உள்ளடங்கள் மாற்றியமைக்கப்பட்ட மறுபதிவு….
ஆசிரியர் பக்கம்
இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும்
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட ஒரு கூட்டம் துடியாய்த் துடிக்கின்றது. இருப்பினும் சதி வலைகளை யெல்லாம் கிழித்துக் கொண்டு சத்திய ஜோதி அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. பாறைகளைத் தகர்த்து பாதைகள் அமைத்து இஸ்லாமிய ஜோதி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி சத்தியம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّـهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّـهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
‘அல்லாஹ்வின் ஒளியை அவர்கள் தமது வாய்களால் (ஊதி) அணைத்துவிட விரும்புகின்றனர். இந்நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தனது ஒளியைப் பூரணப்படுத்தியே தீருவான்.’
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
‘இணைவைப்பாளர்கள் வெறுத்த போதிலும் அனைத்து மதங்களை விடவும் இ(ச்சத்திய மார்க்கத்)தை மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு அனுப்பி வைத்தான்.’
(61:8-9)
அல்லாஹ்வின் ஒளியை அணைக்க நினைப்பவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்வார்கள் அல்லது அந்த ஒளியால் அரவணைக்கப்பட்டு முஸ்லிமாக மாறிவிடுவார்கள் இதைத்தான் இஸ்லாமிய வரலாறு காட்டிக் கொண்டிருக்கின்றது.
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் கற்பிப்பதற்காக செப்டம்பர் 11 தாக்குதலை அமெரிக்காவே திட்டமிட்டு நடத்தியது. இதைச் சாட்டாக வைத்து ஆப்கானை அழித்தது. இஸ்லாமிய உலகு மீது குண்டு மழை பொழிந்து இரத்த ஆற்றை ஓடச் செய்தது. ஆனால், இந்த சதி நடவடிக்கையால் உலகமெங்கும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத்துவங்கியது.
கடந்த பத்து வருடங்களில் அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவும் மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது. 2000 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனாக (பத்து இலட்சமாக) இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்று (2012) 2.6 மில்லியனாக (அதாவது, இருபத்தி ஆறு இலட்சமாக) மாறியுள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளதாக நிவ்யோர்க் டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது. (NEWYORK DAILY NEWS – Thursday, May 03, 2012) பத்து வருடங்களுக்குள் 150% வளர்ச்சியைக் கண்டுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.
இஸ்லாத்தை எதிர்ப்பதிலும் அழிப்பதிலும் முன்னிலையில் இருக்கும் அமெரிக்காவில் இஸ்லாம் ஆகா! ஓகோ! என வளர்ந்து வருவதை புள்ளிவிபரங்கள் உறுதி செய்கின்றன. 1970 இல் அமெரிக்காவில் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இருந்தார்கள். 2008 இல் ஒன்பது மில்லியன்களுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதாக அண்மைய தகவல்கள் கூறுகின்றன.
உலகம் மாறிக் கொண்டிருக்கின்றது. நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்று கூறி இஸ்லாமிய எதிர்ப்புச் சக்திகளை உசுப்பேத்திவிடும் விதத்தில் 25.04.2009 இல் கனடா மீடியாவில் 25 வருட எதிர்வு கூறல் எச்சரிக்கை பொதிமெட் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில்,
‘2027 இல் பிரான்ஸில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார் என்றும் இன்னும் 39 வருடங்களுக்குள் பிரான்ஸில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருப்பார்கள்’ என்றும் கூறுகின்றது.
செப்டம்பர் தாக்குதல் நடாத்தப்பட் ட அந்த ஆண்டில் மட்டும் பிரான்ஸில் 50000 பேர் இஸ்லாத்தை ஏற்றதாக மற்றுமொரு தகவல் சொல்லப்படுகின்றது.
தொடர்ந்து கனேடிய ஆய்வுத் தகவல் இப்படிச் சொல்கின்றது,
‘பிரான்ஸில் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் 82000 ஆக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை தற்போது இருபத்தைந்து இலட்சமாக மாறியுள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 மடங்காக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் 1000 பள்ளிகள் உள்ளன. அதில் அதிகமானவை ஏற்கனவே கிறிஸ்தவ ஆலயங்களாக இருந்து பள்ளிகளாக மாறியவையாகும் என்று அந்த அறிக்கை கூறுகின்றது. இது 2009 ஆம் ஆண்டுக்குரிய தகவல்தான். தற்போதைய எண்ணிக்கை இதை விட அதிகமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.’
நெதர்லாந்தில் தற்போது பிறக்கும் குழந்தைகளில் 50% முஸ்லிம்கள் என்றும் இன்னும் 15 வருடங்களுக்குள் நெதர்லாந்தில் முஸ்லிம்கள் 50% மாக இருப்பார்கள் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறிப்பிட்ட 15 வருடங்களில், சுமார் ஏழு வருடங்கள் கடந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ரஷ்யாவில் ஐந்து பேரில் ஒருவர் முஸ்லிமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. பெல்ஜியத்தில் 2025 இல் பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை முஸ்லிமாக இருக்கும் என்றும் 2050 இல் ஜேர்மன் முஸ்லிம் நாடாக மாறும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமன்றி தற்போது ஐரோப்பாவில் 52 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாகவும் இன்னும் 20 வருடங்களுக்குள் இது இரு மடங்காக மாறும். (அதாவது, 104 மில்லியனாகும்) எனவும் ஜெர்மன் அரசே அறிவித்துள்ளது.
