சமகாலத்தில் சில பள்ளிகளில் மகான்கள், அவ்லியாக்கள் என்று சொல்லி அவர்களது உடல்களை பள்ளியிலேயே அடக்கம் செய்து கொள்ளக்கூடிய செயல்கள் இடம்பெற்று வருவதை காணமுடிகின்றது.
இந்த செயற்பாடானது மார்க்கம் தடுத்த ஒரு செயற்பாடாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் பின்வரும் செயலுக்காக யூத நஸாராக்களை சாபம் செய்தார்கள்.
“யூதர்களையும் கிறிஸ்தவவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் நபிமார்களது கப்றுகளை வணங்கும் இடங்களாக எடுத்துக் கொண்டார்கள்”
புஹாரி: 1/446 | முஸ்லிம்: 1/386
முன் வாழ்ந்த ஒரு சமூகம் இந்த காரியத்தை செய்ததனால் அல்லாஹ்வுடைய சாபத்தை பெற்றிருக்கிறது. அல்லாஹ்வுடைய சாபத்தை பெற்றத்தரக் கூடிய எந்த காரியமாக இருந்தாலும் ஒன்று அது இணைவைப்பாக இருக்கும் அல்லது பெரும்பாவமாக இருக்கும்.
இந்தடிப்படையில் பள்ளிகளில் கப்றுகளை எடுத்துக் கொள்வதானது மனிதனை நேரடியாக இணைவைப்பின் பக்கம் இட்டு செல்லக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.
இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்
பள்ளிவாசல்களில் மரணித்தவர்களை அடக்கம் செய்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்த காரியமாகும். கப்றுகள் மீது பள்ளிகளைக் கட்டுவதும் தடுக்கப்பட்ட காரியமாகும். மரணித்தவர்களது விடயத்தில் இப்படி நடந்து கொள்பவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாபம் செய்து விட்டு தன்னுடைய சமூகத்தையும் அவ்வாறு செய்வதை விட்டும் எச்சரித்தார்கள். அதே போன்று இந்த செயல் யூத கிறிஸ்தவர்களது செயலென்றும் சொல்லித் தந்திருக்கின்றார்கள். மேலும் இந்த செயல் இணைவைப்பின் பக்கம் இட்டு செல்வதற்குறிய சாதனமாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் பள்ளிகளில் மரணித்தவர்களை அடக்கம் செய்வதும் அல்லது கப்றுகளின் மீது பள்ளிகளைக் கட்டுவதும் மரணித்தவர்களது விடயத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தப்பதற்குறிய ஊடகமாக ஆகிவிடும். பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் பிரயோசனங்களையும் தீங்கினையும் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்படாமல் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களுடைய நெருக்கத்தையே பெறவேண்டுமென்ற சிந்தனையையும் ஏற்படுத்திவிடும்.
எனவே ஒவ்வொரு முஸ்லிம்களும் வெளிப்படையான இந்த அபாயகரமான செயலிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியான அகீதாவுக்காகவும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்காகவும் நிறுவப்பட்ட பள்ளிகள் கப்றுகளை விட்டும் பிறிந்தவைகளாகவே இருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்
“பள்ளிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் சேர்த்து வேறு எவர்களையும் அழைக்காதீர்கள்”
(ஸூரதுல் ஜின்:18)
ஆகவே அல்லாஹ்வுடைய எல்லாப் பள்ளிகளும் இணைப்பினுடைய சாயலை விட்டும் நீங்கியதாக இருக்க வேண்டும். அந்த பள்ளிகளில் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் அவன் மாத்திரமே வணங்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் வாஜிபான ஒன்றாகும்.”
(பதாவா அல் அகீதா: பக்கம் 26)
எனவே அன்புள்ள என் இஸ்லாமிய சகோதரர்களே!
பள்ளிகளில் கப்றுகளை கட்டி அவைகளை கண்ணியப்படுத்துகின்ற வண்ணம் நம்முடைய செயல்களை அமைத்துக் கொள்வதானது பகிரங்கமான இணைவைப்பாக இருந்து கொண்டிருக்கின்றது.
அல்லாஹ் எம்மனைவரையும் இந்த இணைவைப்பான காரியங்களிலிருந்து பாதுகாப்பானாக!