Featured Posts

கப்ருடைய வாழ்வு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
மனிதன் மரணித்த பின்னர் அவனது நிலை என்ன என்பது குறித்து இஸ்லாம் விரிவாகவே பேசுகின்றது. இஸ்லாமிய நம்பிக்கையில் மரணத்தின் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை என்பது பிரதானமானதாகும். மனிதன் மரணித்ததில் இருந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் காலம் வரைக்கும் உள்ள இடைப்பட்ட காலம் அல்லது அவனது வாழ்வு ‘ஆலமுல் பர்ஸக்’ – திரைமறைவு வாழ்வு என்று கூறப்படும். அதாவது, உலகிற்கும் மறுமைக்கும் இடைப்பட்ட வாழ்வு இந்த பர்ஸகுடைய வாழ்வில் நல்லவர்கள் இன்பத்தையும், தீயவர்கள் துன்பத்தையும் அனுபவிப்பார்கள்.

மனிதன் மரணித்து விட்டால் அவனை சிலர் அடக்கம் செய்கின்றனர். மற்றும் சிலர் எரித்துவிடுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் அனைவருமே சடலத்தை அடக்கம் செய்கின்றனர். இந்த அடிப்படையில் ஹதீஸ்களில் இந்த ‘ஆலமுல் பர்ஸக்’ எனும் வாழ்வு கப்ருடைய வாழ்வு என்றும் பேசப்படுவதுண்டு.

கப்ரில் அடக்கம் செய்யப்பட்டாலும் சரி, எரித்து சாம்பலாக்கப்பட்டாலும் சரி, கடலில் அல்லது காட்டில் மரணித்து மீன்களுக்கு அல்லது விலங்குகளுக்கு உணவாக மாறினாலும் சரி மனிதனுக்கு பர்ஸகுடைய வாழ்க்கை என்று ஒரு வாழ்வு உண்டு. அதில் அவன் இன்பத்தையோ, துன்பத்தையோ அடைவது உறுதி! எனவே, கப்ரில் அடக்கப்படாதவர்களின் கப்ர் வாழ்க்கையின் நிலை என்ன என்ற கேள்விக்கு இடமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆனும் ஸுன்னாவும் கப்ரில் குற்றவாளிகள் வேதனை செய்யப்படுவார்கள் என்று தெளிவாகக் கூறுகின்றன. நபி(ச) அவர்கள் தமது தொழுகைகளின் இறுதியில்

‘யா அல்லாஹ்! கப்ருடைய வேதனையை விட்டும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்’

என்று தொடராகப் பிரார்த்தித்து வந்துள்ளதுடன் மக்களையும் கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாவல் தேடும் படி போதித்துள்ளார்கள்.

‘காலையிலும் மாலையிலும் நரகத்தில் அவர்கள் காட்டப்படுவார்கள். மேலும், மறுமை ஏற்படும் நாளில் பிர்அவ்னின் கூட்டத்தாரைக் கடும் வேதனையில் நுழைத்துவிடுங்கள் (என்று கூறப்படும்.)’ (40:46)

இந்த வசனம் கப்ருடைய வேதனை உண்டு என்பதற்கான தெளிவான சான்றாக உள்ளது. பிர்அவ்னுக்கும் அவனது குடும்பத்திற்கும் காலையிலும், மாலையிலும் நெருப்பால் சூடுகாட்டப்படுகின்றது. மறுமை வந்துவிட்டால் அவர்கள் இதைவிடக் கடுமையான வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.

இதில் மற்றுமொரு விடயமும் கவனிக்கத்தக்கதாகும். பிர்அவ்னும் அவனது குடும்பத்தினரும் கடலில் மூழ்கி மரணித்தனர். அவர்கள் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. கப்ரில் அடக்கப்படாத பிர்அவ்னுக்கும் பர்ஸகுடைய வாழ்வில் வேதனை உண்டு என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. எனவே, கப்ரில் அடக்கப்படாதவர்களுக்கு எப்படி கப்ருடைய வேதனை இருக்கும் என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை என்பதை அறியலாம்.

‘நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ் தான் நாடுவதைச் செய்வான்.’
(14:27)

இந்த வசனத்திற்கு நபியவர்கள் அளித்த விளக்கமும் கப்ருடைய வேதனை உண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஒருவரை நல்லடக்கம் செய்தால், அவருக்கு உறுதிக்காக துஆ செய்யுமாறு நபியவர்கள் கூறுவார்கள். அப்போது ‘தப்பதகல்லாஹு பில் கவ்லித் தாபித்’ – (நீ மொழிந்த லாயிலாக என்ற) உறுதியான வார்த்தை மூலமாக அல்லாஹ் உன்னை உறுதிப்படுத்துவானாக! என்று பிரார்த்திக்குமாறு நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

கப்ரில் கேள்வி கேட்கப்படும் போது முஃமின்கள் உறுதியாக இருப்பார்கள். காபிர்களும் பாவிகளும் பதில்சொல்ல முடியாமல் கத்துவார்கள், கதறுவார்கள். அப்போது அவர்கள் வேதனைக்குட்படுத்தப் படுவார்கள் என்றெல்லாம் ஏராளமான நபிமொழிகள் பேசுகின்றன.

கடந்த காலத்தில் வாழ்ந்த சில வழிகேடர்களும், ஸுன்னா மறுப்பாளர்களும் கப்ருடைய வேதனை இல்லை என மறுத்துள்ளனர். இதனால்தான் கடந்த கால இமாம்கள் ‘இத்பாது அதாபில் கப்ர்’ – கப்ருடைய வேதனை உறுதிப்படுத்துதல் என்ற தலைப்பில் தனி நூற்களையே எழுதியுள்ளார்கள். இதற்கு உதாரணமாக இமாம் பைஹகி அவர்களைக் குறிப்பிடலாம்.

குர்ஆனுக்கு முரணா?:

கப்ரில் வேதனை உண்டு என்று கூறும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக அவர்கள் வாதித்தனர். அதற்கு அவர்கள் குர்ஆனின் பின்வரும் ஆயத்தை ஆதாரமாகக் கொண்டனர்.

‘பின்னர், ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் மண்ணறைகளிலிருந்து தமது இரட்சகனின் பால் விரைந்து செல்வார்கள்.

‘எமக்கு ஏற்பட்ட கேடே! எமது தூங்கு மிடத்திலிருந்து எம்மை எழுப்பியவன் யார்?’ எனக் கேட்பார்கள். அர்ரஹ்மான் வாக்களித்தது இதுதான். தூதர்கள் உண்மையே உரைத்தனர்’ (என்று கூறப்படும்.)’
(36:51-52)

‘சூர் ஊதப்பட்டு உயிர் கொடுத்து எழுப்பப்படும் போது எம்மை எமது தூங்கும் இடத்திலிருந்து எழுப்பியது யார்?’ என அவர்கள் கேட்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. ஹதீஸ்கள் கூறுவது போல் கப்ருடைய வேதனை உண்டு என்றால் தூங்கும் இடத்திலிருந்து எழுப்பியது யார்? என்று அவர்கள் கேட்டிருக்கமாட்டார்கள். எனவே, கப்ரில் வேதனை உண்டு என்ற ஹதீஸ்களின் கூற்று இந்த வசனத்திற்கு நேரடியாக முரண்படுகின்றது. காபிர்கள், முஸ்லிம்கள் அனைவரும் கப்ரில் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்கள் என்றே இந்த வசனம் கூறுகின்றது என வாதிடுகின்றனர்.

குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்ளாமல்தான் இவர்கள் இப்படி வாதிடுகின்றனர். ஒரு முறை சூர் ஊதப்பட்டதும் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.

‘ ‘ஸூர்’ ஊதப்படும். அப்போது, அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலிருப்போரும், பூமியிலிருப்போரும் மூர்ச்சையாகிவிடுவர். பின்னர் அதில் மறுமுறையும் ஊதப்படும். அப்போது அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.’ (39:68)

‘(பூமியாகிய) அதன்மீதுள்ள அனைத்தும் அழியக் கூடியதே!’

‘மகத்துவமும் கண்ணியமும் மிக்க உமது இரட்சகனின் (சங்கையான) முகமே நிலைத்திருக்கும்.’
(55:26-27)

முதல் சூர் ஊதி அழிக்கப்பட்டு, அடுத்த சூர் ஊதி மீண்டும் எழுப்பப்படும் வரை ஒரு கால அளவு உள்ளது. அது நாற்பது நாட்களாகவோ நாற்பது மாதங்களாகவோ, நாற்பது வருடங்களாகவோ இருக்கலாம். ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கு நாற்பது என்பது நினைவில் உள்ளது. ஆனால், நாட்களா?, மாதங்களா? வருடங்களா? என்பது மறந்துவிட்டது. எனினும் நாற்பது வருடங்கள் என்றே பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

இந்த நாற்பது வருடங்களில் யாருக்கும் எந்த வேதனையும் இருக்காது. இதன் பின் சூர் ஊதப்பட்டு எழுப்பப்படுவார்கள். அப்படி எழுப்பப்படும் போது எம்மை எமது தூங்கும் தளத்திலிருந்து எழுப்பியது யார்? என்று அவர்கள் கேட்பார்கள். இதனுடைய அர்த்தம் கப்ரில் வாழ்ந்த காலம் முழுவதும் அவர்கள் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதன்று. நாம் ஏற்கனவே கூறிய ஹதீஸை வைத்து இந்த வசனத்தை இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் இப்படித்தான் விளக்குகின்றார்கள். அவர்கள் தூங்கியது குறிப்பிட்ட இந்த காலம் மட்டுமே என்பதே இதன் அர்த்தமாகும். இதற்கு முன்னர் அவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை இது மறுக்காது!

எனவே, குர்ஆனுக்கு முரண்படுகின்றது எனக் கூறி கப்ருடைய வேதனையை மறுப்பதென்பது அறிவீனமானதும், வழிகேடான நிலைப்பாடுமாகும்.

மற்றும் சிலர் அல்லாஹ் வல்லமையைப் புரிந்து கொள்ளாமல் ஒரே கப்ரில் நல்லவரும் கெட்டவரும் அடக்கப்பட்டால் ஒருவருக்கு தண்டனையும் மற்றவருக்கு சுகமும் எப்படி அளிக்கப்படும்? கப்ர் விசாலமாக சாத்தியம் உள்ளதா? உடல்களை மண் தின்றால் எப்படி தண்டனை கொடுக்கப்படும் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியும் கப்ருடைய வேதனையை மறுக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வை உரிய முறையில் நம்பவில்லை என்பதுதான் இதன் அர்த்தமாகும்.

‘அல்லாஹ்வை அவனது கண்ணியத்திற்கு ஏற்றமுறையில் அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன்ளூ யாவற்றையும் மிகைத்தவன்.’
(22:74)

எனவே, அல்லாஹ் நினைத்ததைச் செய்யும் ஆற்றல் உள்ளவன் என்பதை நம்புபவர்களுக்கு இத்தகைய சந்தேகங்கள் எழ முடியாது. எனவே, இது போன்ற வழிகெட்ட சிந்தனையிலிருந்து விலகி எமது கப்ருடைய வாழ்வு சிறக்க இன்றே உரிய முறையில் அமல் செய்வோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *