எம்.ஏ.ஹபீழ்
அண்மைக்காலமாக இலங்கையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, எல்லா மட்டத்திலுள்ளவர்களின் பேசுபொருளாக மாறியுள்ள முஸ்லிம் தனியார் சட்டச் சீராக்கத்தின் முக்கிய விடயப் பொருளாகக் காணப்படும் பெண்னின் திருமண வயது, பலதார மணம், திருமண ஒப்பந்தத்தில் பெண் கையொப்பமிடுதல், பெண் காழி நியமனம், வாதாட்டத்தில் சட்டத்தரணிகள் கலந்து கொள்ளல் என்பவை குறித்து மேற்கிளம்பியுள்ள பாரிய சர்ச்சை தொடர்பாக இவ்வாக்கம் தர்க்க ரீதியாக ஆராய்கிறது.
இலங்கையில் பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்ட, தவிர்க்க முடியாத ஒரு கலாசாரப் பாண்பாட்டியல்புகளோடுள்ள சமூகமாக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். பன்மைத்துவ மத, கலாசாரப் பின்னணிகளைக் கொண்டு வாழும் மக்களைக் கொண்ட இலங்கையில், அவர்களின் நம்பிக்கைகளுக்கு ஏற்றாற்போல் தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
முஸ்லிம் தனியார் சட்டம், பல்வேறு பரிமாணங்களை உள்வாங்கி, சிங்கள மன்னர்கள் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை நான்கு கட்ட வரலாற்றை கடந்து, சிற்சில மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது. எனினும், அண்மித்த அரை நூற்றாண்டு கால இடைவெளியில் எவ்வித மாற்றமும் சீராக்கமும் கொண்டு வராப்படவில்லை என்ற விமர்சனம் இலங்கையில் ஒரு கொதி நிலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, இத்தகைய கொதிப்பான சூழ்நிலையில் சன்மார்க்க நிழலிலும் சட்ட ஒழுங்கினடிப்படையிலும் ஒரு சீராக்க சிந்திப்பு இன்றியமையாததாக உள்ளது. எனவே, இது தொடர்பான விடயங்களை இவ்வாக்கம் ஆராய்கிறது.