– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –
எமது தாய்த் திருநாடு சுதந்திரம் பெற்று 2016.02.04 ஆம் திகதியுடன் 68 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. பல நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கைவாழ் மக்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறலாம். சில நாடுகள் வாட்டி வதைக்கும் வெப்ப பூமிகளாகும். மற்றும் பல நாடுகள் நடுங்க வைக்கும் குளிர் பிரதேசங்களாகும். இலங்கை மத்திமமான கால சூழலைக் கொண்ட எழில் கொஞ்சும் பூமியாகும்.
சில நாடுகளில் இரவு நீண்டதாகவும் மற்றும் சிலவற்றில் பகல் நீண்டதாகவும் இருப்பதைக் காணலாம். ஆனால், இலங்கையில் இரவு, பகல் என்பன நடுத்தரமானவையாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
பல நாடுகளில் தண்ணீர் முக்கிய பிரச்சினையாக உள்ளது. மூன்றாம் உலகப் போர் நடந்தால் அது தண்ணீருக்காக நடக்கும் போராகவே இருக்கும் என்று கூறத்தக்க அளவுக்கு தண்ணீர் பிரச்சினையை உலகம் சந்தித்து வருகின்றது. ஆனால், இலங்கை நீர் வளம் பெற்ற பூமியாகும்.
அத்துடன், இலங்கை இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு வளமான பூமியாகும். அதன் அமைவிடமும் இலங்கைக்கு உலக அளவில் முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. கடல் போக்குவரத்தின் மையமாக இலங்கை திகழ்கின்றது.
இவ்வாறு எமது தாய் திருநாடு பல்வேறுபட்ட சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டு புகழ்பெற்ற பூமியாக மிளிர்கின்றது என்றால் அது மிகையன்று.
அரேபியர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இலங்கையுடன் நட்புறவையும் வர்த்தகத் தொடர்புகளையும் பேணி வந்துள்ளனர். வர்த்தக நோக்கமாக இலங்கை வந்த அரேபியர்கள், கடலோரப் பிரதேசங்களில் குடியேறி இலங்கையின் வாசனைத் திரவியங்களுக்கும் மாணிக்கக் கற்களுக்கும் சர்வதேச சந்தையிலே மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அரபு தேசத்தில் இஸ்லாம் பரவிய பின்னரும் இந்தத் தொடர்பு நீடித்தது. இலங்கை மன்னர்களும் இந்நாட்டின் மக்களும் அரேபிய முஸ்லிம்களை மதித்தனர்.
இஸ்லாம் அகில உலகும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டது என்று போதிக்கின்றது. எனவே, முஸ்லிம்கள் தாம் செல்லும் இடங்கள் அனைத்தையும் தம் சொந்த தேசமாகவே மதித்து நடந்தனர்.
இந்த நாட்டுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அரேபியர்கள் இங்கே திருமணம் செய்து இங்கேயே வாழத் தலைப்பட்டனர். இந்நாட்டு மக்களில் பலரும் இஸ்லாத்தினால் கவரப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தனர். குறிப்பாக, சோனக இன மக்கள் அதிகமாக இஸ்லாத்தை ஏற்றதினால் இலங்கை முஸ்லிம்கள் சோனகர்கள் என அழைக்கப்பட்டனர்.
இலங்கையில் வசித்த முஸ்லிம்களின் நம்பிக்கை, நாணயம் காரணமாக இலங்கை அரசர்களால் அவர்கள் அரவணைக்கப்பட்டனர். இலங்கை மன்னனின் மெய்ப்பாதுகாவலர்களில் நம்பிக்கைக்குரிய ஊழியர்களாக, மருத்துவர்களாக முஸ்லிம்கள் திகழ்ந்தனர்.
இலங்கையின் வர்த்தக சாம்ராஜ்யம் முஸ்லிம்களின் கையில் இருந்தது. இலங்கை மக்களின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாக முஸ்லிம்கள் திகழ்ந்தனர். இந்த நாட்டின் மீது பற்றும், பாசமும் கொண்டவர்களாகவே முஸ்லிம்கள் திகழ்ந்தனர். பிற்காலங்களில் இலங்கை அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளானது. போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் என தொடர்ச்சியாக மேல்நாட்டவர்களின் ஆக்கிரமிப்புக்குள்ளானது. முஸ்லிம்களும் சில நாடுகளில் குடியேறி அவற்றில் ஆட்சி செய்தனர். உதாரணமாக, இந்தியாவை முஸ்லிம்கள் சுமார் 800 வருடங்கள் ஆண்டுள்ளனர். அவர்கள் இந்தியாவை தம் தாய் நாடாக நினைத்து ஆண்டனர். இந்தியாவின் வளங்களைச் சுரண்டி அரபு நாட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. இந்தியாவிலேயே வாழ்ந்து இந்தியாவிலேயே மரணித்தனர்.
ஆனால், மேலைத்தேயவாதிகள் தாம் ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ள வளங்களைச் சுரண்டி தமது நாடுகளை வளப்டுத்துவதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டனர். முஸ்லிம்கள் நாடுகளைக் கைப்பற்றியதற்கும் மேலைத்தேய நாட்டவர்கள் கைப்பற்றியதற்கும் இடையில் உள்ள பிரதான வேறுபாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
அந்நிய தேசத்தவர் எமது நாட்டை ஆக்கிரமித்த போது முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராகப் போராடினர். சிங்கள மன்னர்களுக்குப் பக்க பலமாக இருந்தனர். இதற்கு மார்க்க ரீதியாகவும், உலக ரீதியாகவும் பல காரணங்கள் இருந்தன.
தனது உடைமையையும், மானத்தையும் பாதுகாக்கப் போராடி மரணிப்பவரை இஸ்லாம் புனிதப் போராளியாகக் கணிக்கின்றது. இந்த தேசத்தை தமது உடைமையாக நினைத்த இலங்கை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராடி உயிர் துறப்பதைப் பாக்கியமாகக் கருதினர்.
அடுத்து, இலங்கையில் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் ராஜாக்களாகவும், கடல் போக்குவரத்தின் விற்பன்னர்களாகவும் முஸ்லிம்கள் திகழ்ந்ததால் அந்நிய ஆக்கிரமிப்பின் மூலம் இதை இழக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, அவர்களுடன் ஜீவாதார காரணத்திற்காகவும் அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
முஸ்லிம்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலும் கடற்கரையோரங்களிலும் அதை அண்டிய பகுதிகளிலுமே வாழ்ந்து வந்தனர். எனவே, அந்நியப் படைகளின் முதல் தாக்குதலுக்கும் எதிர்ப்புக்கும் அவர்களே அதிகளவில் உள்ளாக நேரிட்டது.
அத்துடன், சமய ரீதியில் கிறிஸ்தவத்தை எதிர்த்த முஸ்லிம்கள் குறித்த ஆக்கிரமிப்பின் மூலம் கிறிஸ்தவ மதத்திணிப்பு நடக்கும் என்பதால் தமது உயிரிலும் மேலான மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் போராடவேண்டியேற்பட்டது.
பிரித்தானியாவின் கிறிஸ்தவ மத மாற்றலுக்கு ஏனைய சமயங்கள் உள்ளான போதிலும் முஸ்லிம்கள் அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். அத்துடன் ஆங்கில மொழி மூலம் கிறிஸ்தவ மயமாக்கல் நடப்பதால், ஆங்கிலம் கற்பது ஹராம் என்று மார்க்கத் தீர்ப்புக் கூறி அவர்களையும் அவர்களது மொழியையும் வெறுக்கும் நிலைக்கு முஸ்லிம் சமூகத்தை இஸ்லாமிய அறிஞர்கள் கொண்டு வந்தார்கள். ஆங்கிலத்தை அந்நிய மொழியாகவும், எதிரிகளின் மொழியாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தினர். இவற்றை வைத்து நோக்கும் போது ஏனைய சமூகங்களை விட ஆக்கிரமிப்பாளர்களை முஸ்லிம்கள் வெறுத்திருப்பதைக் காணலாம்.
இலங்கையின் சுதந்திரத்துக்காக இந்நாட்டின் சகல மக்களும் உழைத்துள்ளனர். இதை நாம் இலங்கையின் வரலாற்றுக் குறிப்புக்களை நோக்கினால் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் முஸ்லிம்களும் இலங்கையின் சுதந்திரத்திற்காக ஏராளமான பங்களிப்பினை வழங்கியுள்ளனர் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும்.
ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போகும் போது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்திவிட்டே சென்றனர். இலங்கையில் மட்டுமன்றி அவர்கள் ஆக்கிரமித்த, ஆட்சி செய்த எல்லாப் பகுதிகளிலும் தமது பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் இனவாத, மதவாத தீயை மூட்டிவிட்டே சென்றனர். அந்நியப்படைகளின் இந்த சதிநடவடிக்கையின் காரணமாக நமது நாட்டில் பல இனக்கலவரங்கள் வெடித்தன. இதன் காரணமாக பல்லாயிரம் உயிர்களும் நாட்டின் கோடான கோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டன. இலங்கையின் மதிப்பும், அந்தஸ்தும் சர்வதேச அரங்கில் சரிந்தது.
இனவாத அரசியலின் காரணமாக மொழி வேறுபாடு உருவாகவே அது தமிழ், சிங்கள கலவரமாக வெடித்தது. நாட்டை ஒரு யுத்தப் பேய் பிடித்து ஆட்டியது! சுமார் முப்பது வருடப் போரினால் இலங்கை இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. இந்த இனக்கலவரங்களும், போரும் நடக்காமல் இருந்திருந்தால் இலங்கை சுவர்க்க பூமியாகத் திகழ்ந்திருக்கும். ஆனால், இனவாத, மதவாத சிந்தனைகளால் நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம்.
