Featured Posts

இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? – 01

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
நாம் ஒவ்வொரு நாளும் அமல்களை தொடராக செய்து வருகிறோம்.என்றாலும் அந்த அமல்கள் மூலம் உள்ளத்திற்கு இறையச்சம் வளர்ந்துள்ளதா? என்றால் மிக,மிக, குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் அதற்கு காரணம் என்ன? எங்கயோ ஒரு பிழை நடக்கிறது அதை திருத்திக் கொண்டால் உள்ளத்தில் இறையச்சம் வளர்வதை நாமே உணர முடியும்.
ஒரு அமலை செய்தவுடன் எப்படி உள்ளத்தில் இறையச்சத்தை வளர்ப்பது? அதற்கான வழி என்ன? என்பதை காட்டித் தருவதற்காகவே இந்த கட்டுரைப் பகுதி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு மாதமும் அமல் சம்பந்தமான சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டி உங்களுக்கு வழிக்காட்ட உள்ளேன். அல்ஹம்துலில்லாஹ் !

பொதுவாக வணக்கத்தை இரண்டு விதமாக நோக்கலாம். முதலாவது அன்றாட துஆக்கள் என்றடிப்படையில் ஓத வேண்டிய நாளாந்த துஆக்களாகும். அதாவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட முப்பது து ஆக்களை நாம் ஓத வேண்டியுள்ளது. அதிகாலை எழுந்ததிலிருந்து துாங்குகின்ற வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு துஆ ஓத வேண்டும். உதாரணத்திற்கு துாங்கி எழுந்த உடன், மல, சல, கூடத்திற்கு நுழைவதற்கு முன், வெளியே வந்த உடன், வீட்டை விட்டு போகும் போது, வாகனத்தில் ஏறிய உடன், இறங்கும் போது, இப்படி இடத்திற்கு ஏற்ப நாளாந்தம் துஆக்களை ஓத வேண்டும்.

இரண்டாவது நாளாந்தம் நாம் செய்கின்ற ஏனைய அமல்களாகும். பொதுவாக எந்த ஒரு அமலை செய்வதாலும் அதற்கு முன் அந்த அமல் பற்றிய ஹதீஸ் தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவது அந்த அமல் பற்றிய சிறப்புகள் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் கலந்து செய்தால் தான் சரியான முறையில் இறையச்சத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பின் வரும் இரண்டு ஹதீஸ்களையும் நன்றாக அவதானியுங்கள், அதன் பின் நான் சொல்லித் தரும் விதத்தில் நடைமுறைப் படுத்திப் பாருங்கள்.

வெள்ளிக் கிழமையின் சிறப்புகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளியன்று குளித்துவிட்டு (நேரத்தோடு பள்ளிவாசலுக்கு)ச் செல்பவர், ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். (அதற்கடுத்த) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1540

முதலில் இந்த ஹதீஸை உள்ளத்தில் ஆழமாக பதித்துக் கொள்ளுங்கள்.ஒரு தடவைக்கு இரண்டு தடவை வாசித்துப் பாருங்கள்.இந்த ஹதீஸில் ஆரம்பமாக வெள்ளிக்கிழமை குளிப்பது கடமை என்று கூறுகிறது. அதாவது குளிப்புக் கடமையானால் எப்படி குளிப்பு கடமையோ அது போல வெள்ளிக்கிழமை கட்டாயமாக குளிக்க வேண்டும் என்பதை சொல்வதோடு,அடுத்து முக்கியமான விடயத்தை உற்சாகப் படுத்துகிறது.

பள்ளிக்கு நேரத்தோடு செல்ல வேண்டும். குறிப்பிட்ட முதல் நேரத்தில் செல்பவருக்கு ஒட்டகமும், இரண்டாம் நேரத்தில் செல்பவருக்கு மாடும், மூன்றாம் நேரத்தில் செல்பவருக்கு ஆடும், நான்காம் நேருத்தில் செல்பவருக்கு கோழி குர்பான் கொடுத்த நன்மைகளும்,ஐந்தாம் நேரத்தில் செல்பவருக்க முட்டையைத் தர்மம் கொடுத்த நன்மையும் கிடைக்கிறது.
வெள்ளிக்கிழமை காலையை அடைந்த உடன் முதலில் இந்த ஹதீஸ் தான் நமது சிந்தனைக்கு கொண்டு வர வேண்டும் இன்று பள்ளியில் முதல் குழுவில் நான் சேர வேண்டும் என்ற ஆர்வத்தோடு நேரத்தைக் கடத்த வேண்டும்.

இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் இப்போது நீங்களே மனதில் சந்தோசம் அடைய வேண்டும். அதாவது எனக்கு அந்த பாக்கியம் கிடைத்து விட்டது, என்ற உணர்வை கொண்டு வாருங்கள்..இந்த நேரத்தில் உங்களையறியாமல் ஈமானின் அதிகரிப்பை கண்டு கொள்வீர்கள். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைமுறைப் படுத்தினால் நிச்சயமாக நாளுக்கு நாள் ஈமானின் சுவையை தினமும் சுவைக்கலாம்.

அடு்த்து வரும் ஹதீஸை கவனியுங்கள்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வெள்ளிக்கிழமை வந்துவிட்டால்) பள்ளிவாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு வானவர் நின்றுகொண்டு, முதன்முதலாக நுழைபவரையும் அடுத்து முதலில் நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்கிறார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஜுமுஆவுக்கு வருபவர்களின் நிலையை, இறைச்சி ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார் என்பதிலிருந்து முட்டையை தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார் என்பதுவரை படிப்படியாகக் குறைத்து ஒப்பிட்டுக் கொண்டே போனார்கள். “இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால் பெயர்ப்பதிவேடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன; வானவர்கள் (இமாமின்) உரையில் பங்கேற்கின்றனர்” என்றும் கூறினார்கள். முஸ்லிம் 1555

மேற்ச் சென்ற ஹதீஸில் வெள்ளிக்கிழமை நாளன்று பள்ளிவாசலில் எத்தனை வாசல்கள் உள்ளனவோ அத்தனை வாசல்களிலும் மலக்குமார்கள் நின்று கொண்டு நேரத்தோடு வருபவர்களின் பெயர்களை ஏட்டிலே பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பரில் ஏறிய உடன் மலக்குமார்களின் பதிவு நிறுத்தப்படும். இப்போது வெள்ளிக் கிழமை காலை நேரத்தில் இந்த ஹதீஸையும் தம் கண் முன்னே கொண்டு வர வேண்டும். இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன் எப்படி சரி நான் பள்ளிக்குள் சென்று விட வேண்டும் என்ற ஆர்வத்தோடு காலை நேரத்தை கழிக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் பள்ளிக்குள் சென்று விட்டால் குறிப்பிட்ட சிறப்பு கிடைத்து விட்டது என்று நாமே சந்தோசப் பட வேண்டும். இந்த நேரத்தில் உள்ளத்தில் இறையச்சத்தின் தன்மையை உணர்ந்து கொள்ள முடியும். இப்படி ஒவ்வொரு அமலையும் நடைமுறைப்படுத்தினால் உள்ளத்தில் இறையச்சத்தின் மாற்றத்தை பெற்றக் கொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ் அடுத்த அமலில் சந்திப்போம்.

One comment

  1. Masha Allah I love Allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *