Featured Posts

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -10

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –
ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்கமாட்டார் என்பதே பைபிளின் அடிப்படையான போதனையாகும். ‘ஒரே தேவனை வணங்குவதும் இயேசுவை இறைத் தூதராக விசுவாசிப்பதுமே நித்திய ஜீவனுக்கான வழி’ என்றே இயேசு போதித்தார். இந்த போதனைக்கு முரணானதாக இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி மனித குலத்தின் பிறவிப் பாவத்தை போக்கினார் என்ற கொள்கை திகழ்கின்றது என்பதை சென்ற இதழில் விரிவாக நோக்கினோம்.

இயேசுவின் சிலுவை மரணத்தை விசுவாசிப்பதுதான் நித்திய ஜீவனுக்கான வழியென்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையாக இது பார்க்கப்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையாக இது இருப்பதால், இது குறித்து ஏகோபித்த குரலில் சுவிசேஷங்கள் பேச வேண்டும். ஆனால், பைபிளை ஆராய்ந்தால் இயேசுவின் சிலுவை மரணத்துடன் தொடர்புட்டு பேசப்படும் செய்திகளில் ஏராளமான முரண்பாடுகளைக் காண முடியும். இந்த முரண்பாடுகள், குறித்த சம்பவத்தில் பலத்த சந்தேகத்தை எற்படுத்தவல்லவையாகும்.

‘மேலும் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹை நாமே கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதினாலும் (சபிக்கப்பட்டனர்.) அவர்கள் அவரைக் கொலை செய்யவும் இல்லைளூ அவரைச் சிலுவையில் அறையவும் இல்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டோர் அவர் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை.’
(அல்குர்ஆன் 4:157)

மேற்படி வசனத்திற்கு ஏற்ப இயேசுவின் சிலுவை மரணம் குறித்து பேசும் புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் பலத்த முரண்பாட்டில் இருப்பதைக் காணலாம்.

இயேசுவின் சிலுவை மரணம் குறித்துப் பேசும் சுவிசேஷகத்தை எழுதியவர்கள் இயேசுவின் சீடர்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால், அவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்லர். லூக்கா, மாற்கு ஆகியோர் இயேசுவின் சீடர்கள் அல்லர் என்பதை கிறிஸ்தவ அறிஞர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். மத்தேயு என்ற இயேசுவின் சீடரால் எழுதப்பட்டது அல்ல மத்தேயு சுவிசேஷம் என்பதை மத்தேயு 9:9 ஐ வாசிக்கும் போது புரியலாம்.

அத்துடன் இயேசுவின் சீடர்கள் எவரும் இயேசுவின் சிலுவைக் காட்சியை நேரடியாகக் கண்டவர்கள் அல்லர்.

‘அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.’
(மாற்கு 14:50)

இந்த வசனத்தின் படி இயேசுவின் சீடர்கள் அனைவரும் அவரை விட்டும் ஓடிவிட்டனர். எனவே, இயேசுவின் சிலுவை மரணத்தைக் கண்ணால் கண்ட சீடர்களால் இது எழுதப்படவில்லை என்பது உறுதியாகும்.

கணக்கு குழப்பம்:

இயேசு தனது சீடர்களில் இருவரை பஸ்காவைப் பலியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அனுப்பினார் என மாற்கு 14:12-14 கூறுகின்றது.

‘பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.’

‘அவர் தம்முடைய சீடரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்.’

‘அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக் கிறானோ, அந்த வீட்டு எஜமானை நோக்கி: நான் என் சீடரோடு கூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.’
(மாற்கு 14:12-14 )

எனவே, இறுதி நேரத்தில் இயேசுவின் சீடர்களில் இருவர் இருக்கவில்லை என்பதை அறியலாம்.

‘சாயங்காலமான போது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.’
(மாற்கு 14:17)

ஏற்கனவே இருவரை அனுப்பிவிட்டார். அதன் பின்னர் மீதி பத்துப் பேருடனும் சென்றார் என்பதைக் கூறுவதற்குப் பதிலாக 12 பேருடனும் சென்றார் என்று இடம்பெற்றுள்ளது.

ஒருஅதிகாரத்திற்குள்ளேயே இந்த முரண்பாட்டைக் காணலாம். இதை அவதானிக்கும் போது சுவிசேஷங்களுக்கிடையே நிறைய கையாடல்கள் நடந்திருப்பதை அறியலாம்.
‘அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப் போட்டார்கள்.’
(லூக்கா 23:34)

இயேசு யூதர்களுக்காக மன்னிப்புக் கேட்டதாக லூக்கா மட்டும் கூறுகிறார். இவர் இயேசுவின் சீடர் அல்லர். இயேசுவின் சீடர்களுக்குத் தெரியாதது, இவருக்கு எப்படித் தெரிந்தது என்ற கேள்வியை எழுப்பினால் ‘சும்மா’ பல செய்திகள் சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.

இயேசுவைப் பிடிக்க வந்தவர்கள் யார்?:

‘அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.’
(மத்தேயு 26:47)

பிரதான ஆசாரியார், பெரும் திரளான மக்கள் வந்ததாக இங்கே கூறப்படுகின்றது.

மாற்கு 14:43 இல் வேத பாரகரும் வந்ததாகக் கூறப்படுகின்றது.

‘யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக் கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங் களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.’
(யோவான் 18:3)

இங்கே போர் வீரர்கள், ஊழியர்கள் வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆசாரியர்கள் பற்றி இங்கே கூறப்படவில்லை.

இயேசுவைப் பிடிக்க வந்தவர்கள் யார் என்பதில் நால்வரும் நாலுவிதமான கருத்தைச் சொல்கின்றனர்.

காட்டிக் கொடுத்த விதம்:

இயேசுவை ‘யூதாஸ்’ என்ற இயேசுவின் சீடர்தான் காட்டிக் கொடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. இயேசு பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்தார், அற்புதங்கள் செய்தார். அவரைக் காட்டிக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. இருப்பினும் பைபிள் அப்படிச் சொல்கின்றது.

யூதாஸ், ‘நான் யாரை முத்தமிடுகின் றேனோ அவர்தான் இயேசு’ என்று கூறியதாக சில சுவிசேஷங்கள் கூறுகின்றன. இதை லூக்கா இப்படிக் கூறுகின்றார்.

‘அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.’

‘இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய் என்றார்.’
(லூக்கா 22:47, 48)

யூதாஸ் முத்தமிடவில்லை. முத்தமிட வந்தான், முத்தமிட்டு என்னைக் காட்டிக் கொடுக்கப் போகின்றாயா என இயேசு கேட்டதாக இங்கே சொல்லப்படுகின்றது.

‘அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ் செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.’

‘உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ் செய்தான்.’
(மத்தேயு 26:48, 49)

முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்ததாக இங்கே சொல்லப்படுகின்றது. இதே கருத்தைத்தான் மாற்கு 14:44, 45 இலும் கூறப்படுகின்றது.

இவர்கள் இருவரும் முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்ததாகக் கூறுகின்றனர். முத்தமிடப் போனதாகவும், முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கப் போகின்றாயா? என இயேசு கேட்டதாகவும் லூக்கா கூறுகின்றார். யோவான் 18:4-8 இயேசு தானாக முன்வந்து நான்தான் இயேசு என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டதாகக் கூறுகின்றார்.

மூன்று முரண்பாடான தகவல்களை நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. இதில் எதை ஏற்பது? நான்குமே பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்பட்டது என்றால் ஒன்று போல் இருக்க வேண்டும். இந்த முரண்பாடுகள் இந்த சம்பவத்தின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தப் போதுமானதாகும்.

சபை எப்போது கூடியது?:

இயேசுவைப் பிடித்து விசாரித்தார்கள் என அனைவரும் கூறுகின்றனர். இயேசுவைப் பிடித்த மறுநாள் காலையில் இந்த விசாரணை நடந்தது என லூக்கா (22:66-67) கூறுகின்றார்.

ஆனால், மாற்கு (14:53), மத்தேயு (26:57), யோவான் (18:3) ஏனைய மூவரும் பிடித்ததும் விசாரணை சபைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறுகின்றனர். இதில் தெளிவான முரண்பாட்டைக் காணலாம்.

சேவல் எத்தனை முறை கூவியது?:

இயேசுவின் சீடர் ‘பேதுரு’ என்பவர் சேவல் கூவுவதற்கு முன் இயேசுவை மூன்று முறை மறுப்பார் என இயேசு முன்னறிவிப்புச் செய்தாராம்.

‘உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதான்.’ (மாற்கு 14:72)

சேவல் இரண்டு முறை கூவுவதற்குள் பேதுரு மூன்று முறை மறுப்பான் என்று இங்கே கூறப்படுகின்றது.

லூக்கா 22:61, மத்தேயு 26:75, யோவான் 18:27 ஆகிய வசனங்களில் சேவல் ஒரு முறை கூவுவதற்கு முன்னர் மூன்று முறை மறுப்பாய் என்று கூறியதாக வந்துள்ளது.

சேவல் கூவியது ஒரு முறையா? அல்லது இரு முறையா? என்பதில் தேவ ஆவியால் உந்தப்பட்டு எழுதியவர்கள் முரண்படுகின்றனர்.

பேதுரு அடையாளம் காணப்பட்ட இடம்:
பேதுருவை அவர்கள் மூன்று முறை அடையாளம் கண்டு விசாரித்த போது அவன் மூன்று முறையும் மறுத்ததாக பைபிள் கூறுகின்றது. முதன் முதல் ஒரு பெண்தான் அவனை அடையாளம் கண்டாள். ஆனால், அடையாளம் கண்ட இடம் பற்றி வித்தியாசமான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

‘பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.’

‘அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீடரில் ஒருவனல்லவா என்றாள். அவன் நான் அல்ல என்றான்.’
(யோவான் 18:16-17)

வாசலில் வைத்து வாயில் காக்கும் பெண் மூலம் அடையாளம் காணப்பட்டதாக இங்கே கூறப்படுகின்றது.

அரண்மனை முற்றத்தில் ஒரு வேலைக்காரி அடையாளம் காட்டியதாக மத்தேயு 26:69, மாற்கு 14:66, லூக்கா 22:55 கூறியதாக உள்ளது.

வாயில் காப்பாளியாக இருந்த பெண் வாயிலில் வைத்து அடையாளம் காட்டினாளா அல்லது வேலைக்காரி முற்றத்தின் நடுவில் குளிர் காயும் போது அடையாளம் காட்டினாளா என்பதில் முரண்பாடு நிலவுகின்றது.

இரண்டாம், மூன்றாம் முறை அடையாளம் காட்டியது யார்?:

பேதுருவிடம், ‘நீயும் அவர்களுடன் உள்ளவன்தானே?’ என்று கேட்கப்படுகின்றது. முதன் முதலில் ஒரு பெண்தான் அடையாளம் கண்டாள் என்று உள்ளது. இரண்டாவது, மூன்றாவது அடையாளம் கண்டது யார் என்பதில் பலத்த முரண்பாடு உள்ளது.

¦ முதலில் அடையாளம் கண்ட அதே பெண்தான் இரண்டாவது முறையாகவும் அடையாளம் காட்டினாள்.

‘வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.’
(மாற்கு 14:69)

¦ வேறு ஒரு வேலைக்காரி இரண்டாம் முறை அடையாளம் காட்டினாள்.

‘அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடே கூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.’
(மத்தேயு 26:71)

¦ ஒரு ஆண் இரண்டாம் முறை பேதுருவை அடையாளம் கண்டான்.

‘பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.’
(யோவான் 18:26)

இதே செய்தியை யோவான் 18:25 இலும் கூறும் போது ஒரு பெண் அல்லது ஆண் என்பதற்கு மாற்றமாக சிலர் அடையாளம் காட்டியதாகக் கூறுகின்றார்.

ஒரே செய்தியை முரண்பட்ட நான்கு விதத்தில் பைபிள் முன்வைப்பது அவதானிக்கத்தக்கதாகும்.

மூன்றாவது முறை பேதுருவை அடையாளம் கண்டது யார்? என்பது பற்றிக் கூறும் போது ஒரு கூட்டம் அடையாளம் கண்டதாக மாற்கு 14:70-71, மத்தேயு 26:73-74 ஆகியோர் கூறுகின்றனர்.

ஆனால், பிரதான ஆசாரியரின் வேலைக்காரர்களில் ஒருவர் அடையாளம் காட்டியதாக யோவான் 18:26 கூறுகின்றார்.

யாரோ வேறு ஒருவன் அவரை அடையாளம் காட்டியதாக லூக்கா (22:59) இப்படி ஒரு செய்தியைச் சொல்வதிலேயே ஏராளமான முரண்பாடுகள் மலிந்து கிடப்பதைப் பார்க்கும் போது ஒட்டுமொத்த செய்தியிலேயே சந்தேகம் எழுவது நியாயமல்லவா?

One comment

  1. சார் பஸ்கா பண்டிகையைக் குறித்து விரிவாக எழுதலாமே உங்கள் பதிவுகள் மிகவும் ஆய்வுகூடமாக திகழ்கிறது சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்கிற ரீதியான உங்கள் பதிவுகள் பெருமைக்குரியதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *