Featured Posts

தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது

அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று செயற்படும் போதுதான் இனவாதம், மதவாதம், வன்முறைகள், வெறியாட்டங்கள் உண்டாகுகின்றன.

இந்த இனவாத, மதவாத செயற்பாடுகள் எங்கும் வளர்ச்சிக்கு வழியாக அமைந்திருக்காது. அழிவுக்கான அடித்தளமாகவே அமைந்துள்ளன. இலங்கை வரலாறும் இதற்குச் சான்றாகும்.

1505 இல் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும் போது இலங்கையில் இரண்டு சிங்கள அரசுகளும் ஒரு தமிழ் அரசும் இருந்துள்ளது. 1518 இல் கோட்டை சிங்கள அரசும் 1519 இல் இலங்கை யாழ்ப்பாண தமிழ் அரசும் போர்த்துக்கேயர் வசனமானது. 1815 இல் கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. ஒட்டுமொத்த இலங்கையும் அந்நியர் வசமானது. ஆங்கிலேயர் தமது நிர்வாக வசதிக்காக 1833 இல் ஒற்றையாட்சிக்குள் இலங்கையைக் கொண்டு வந்தனர்.

அந்நியர் எமது நாட்டை ஆண்டதில் எமக்குக் கிடைத்த பெரிய நன்மைகளில் ஒன்றுதான் முழு நாடும் ஒன்றானதாகும். ஆனால், தமிழ் பேசும் மக்களுக்கு இது ஒரு இழப்பை ஏற்படுத்தியது. நாட்டில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். அவர்களுக்கென தனி அரசு இருந்தது. ஒன்றுபட்ட நாடு என்று வரும் போது ஒட்டுமொத்த நாட்டிலும் அவர்கள் சிறுபான்மையாகின்றனர். தமிழ் பேசும் மக்களின் தனிப்பட்ட நலனைப் பார்க்கும் போது இது நஷ்டமாக இருந்தாலும் நாட்டுக்கு நலமாகும்.

இதே நிலைதான் இன்று வடக்கையும், கிழக்கையும் இணைப்பதா? பிரிப்பதா? என்ற பிரச்சினைக்குப் பின்னாலும் உள்ளது வடக்கில் தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் போது, கிழக்கில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

வடக்கும், கிழக்கும் பிரிந்திருந்தால் நாட்டில் ஒரு மாகாணத்தில் தமிழர்களும் மற்றுமொரு மாகாணத்தில் முஸ்லிம்களும் ஏனைய மாகாணங்களில் பௌத்தர்களும் பெரும்பான்மையாக இருப்பர். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் நாட்டில் எந்த மாகாணத்திலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கமாட்டார்கள். எனவே, வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று இந்துக்களும், இணைக்கக் கூடாது என முஸ்லிம்களும் நினைக்கின்றனர். இந்த நிலை நீடித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, தமிழ் பேசும் இந்துக்களினதும், முஸ்லிம்களினதும் பூர்வீக பூமிகள் காவு கொள்ளப்படுகின்றன. தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் விழிப்படையும் போது சனத்தொகை பரம்பலில் பாரிய முன்னேற்றத்தை சிங்கள சமூகம் வடகிழக்கில் ஏற்படுத்தியிருக்கும்.

அவர்கள் பெரும்பான்மையாக இருந்தால் நாம் நசுக்கப்படுவோம் என்ற அச்சம், நாட்டில் எந்தப் பகுதியிலும் சிங்கள மக்கள் சிறுபான்மையாக இருக்கக் கூடாது என்ற மேலாதிக்க எண்ணம், சில அரசியல் தலைவர்களின் இன ரீதியான அரசியல் நலன் என பல காரணிகள் இதற்குப் பின்னால் மறைந்துள்ளன.

ஆங்கிலேய அரசு தேயிலை, கோப்பித் தோட்டங்கள் மூலம் ஆதாயம் அடையத் திட்டமிட்டது. இதனால் பெரும்பான்மை சிங்கள மக்களது காணிகள் சுவீகரிக்கப்பட்டன. தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்நிய அரசுக்கு சிங்களத் தொழிலாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர்.

