நேரமும் ஒரு ஆணுடைய பாலுணர்வு கிளர்ச்சியடைந்து கொண்டிருக்குமானால் அது காலப்போக்கில் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்.
ஒரு ஆபாச சினிமாவை பார்க்கின்றபோது அல்லது பாலியல் கதைகளை வாசிக்கின்றபோது நிச்சயம் ஒரு ஆணுடைய உணர்வுகள் கிளர்ந்தெழவே செய்யும். சிறிது நேரத்தில் அது தானாகவே அடங்கிவிடும். இதுவே தினந்தோறும் அல்லது அடிக்கடி ஆபாச சினிமாக்களை பார்த்து வருகின்றபோது அவ்வாறான கிளர்ச்சியானது மூளைக்கும் உணர்வுக்கும் பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடும்.
ஆரம்பத்தில் பாலியல் ரீதியான காட்சிகளை பார்க்க ஆரம்பித்த உடனேயே கிளர்ச்சியடைந்த உணர்ச்சியானது காலப்போக்கில் சற்று தாமதமடைய ஆரம்பிக்கும். இதுவே இவ்வாறான ஆபாச சினிமாக்களுக்கு அடிமைப்பட்ட ஒரு ஆண் நிஜவாழ்க்கையில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ள ஆரம்பிக்கும்போது உரிய நேரத்தில் அந்த உணர்வு வெளிப்படாது போகின்றது. ஏற்கனவே ஆபாச சினிமாக்களை கண்டு ரசித்து ரசித்து அதில் இசைவாக்கமடைந்த பாலுணர்வானது அப்படியே மழுங்கடிக்கப்பட்டுப்போய் விடுகிறது.
இது வெறும் கற்பனையல்ல. 1999ம் ஆண்டு அமெரிக்காவில் நியூ யோர்க் கடற்கரையில் அரைகுறையாடைகளுடன் உலாவுகின்ற பெண்களை தொடர்ச்சியாகப் பார்த்து ரசித்துவந்த ஆண்களையும் ஆபாசக் காட்சிகளை பார்ப்பதில் கட்டுப்பாட்டோடு வாழ்கின்ற ஆண்களையும் தேர்ந்தெடுத்து ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட தகவல் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்தின் பெறுமானத்தை மேலைத்தேய உலகிற்கு தீர்க்க தரிசனமாக எடுத்துரைத்தது.
அதாவது அரைகுறை ஆடைகளுடனோ அல்லது ஆடைகள் இன்றியோ திரிகின்ற பெண்களை ஆண்கள் அடிக்கடி பார்ப்பதால், ரசிப்பதால் ஆண்களின் உடலில் ஏற்படுகின்ற பாலியல் உணர்ச்சியானது காலப்போக்கில் குறைவடைந்து விடுகிறது. ஆனால் தனது அந்தரங்க அவயவங்களை, உணர்ச்சியை தூண்டக்கூடிய உடற்பாகங்களை மறைக்கின்ற பெண்களால் ஆண்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுவதில்லை. பெண்களுடைய அந்தரங்க அவயவங்களை காணக்கிடைக்காத ஆண்கள் பாலியல் ரீதியான உணர்வுகளில் ஆரோக்கியத்துடனும் வீரியத்துடனும் காணப்படுகிறார்கள் என்பதை அந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
ஆகவே ஆபாச சினிமாக்களை அடிக்கடி பார்ப்பதன் காரணமாகவும் அதற்கு அடிமைப்பட்டுப் போவதனாலும் நிஜவாழ்வில் ஒரு சராசரி ஆண்மையுணர்வுள்ள ஆணாக வாழ்வது கேள்விக்குறியாக மாறுகிறது என்னும் உண்மையினை புரிந்துகொள்ள வேண்டும்.