இப்போது போர் முடிந்துவிட்டது. போரினால் ஏற்பட்ட வடுக்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டிய தருணத்தில் மீண்டும் சில இனவாதப் போய்கள் இரத்தம் குடித்து, பிணம் திண்ணத் துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றன. இனவாதப் போரினால் ஏற்பட்ட இழப்புக்களை நிரப்பவில்லை, காயங்கள் இன்னும் முழுமையாய் ஆறவில்லை. அதற்குள் மீண்டும் இந்நாட்டுக்கு இன, மத முறுகலை ஏற்படுத்தி அதன் மூலம் மீண்டும் நாட்டை சீரழிக்க முயற்சிக்கும் சக்திகளை, நாட்டின் நன்மதிப்பைக் கெடுக்கும் தீவிரவாதக் குழுக்களை தேசத் துரோகிகளாக மக்கள் சரியாக அடையாளம் காண வேண்டும். இதுவே எமது சுதந்திரத்தின் வேண்டுதலாகும்.
இன்று முஸ்லிம்களின் தேசப்பற்றின் மீது சந்தேகப் பார்வைகள் பாய்கின்றன. தேசத் துரோகிகள் சிலர் தேச பக்தர்களாக வேடம் பூண்டுள்ளனர்.
தேச பக்தி என்பது தேசத்தின் நலனிலும் தேசத்தில் வாழும் மக்களின் நலனிலும் காட்டும் அக்கறையில்தான் தங்கியுள்ளது. தேசத்தில் உள்ள ஒரு சமூகத்தின் நலனுக்காக மட்டும் குரல் எழுப்புவதும் தேசத்தில் வாழும் ஏனைய சமூக மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதும் தேசபக்தி கிடையாது! அது தேசத்தை சீரழிக்கும் இனவாத வெறியாகும்.
எனவே, அற்ப அரசியல் ஆதாயத்திற்காக இனவாதத் தீயை மூட்டுபவர்கள் தேசத் துரோகிகளே! தேசத்தின் வளங்களை சுரண்டுபவர்கள், இலஞ்சப் பேர்வழிகள், போதைப் பொருள் வியாபாரிகள், வரி மோசடியாளர்கள் அனைவரும் தேச துரோகிகளே! தேசப்பற்றையோ தேசத்துரோகத்தையோ இனத்தையோ, மதத்தையோ வைத்து மதிப்பிட முடியாது செயற்பாடுகளை வைத்தே மதிப்பிட முடியும்.
இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் இந்த நாட்டின் இறைமைக்கு சவால் விடாத ஒரு சமூகமாக திகழ்கின்றனர். சில தேசத் துரோகிகள் இனங்களுக்கிடையே சந்தேகத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்துவதற்காக இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி வாய் கிழிய கத்த ஆரம்பித்துள்ளனர்.
இஸ்லாம் பயங்கரவாத்தை ஒரு போதும் ஆதரிக்காது, இலங்கை முஸ்;;;லிம்கள் அமைதியையும், நிம்மதியையும் விரும்புபவர்கள். எனவேதான் இலங்கையில் பல இனவாத நெருக்கடிகளை அவர்கள் சந்தித்த போதும், போரின் போது இனச் சுத்திகரிப்பைச் சந்தித்து இன்று வரை சொந்த தேசத்தில் அகதி முத்திரையுடன் வாழ்ந்து வந்தாலும், ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைக்காது ஜனநாயக நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் அனைத்தும் ஐளுஐளுஇ போகோ ஹராம் போன்ற அமைப்புக்களை, இஸ்லாமிய அமைப்புக்களே அல்ல. இஸ்லாத்தின் எதிரிகள் உருவாக்கிய போலி அமைப்புக்கள் என்ற கருத்தில் உறுதியாக இருக்கின்றனர். எனவே, வீணான சந்தேகங்கள் களையப்பட வேண்டும்.
நல்லாட்சி மலர்ந்துள்ள இச்சூழலில் நாட்டு மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையும், நல்லெண்ணமும் மலர வேண்டும். சகல இன மக்களும் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழும் நிலையே உண்மையான சுதந்திரமாகும். எனவே, நாட்டு மக்களுக்கு மத்தியில் நல்லுறவை வலுப்படுத்தி இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் தேசத் துரோகிகளையும் புறக்கணிக்க வேண்டும்.
இலங்கை எங்கள் அனைவரதும் தாய்நாடு! அதில் வாழும் நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற தாரக மந்திரத்துடன் முன்னேற முயற்சிப்போமாக!