ஒரு மணித்தியாலத்திற்குள் இருவர் என்ற விகிதத்தில் அல்மானியாவில் மக்கள் இஸ்லாத்தில் இணைவதாக அல்மானிய அரசே அறிவித்துள்ளது. இவ்வாறு உலகம் பூராக இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. நெருப்புக்குள் இப்றாஹீம் நபியைப் பாதுகாத்த, பிர்அவ்னின் வீட்டிலேயே மூஸா நபியை வளர்த்தெடுத்த அந்த அல்லாஹ் எதிரிகளுக்குள் இந்த இஸ்லாத்தைப் பாதுகாத்து வளர்த்து வருகின்றான். இஸ்லாத்தின் எதிரிகளின் வீட்டுக் கதவுகளையும் இஸ்லாமிய தூது தட்டுகின்றதுளூ அவர்களின் உள்ளங்களையும் ஈர்த்து வருகின்றது.
நபியவர்கள் இஸ்லாம் இப்படிப் பரவும் என்பதை முன்னறிவிப்புச் செய்தார்கள். ‘எனக்கு பூமி சுருக்கிக் காட்டப்பட்டது. அதன் கிழக்கு மேற்கையெல்லாம் இந்த உம்மத் அடையும்’ என்றார்கள். இந்த ஹதீஸில் சில எச்சரிக்கைகளையும் நபியவர்கள் செய்தார்கள். ஒன்று, வழிகெடுக்கும் தலைவர்கள் பற்றி எச்சரித்தார்கள். தம்மை நபியென வாதிடும் முப்பது பெரும் பொய்யர்கள் இந்த உம்மத்தில் தோன்றுவார்கள் எனக் கூறினார்கள்.
அடுத்து, முஸ்லிம்களுக்குள்ளேயே நடக்கும் மோதல்கள் குறித்தும் நபியவர்கள் எச்சரித்தார்கள். இஸ்லாம் வளர்ந்து வரும் இச்சூழலில் இஸ்லாத்தை வாழவைப்பதாக இருந்தால் நாம் நமது அகீதாவை சீர் செய்ய வேண்டும். உட்பூசல்களைத் தவிர்க்க வேண்டும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது.
وَعَدَ اللَّـهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُولَـٰئِكَ هُمُ الْفَاسِقُونَ
‘உங்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்தோருக்கு இவர்களுக்கு முன்னுள்ளோர்களை பூமியில் அதிபதிகளாக்கியது போன்று இவர்களையும் ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப்படுத்துவதாகவும், இவர்களது அச்சத்திற்குப் பின்னர் நிச்சயமாக பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னரும் யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள்தாம் பாவிகள்.’ (24:55)
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
‘நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸகாத்தையும் கொடுங்கள், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்.’ (24:56)
لَا تَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا مُعْجِزِينَ فِي الْأَرْضِ ۚ وَمَأْوَاهُمُ النَّارُ ۖ وَلَبِئْسَ الْمَصِيرُ
‘நிராகரித்தோர் இப்பூமியில் தப்பித்துக் கொள்ளக் கூடியவர்கள் என்று நிச்சயமாக (நபியே!) நீர் எண்ண வேண்டாம். நரகமே அவர்களின் ஒதுங்குமிடமாகும். செல்லுமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்.’ (24:57)
ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்பவர்களுக்கு அதிகாரத்தைத் தருவதாகவும் அவர்களின் மார்க்கத்தை பூமியில் நிலைபெறச் செய்வதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். அதற்காக அல்லாஹ் ஒருவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்றும் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஸகாத்தைக் கொடுத்து வர வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
நாம் நம்மை சீர் செய்து கொண்டால் அல்லாஹ் இந்த தீனை அதிகாரம் பொருந்தியதாக ஆக்குவான் என்பது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். ஜனநாயகத்தைப் போற்றும் இந்த நாடுகளில் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துவிட்டால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.
எனவே, இஸ்லாத்தின் எதிரிகளின் சதிவலைகள் தகர்ந்துவிடும், காபிர்களை முறியடித்து இயலாமலாக்கிவிட முடியாது என எண்ணிக் கொள்ள வேண்டாம் என்றும் இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.
எனவே, இஸ்லாமிய ஜோதி என்பது சூரியனைப் போன்றது. அதிலிருந்து பயன்பெறுபவன் பெறலாம். அழிக்கும் நோக்கில் அதை நெருங்கினால் சுட்டெரித்துவிடும். வாய்களால் ஊதி அணைத்து விட இஸ்லாம் ஒன்றும் கற்பூர தீபம் அல்ல! அது கதிரவன்! இதையே இஸ்லாமிய வரலாறு பல சான்றுகளுடன் உறுதி செய்கின்றது.
எனவே, இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளைக் கண்டு மனம் தளர்ந்து மடிந்து போகாமல் சத்தியப் பாதையில் எமது இலட்சியப் பணிகளை துணிவோடு முன்னெடுப்போம். இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்,.. இதுவே வேத சத்தியம்!,…..
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
‘நீங்கள் மனம் தளர வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்கள்தான் மிக உயர்வானவர்கள்.’ (3:139)