சுய இன்பம் அல்லது கரப்பழக்கம்
ஆபாச சினிமாக்களுக்கு அடிமைப்பட்டுப்போனவர்களோடு ஒட்டிப்பிறந்த ஒன்றாக இருப்பதுதான் இந்த சுய இன்பம் என்னும் கரப்பழக்கமாகும். ஆபாச சினிமாக்களை பார்த்து ரசிக்கின்ற ஒரு ஆண் அந்த சந்தர்ப்பத்தில் தனது உடலில் பீறிட்டு எழுகின்ற காம வெறியை அடக்குவதற்கு, அந்த சிற்றின்ப சுகத்தை அனுபவிப்பதற்கு தேடிக்கொள்கின்ற முதலாவது வழிமுறை இந்த சுய இன்பமாகும்.
இன்றைய நவீன ஊடகங்களும் மேலைத்தேய அரைகுறை மருத்துவங்களும் இந்த சுய இன்பம் காண்கின்ற செயற்பாட்டினை ஆறுதல் கூறி ஊக்குவித்தாலும் உடல் உள ரீதியாகவும் இஸ்லாமிய மார்க்க ரீதியாகவும் இது ஒரு வெறுக்கத்தக்க அசிங்கமான செயற்பாடாகும்.
ஒரு ஆணோ பெண்ணோ தனது உடலில் ஏற்படுகின்ற பாலியல் ரீதியான தேவையினை தனக்கு ஹலாலாக்கப்பட்ட துணையைக்கொண்டே தவிர வேறு எந்தவொரு வழிகளிலும் தீர்த்துக்கொள்ளக்கூடாது என்ற அல் குர்ஆனியக் கட்டளையின் அடிப்படையிலும் ஒரு ஆணுடைய இந்திரியத்தை காரணமில்லாமல் வீணடிப்பது பாவச்செயல் என்ற எச்சரிக்கையின் பெயரிலும் இந்த சுய இன்பம் காண்கின்ற பழக்கத்தை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மாத்திரமின்றி தொடர்ந்தேச்சையாக மேற்கொள்ளப்படுகின்ற இப்பழக்கமானது உடலை அளவுக்கதிகமாக வலுவிழக்கச் செய்வதிலும் சித்தனைத்திறன், செயலாற்றும் வேகம் போன்றவற்றிலும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மட்டுமல்லாது சுய இன்பம் காண்கின்ற பழக்கத்திற்கு அடிமைப்பட்டுப்போன ஒரு இளைஞனுடைய உடல் அளவுக்கதிகமாக மெலிந்து, நிறைகுறைந்து போவதுடன் ஆணுறுப்பு வெகுவாக சிறுத்துப்போகிறது. இன்னும் இப்பழக்கமானது எந்நேரமும் ஒருவித தூக்கம் மேலிட்ட, அசதியான, சோம்பலான, சுறுசுறுப்பற்ற உடல்நிலைக்குக் காரணமாக அமைகிறது.
அத்தோடு மிக முக்கியமாக, இவ்வாறான சுய இன்பம் காண்கின்ற பழக்கத்திற்கு ஆட்பட்ட ஒரு இளைஞன் தான் திருமணம் முடித்த பின்னர் தன்னுடைய மனைவியை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியுமா என்ற பாரிய மனக்கிலேசத்திற்கு ஆளாகிவிடுகிறான். இந்த ஒரு விடயமே கணவன் மனைவிக்கிடையிலான உடலுறவின்போது ஒருவரில் ஒருவர் திருப்தியடையாமல் போவதற்கும் அதன் மூலம் குடும்பங்களில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடுகிறது.
இன்று நமது பிரதேசங்களில் இயங்கிவருகின்ற பாமசிகளில் சென்று அவர்களிடம் தனிப்பட்ட ரீதியில் விசாரித்துப்பார்த்தால் இந்த ஆபாச சினிமாக்களின் தாக்கத்தினால் ஆண்மையிழந்து போன நமது வாலிபர்களுடைய பெயர் விபரங்களை விலாவாரியாக அறிந்துகொள்ளமுடியும்.
