கிறிஸ்தவ உலகம் இயேசுவை கடவுள் என்று கூறுகின்றது. இஸ்லாம் இயேசுவை கடவுள் அல்ல கடவுளின் தூதர் என்று கூறுகின்றது. ‘இயேசுவைக் கர்த்தரே! என்று அழைத்தவர்கள் பரலோக இராஜ்ஜியத்தை அடைய முடியாது’ என்று சென்ற தொடரில் பார்த்தோம்.
இயேசுவைக் கடவுள் என்று கூறுவதற்கு அவர் கடவுளின் குமாரன் என்பதையும் கிறிஸ்தவ உலகம் ஆதாரமாகக் கூறுகின்றது. இயேசு கடவுளின் குமாரன் அல்லர், கடவுளுக்கு குமாரன் இல்லை, இயேசு கடவுளோ கடவுளின் பிள்ளையோ அல்லர் என இஸ்லாம் கூறுகின்றது.
இயேசு இறைவனின் குழந்தையா?
இயேசுவை தேவகுமாரன், கடவுளின் பிள்ளை என கிறிஸ்தவ உலகம் நம்புகின்றது. அதற்கான ஆதாரம் என்ன என்று கேட்டால் இயேசு தந்தை இன்றிப் பிறந்தார். எனவே, அவருக்கு கடவுளே தந்தை. இயேசு கடவுளின் குமாரன் என்றால் இயேசுவும் கடவுளின் தன்மையில் பங்குள்ளவர்தான் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இயேசுவிற்கு தந்தை இல்லை. அவர் ஆண் தொடர்பின்றி அற்புதமாகப் பிறந்தவர் என்பதை கிறிஸ்தவ உலகை விட உறுதியாகவே இஸ்லாமிய உலகம் நம்புகின்றது. இயேசு தந்தை இல்லாமல் பிறந்தவர் என்பதால் இயேசுவுக்கு இறைவனே தந்தை என வாதிப்பதை இஸ்லாம் மறுக்கின்றது.
‘அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்’ (ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.’ (3:59)
தந்தை இல்லாமல் பிறந்ததால் இயேசுவுக்கு இறைவனே தந்தை என வாதிப்பதாக இருந்தால் தாயும் இன்றி, தந்தையும் இன்றி படைக்கப்பட்ட ஆதம்(ர) அவர்களையும் கிறிஸ்தவ உலகம் தேவகுமாரன் என்றும் கடவுள் தன்மையில் பங்குள்ளவர் என்றும் கூறவேண்டும். ஆனால், அப்படிக் கூறுவதில்லை. அவர்களின் இந்தக் கொள்கை தவறானது என்பதற்கான தக்க சான்றாக இது திகழ்கின்றது.
தந்தை இல்லாமல் பிறந்ததால், இயேசுவை இறை குமாரன் என்றும் இறைமைத்துவத்தில் பங்குள்ளவர் என்றும் கூறுவதாக இருந்தால் பின்வரும் இந்த நபர் இறை குமாரனாகவும் இறைமைத்துவம் உள்ளவராகவும் இருக்க இயேசுவைவிடத் தகுதியானவர் ஆவார்.
‘இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான். ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர் கொண்டு போய், அவனை ஆசீர்வதித்தான்.’
‘இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.’
‘இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.’
(எபிரேயர் 7:1-2-3)
ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த நீதியின் ராஜா, சமாதானத்தின் ராஜா எனப்படும் இவருக்குத் தகப்பனும் இல்லையாம், தாயும் இல்லையாம். இவ்வகையில் இயேசுவை விட உயர்வு பெறுகின்றார். வம்ச வரலாறும் இல்லாதவர் என்ற அடிப்படையிலும் இவர் உயர்வு பெறுகின்றார்.
இவருக்குத் துவக்கமும் இல்லை, முடிவும் இல்லையாம். இயேசுவுக்கு துவக்கம், முடிவு உண்டு. இதிலும் இயேசுவை விட உயர்ந்தவர். தேவனுடைய குமாரனுக்கு அதாவது, இயேசுவுக்கு ஒப்பாக ஆசாரியனாக நிலைத்து நிற்பாராம். இவ்வாறான தகைமைகள் மிக்க சமாதானத்தின் ராஜாவை, கிறிஸ்தவ உலகம் தேவகுமாரன் என்றோ, கடவுளின் தன்மையில் பங்குள்ளவர் என்றோ கூறுவதில்லை. இப்படி இருக்க தந்தை இல்லாமல் பிறந்தார். எனவே, கடவுளின் குமாரன், கடவுள் தன்மையில் பங்குள்ளவர் என வாதிப்பது முரண்பாட்டின் மொத்த வடிவமாகத் தென்படவில்லையா?
கிறிஸ்தவ நண்பர்கள் இயேசு இறை குமாரன் என்பதற்கு பைபிளே நேரடியாக ஆதாரமாக இருப்பதால் அவரை இறைவனின் குமாரன் என்று நம்புகின்றோம் என்று கூறலாம்.
குமாரன், பிள்ளை என்பதற்கு நேரடியான அர்த்தம் ஒன்று உள்ளது. இன்னாரின் பிள்ளை இவர் என்று கூறினால், அவரின் இந்திரியத்தின் மூலம் கருத்தரித்துப் பிறந்தவர் இவர் என்பதுதான் அர்த்தமாகும். இயேசு இறை குமாரன் என்றால் இறைவனின் இந்திரியத்தால் பிறந்தவர் என்று அர்த்தம் செய்ய முடியாது. அப்படியென்றால் பிள்ளை, குமாரன் என்பதற்கு நேரடி அர்த்தம் செய்ய முடியாது. நேரடி அர்த்தம் செய்ய முடியாவிட்டால் வேறு அர்த்தம்தான் செய்ய முடியும். கடவுளின் பிள்ளை என்பது நல்லவர்களைக் குறிக்கவும், சாத்தானின் பிள்ளைகள் என்பது கெட்டவர்களைக் குறிக்கவும் பயன் படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த அர்த்தத்தில்தான் இயேசு தேவகுமாரன், கர்த்தரின் பிள்ளை என்ற பதம் பைபிளில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பைபிளில் இருந்தே சில ஆதாரங்களை நாம் நோக்கலாம்.
‘அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்ட போது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.’ (மாற்கு- 15:39)
இயேசு தேவகுமாரன் என நூறு பேருக்கு அதிபதியாக இருப்பவர் இச்சம்பவத்தின் போது கூறியதாக மாற்கு கூறுகின்றார்.
இதே நிகழ்ச்சியை லூக்கா குறிப்பிடும் போது இப்படிக் கூறுகின்றார்.
‘நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.’
(லூக்கா – 23:47)
இயேசு நல்லவர் என்று கூறியதாகக் கூறப்படுகின்றது. நல்லவர் என்பதைக் குறிக்கத்தான் தேவகுமாரன் எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். இதை நாம் யூகமாகக் கூறவில்லை. பைபிளின் பல வசனங்கள் இயேசு அல்லாத பலரையும் கடவுளின் பிள்ளைகள் என்று கூறுகின்றது. உதாரணமாக,
01.
‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர் களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர் களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.’
‘இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர், தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.’
(மத்தேயு – 5:44-45)
தீயோருக்கும் நல்லது செய்வோர் பரலோகத்தில் இருக்கும் பிதாவுக்குப் புத்திரராக இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
02.
‘நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.’
‘இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.’
‘என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
‘நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்;. அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.’
(யோவான் – 8:41-44)
இந்த வசனங்களில் இயேசு தன்னை மனிதன் என்றும் தேவ தூதன் என்றும் தெளிவாகக் கூறுகின்றார். கடவுளைப் பிதா என்கின்றார். கெட்டது செய்பவர்களை பிசாசின் பிள்ளைகள் என்கின்றார். நல்லது செய்பவர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்று கூறப்படுகின்றது. பிதா, பிள்ளை என்ற வார்த்தைகள் மாற்று அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக அறியலாம். இயேசு காலத்தில் வாழ்ந்த அவரின் எதிரிகளான யூதர்கள் இயேசு மறைமுகமாகப் பேசுவதை வேண்டுமென்றே மனமுரண்டாகப் புரிந்து கொண்டு மறுத்தார்கள். இப்போது அதே பாணியில் இயேசுவின் மறைமுகமான வார்த்தைக்குத் தப்பான அர்த்தத்தைக் கொடுத்து முரட்டுத்தனமாக அதில் கிறிஸ்தவ உலகு பிடிவாதமாக இருக்கின்றது. இது ஆச்சரியமானதே!
03.
‘தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.’
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.’
(1 யோவான் – 3:9-10)
தேவனின் பிள்ளைகள் என்று நல்லவர்களும், பிசாசின் பிள்ளைகள் என்று கெட்டவர்களும் கூறப்படுகின்றனர். இயேசு தேவனின் குமாரன் என்றால் கடவுளுக்குப் பிறந்தவர் என்பது அதன் அர்த்தம் அல்ல. நல்லவர் என்பதே அதன் அர்த்தமாகும் என்பதை இதன் மூலம் அறியலாம்.
‘பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம் ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.’
(1 யோவான் 4:7)
அன்புள்ளம் கொண்ட அனைவரும் தேவனால் பிறந்தவர்கள் என்றும் அன்புள்ளம் கொண்ட அனைவரும் கடவுளின் குமாரர்கள், கடவுளின் குமாரர்கள் அனைவரும் கடவுள் தன்மையில் பங்குள்ளவர்கள் என்று கூற கிறிஸ்தவ உலகம் தயாரா?
04. ‘மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.’
(ரோமர் 8:14)
கர்த்தரின் சட்டப்படி வாழ்வோர் கர்த்தரின் பிள்ளைகள் என்று இங்கே கூறப்படுகின்றது.
05. ‘கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடை மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும் படிக்கு,’
‘எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.’
(பிலிப்பியர் 2:15-16)
போதனைகளை முகம் கோணாது செய்பவர்கள் தேவனின் மாசற்ற பிள்ளைகள் என்று கூறப்படுகின்றது.
புதிய ஏற்பாட்டில் மட்டுமன்றி பழைய ஏற்பாட்டில் கூட மகன், பிள்ளை என்ற வார்த்தை நல்லவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கே சில உதாரணங்களை சுருக்கமாக நோக்கலாம் என நினைக்கின்றேன்.
‘அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.’
‘எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.’
(யாத்திராகமம் 4:22-23)
இஸ்ரவேல் சமூகம் கடவுளின் சேஷ;ட புத்திரர்கள் என்று இங்கே கூறப்படுகின்றது.
‘நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.’ (2 சாமுவேல் 7:14)
ஸாலமோனுக்கு நான் பிதா. அவர் எனக்கு குமாரன் என்று கூறப்படுகின்றது. சுலைமான் நபிக்கு இறை தன்மையில் பங்கு என்று கூற முடியுமா?
இவ்வாறு பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் கடவுளின் பிள்ளை என்பது நல்லவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே, இயேசுவை பைபிள் தேவ குமாரன் என்று கூறுகின்றது என்பதை வைத்து அவர் கடவுளின் குமாரன் எனவே, இறை தன்மையில் பங்குள்ளவர் என வாதிப்பது தவறானதாகும். இப்படி வாதம் செய்தால் தாவீது, சாலமோன், இஸ்ரவேல் சமூகம் என அனைவரையும் கடவுளின் பிள்ளைகள், கடவுள் தன்மையில் பங்குள்ளவர்கள் என்று வாதிக்க நேரிடும். இந்த வகையில் பார்க்கும் போது இயேசு கடவுளோ, கடவுளின் குமாரனோ அல்லர் என குர்ஆன் கூறும் கூற்றே உண்மையில் அவரை கண்ணியப்படுத்துவதாக அமையும்.
தொடரும்….
இன்ஷா அல்லாஹ்.