நீண்ட நேர உடலுறவிற்கான மாத்திரைகள், ஸ்ப்ரேக்கள் மற்றும் விரைவில் விந்து முந்தாமல் இருப்பதற்காக நமது இளைஞர்கள் பயன்படுத்துகின்ற மருந்துகளுக்கும் இருக்கின்ற கிராக்கிகளை நம்பித்தான் இன்றைய நாட்களில் நமது பிரதேசங்களில் காணப்படுகின்ற சில மருந்தகங்களும் சித்தவைத்திய நிலையங்களும் பிழைப்பு நடாத்தி வருகின்றன. இதற்குக் காரணம், ஆபாச சினிமாக்களும் அசிங்கம் நிறைந்த இணையத்தளங்களுமேயாகும்.
விடுதலை பெறுவது எவ்வாறு?
இந்த ஆபாச சாக்கடைகளுக்கு ஆட்பட்டு அவற்றில் மூழ்கித் திளைக்கின்ற இளைஞர்களுக்கு மத்தியிலும் அதிலிருந்தும் மீட்சியடைந்து பரிசுத்தமடைய வேண்டும் என்று உள்ளத்தால் புழுங்குகின்ற நல்லுள்ளங்களும் இல்லாமல் இல்லை. ‘எதோ அறியாத்தனமாக, இதன் பின்விளைவுகள் பற்றி சிந்திக்காமல் மாட்டிக்கொண்டோம் இப்போது அதிலிருந்தும் விடுபட முடியாதுள்ளது’ என்று வருந்துகின்ற இளைஞர்களுக்கும் வயோதிபர்களுக்கும் சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன்.
இந்த ஆபாசக் காட்சிகளை பார்க்க வேண்டும் என்ற உள ரீதியான தாக்கமானது அத்தோடு தொடர்புள்ள நண்பர்கள் மூலமாகத்தான் நமக்கு அறிமுகமாகிறது. எந்தவொரு பாவச்செயலை விட்டும் ஒதுங்க வேண்டு என்று நாம் ஆசைப்படுகிறோமோ முதலில் அப்பாவச்செயல்கள் நிறைந்துள்ள சூழலில் இருந்தும் நாம் விடுபடுவது கட்டாயமானது. துர் நடத்தைகளிலும் பாவகாரியங்களிலும் சூழலால் ஏற்படுகின்ற தாக்கமே அதிகமாகும். ஆகவே சூழலை மாற்றுவது முதலாவது நாம் செய்யவேண்டிய ஒன்று.
அடுத்து நாம் யார் என்ற கேள்வியை நமக்குள் நாம் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் முஸ்லிம்கள். நாம் இந்த உலகில் படைக்கப்பட்டதற்கு முக்கியமான நோக்கங்கள் பல இருக்கின்றன. இந்த சமூகத்தில் ஓர் அங்கமாக வாழ்கின்ற நம்மிடத்தில் பல கடமைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். இந்த சமூகத்திற்கு நம்மால் ஆன ஏதாவது ஒன்றை நாம் மரணிப்பதற்குள் செய்துவிட வேண்டும். இவ்வாறான சிந்தனைகளை அடிக்கடி நமது மனதிற்குள் நாம் அசைபோட்டுக்கொண்டே இருப்பது கட்டாயமாதாகும். அப்போது இந்த ஆபாச சினிமாக்களுடனான தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகல்வதை நாம் காணலாம்.
மேலும் ஐங்காலத்தொழுகைகளையும் நேரந்தவறாது நிறைவேற்றவேண்டும். “தொழுகை மானக்கேடான செயற்பாடுகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும் கேடயம்” என்பது அழ்ழாஹ்வின் அருள்வாக்காகும். அதனால் இந்த ஐங்கால தொழுகைகளின் விடயத்தில் நாம் கவனமாக இருப்பது அவசியமாது,
இன்னும் இளைஞர்களை நல்வழிப்படுத்துகின்ற இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் பல நமது பகுதிகளில் காணப்படுகின்றன. அவ்வமைப்புககளுடன் இணைந்து சமுதாயப்பணிகளில் பங்கெடுப்பதன் மூலம் நமது உளரீதியான சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும். மேலும் இஸ்லாம் கூறுகின்ற ஒரு கட்டமைப்புக்குள் நமது வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்ள முடியும்.
அதேபோன்று ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த இணையத்தளப்பாவனைகள் இன்று உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிட்டன. முகநூல் கணக்குகள் (facebook Account) இல்லாத இளைஞர்களை நம்மத்தியில் காண்பது முடியாத ஒரு விடயமாகும். அந்தவகையில் இம்முகநூலை அறிவியல், சமயம் மற்றும் தொழிநுட்பம் போன்ற விடயங்களை கற்பதற்கும் கற்பிப்பதற்கும் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.
நாள்தோறும் அல்லது அவ்வப்போது நல்லபல விடயங்களை இதன் வாயிலாக பகிர்ந்துகொள்வது, சிறு சிறு தலைப்புக்களில் மார்க்க விடயங்களை எழுதி வெளியிடுவது போன்ற நற்செயல்களின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வதுடன் உளமாற்றத்திற்கும் வழிகோல முடியும்.
இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஆக்கங்கள் எழுதுவது போன்ற விடயங்களில் கவனத்தை திசைதிருப்பினால் இந்த ஆபாச சினிமாக்களின் மோகம் நம்மை விட்டும் அடியோடு மறைந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதேபோன்று பெற்றோர்களுக்கு…
நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் பாவனை என்பது இன்றைய காலசூழலில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. கையடக்கத்தொலைபேசிகள், இன்டர்நெட் இணைப்புக்கள் மற்றும் ஏனைய தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்துமே சின்னஞ்சிறு வயதுடைய நமது பிள்ளைகள் மிகவும் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவது அவர்களுடைய அறிவியல் ரீதியான வளர்ச்சியையே படம் பிடித்துக்காட்டுகிறது. ஆனாலும் அவர்களுடைய அந்த அறிவியல் தேடலில், முன்னேற்றத்தில் பெற்றோர்களாகிய நாம் அவதானிப்பாளர்களாக இருப்பது அவசியமாகும்.
தனிமையே ஒரு மனிதனை பாவத்தின் பால் அதிகபட்சமாக அழைத்துச் செல்கிறது. அதனால் கணனிகள் மற்றும் கையடக்கத்தொலை பேசிகளை நமது பிள்ளைகள் நமக்குத்ன் தெரியாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கற்றல் நடவடிக்கைகளுக்காக நாம் அவர்களுக்கு அமைத்துக்கொடுக்கின்ற தனியான அறைகள் அவர்களை பாவத்தின் பக்கம் இட்டுச் செல்லாதவாறு பாதுகாத்துகொள்ளுதல் பெற்றோர்களாகிய நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
எனவே மனித குலத்தை சீரான கலாச்சார பின்னணியிலிருந்தும் தடம்புரளச் செய்து மிருகத்தனமான சித்தாந்தங்களுக்குள் தள்ளிவிடுவதற்காக மேலைத்தேய இழிந்த பிறவிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆபாச ஊடகங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்களில் இருந்தும் நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் முற்றாக விடுபடுவதோடு இன்றைய கால சூலில் நமது சமூகம் எதிர்நோக்கியுள்ள சமய, கலாச்சார ரீதியான சவால்களுக்கு முகம் கொடுத்து அவற்றைப் பாதுகாக்கும் திறன் கொண்ட துணிச்சல் மிக்க இளைஞர் சமுதாயத்தை செப்பனிடுவதற்கு நம் அனைவரும் திட சங்கற்பம் பூணவேண்டும் என்பதோடு,
சமுதாய நலன்கருதி வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரையின் அறிவுரைகள், எச்சரிக்கை வாசகங்கள் அனைத்தும் சமூகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகள் வரைக்கும் சென்று தாக்கம் செலுத்துவதற்காக வாசகர்களான உங்களால் முடியுமான பங்களிப்பை வழங்கி இந்நற்பணியில் பங்கேற்குமாறும் அன்பாய் வேண்டிகொள்கிறேன்.