எனவே, சிங்கள மக்களைத் தண்டிக்கவும் தமது ஆதாய அரசியலை அடையவும் இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் மலையகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு லயன்கள் அமைக்கப்பட்டன. இதனால் சிங்கள மக்களும் ஓரளவு முஸ்லிம்களும் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். ஆனால், 18-19 ஆம் நூற்றாண்டில் இலங்கை பொருளாதாரத்திற்குப் பெரும் பங்காற்றுபவர்களாக தமிழகத்திலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் மாறினர். இலங்கை பொருளாதாரத்தை மிளிரச் செய்த அந்த மக்களின் வாழ்வில் இன்று வரை சரியான ஒளி கிட்டவில்லை.

தமிழக தோட்டத் தொழிலாளர்களின் வருகையால் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாட்டுக்கு அது நலனாகவே முடிந்துள்ளது. இருந்தாலும் இலங்கை அரசில் இவர்கள் நீண்ட காலம் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழந்தே வாழ்ந்தனர்.

இவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டால் இன ரீதியான அரசியலில் பாரிய பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில்தான் வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் இலங்கையில் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறியதனாலும் அரசியல் நலன் நாடியும்தான் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

ஆங்கிலேய அரசு வெறும் அரசியல் ஆதாயத்தை மட்டும் நாடாமல் மத மாற்ற முயற்சிகளிலும் ஈடுபட்டது. ஆங்கிலக் கல்விக் கூடங்கள் ஊடாக மதப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிங்கள மக்கள் அந்நிய எதிர்ப்பு மனப்பான்மையால் இதற்கு அதிகம் பலியாகவில்லை. முஸ்லிம்கள் உலக முன்னேற்றத்தை விட மார்க்கமே மேலானது என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.

எனவே, ஆங்கிலம் கற்பது ஹராம் என மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி மூலம் எமது கலாசாரத்தையும் தனித்துவத்தையும் இழப்போம். மத மாற்றங்களுக்கு உள்ளாகலாம் என்பதால் முஸ்லிம்கள் அந்தக் காலங்களில் கல்வியைக் கைவிட்டு விட்டு முழுமையாக வியாபாரத்தில் கவனம் செலுத்தினர். பௌத்தர்கள் விவசாயத்தில் கவனம் செலுத்தினர். தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக ஆங்கிலக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. அமெரிக்கா மிஷன் யாழ்ப்பானத்தில் நன்றாகவே இயங்கியது. இதனால் தமிழ் மக்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டனர். அரசகரும மொழிகளிலும் அவர்களே அதிக இடத்தைப் பிடித்தனர். அவர்கள் அதிகாரிகளாகவும் ஆளும் சக்தியாகவும் மாறிக் கொண்டிருந்தனர்.

பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டும், கிறிஸ்தவ மதத்தை எதிர்க்க வேண்டும், சிங்கள இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை உருவானது. இதனால் பௌத்த மத குருக்கள் நாட்டின் விடுதலைக்காகவும், பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்காகவும் போராடினர். பல தியாகங்களையும் செய்தனர். இந்த எதிர்ப்புணர்வு சிங்கள இனவாதமாக மாறியது. சிங்களவர்களே மேலானவர்கள் என்ற மனப்பான்மையை உருவாக்கியது. தம்மை ‘பூமிபுத்திர” மன்னனின் மைந்தர்கள் என்றும் மற்றையவர்களை வந்தேறு குடிகளாகவும் பார்க்கத் துவங்கினர். இதனால் இலங்கையின் உண்மையான பூர்வீகக் குடிகள் யார் என்ற சரித்திரம் மறக்கடிக்கப்பட்டது.

1863-20 காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட கிறிஸ்தவ மயமாக்கலுக்கு எதிரான சிங்கள இனவாத உணர்வலைகள் சிங்கள இனவாதமாக விஸ்வரூபம் எடுத்தது. 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிரான மிகப் பெரும் கலவரமாக வெடித்தது. கண்டி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு (1815) சரியாக ஒரு நூற்றாண்டில் மிகப்பெரும் முஸ்லிம் இன அழிப்பு ஏற்பட்டது.

இதில் முஸ்லிம்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர். தமிழ் மக்களது கல்வியிலும் முஸ்லிம் மக்களது பொருளாதாரத்திலுமே இனவாத சக்திகள் குறியாக இருந்தனர். தமிழர்கள் கல்வியில் முன்னேறுகின்றார்கள், முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் முன்னேறுகின்றார்கள். நாமும் இவற்றில் முன்னேற்றம் காண வேண்டும் என்று சமூகத்தை விழிப்படையச் செய்யலாம். அது தான் தாம் சார்ந்த இனத்தின் நலன் நாடுவதாக இருக்கும். அதை விட்டு விட்டு அவர்களின் வளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்று செயற்படுவது இனவெறியாகவே இருக்கும்.

இலங்கையின் மிகப் பெரும் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலக எரிப்பும் இன்று வரை தொடரும் முஸ்லிம்களது கடைகள், பொருளாதாரங்கள் எரிக்கப்படுவதும் இதைத்தான் உணர்த்துகின்றன.

காலாகாலமாக முஸ்லிம்கள் வர்த்தகத்தில் கவனம் செலுத்தியதால் சில வர்த்தகத்தை தீர்மானிப்பவர்களாக அவர்கள் இருந்தார்கள். எனவே, சிங்கள இனவாத அரசுகள் அந்த வர்த்தகங்களைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். சில வர்த்தகத் துறைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. சில முக்கியஸ்தர்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர். இந்த நாட்டில் எல்லா இன மக்களும் நலனோடு வாழ வேண்டும். எல்லா மக்களும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காண வேண்டும். பௌத்த மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக அரசியல், பௌத்த ஆன்மீகத் தலைமைகள் முயற்சிக்கலாம், வழிகாட்டலாம், வழிநடாத்தலாம். ஆனால் ஒன்றை அழித்துவிட்டு உருவாக்க நினைத்தால் நிச்சயம் காலம் தண்டிக்கும், இலக்கை எவரும் அடையவே முடியாது போகும்.

தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சியை யாராலும் அழிக்க முடியாது போனது. இன்றும் அவர்கள் கல்வியில் முன்னேற்றமான நிலையில்தான் உள்ளனர். இனவாதத்தால் இடம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் வளமோடும் நலமோடும் மிகப் பெரும் செல்வாக்கோடும் வாழ்ந்து வருகின்றனர்.
1915 இல் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தமிழ்த்தலைமை சிங்களவர்கள் பக்கமிருந்தது. இந்த இனவாதத் தீயிற்கு நாமும் பலியாகலாம் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கவில்லை. இதற்குப் பிரதியுபகாரமாக 1919 இல் உருவான இலங்கை தேசிய காங்கிரஸில் சிங்கள உறுப்பினர்களே அதிகமாக இருந்த போதிலும் அதற்கு பொன். அருணாச்சலம் அவர்கள் தலைவராக்கப்பட்டார்கள். மெல்ல மெல்ல சிங்கள இனவாதம் தமிழ் மக்கள் பக்கம் சாயும் போது அவர் அதிலிருந்து இராஜினாமாச் செய்தார்.

1923 இல் அருணாச்சலம் தலைமையில் தமிழ் மகாஜன சபை உருவானது. 1931 இல் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து டொனமூர் சீர்திருத்தத்தில் தேர்தலில் போட்டியிட்டார். தமிழ் மக்கள் 50% கேட்டனர். இதைப் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் எப்படியும் ஏற்கப் போவதில்லை. அளவுக்கு மீறிய உரிமை கேட்டால் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படும். சிங்கள இனவாதத்தின் கோரப் பார்வை தமிழ் இனத்தின் பக்கம் திரும்பியது. அது தமிழர்களுக்கு எதிரான ஜூலைக் கலவரமாக வெடித்தது. தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனியான தாயகம்தான் என்ற முடிவுக்கு தமிழ் இளைஞர்கள் வந்தனர். அதாவது போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னர் நாம் தனியாக இருந்தது போல் இருக்க வேண்டும். உங்களுக்குக் கீழே இருக்க முடியாது என்பதுதான் அவர்கள் முடிவாக இருந்தது. அது போராட்டமாகவும், பயங்கரவாதமாகவும் மாறி வளர்ந்து மூன்று தசாப்தங்கள் (முப்பது வருடங்கள்) இரத்தம் குடித்து முடிவுக்கு வந்தது.

இந்த இடைப்பட்ட காலங்களுக்குள் பலமுறை முஸ்லிம்களின் பொருளாதாரங்கள் ஒடுக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்தன. இப்போதும் முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொறாமை உணர்வை ஏற்படுத்தி வருகின்றது. முஸ்லிம்கள் தமது மதத்தை இறுக்கமாகப் பற்றி வருவதற்கும், அதிகமாக குழந்தைகளைப் பெற்று தமது இனத்தைப் பெருக்கி வருவதற்கும் அரசியலிலும், பொது வாழ்விலும் நன்றாக இருப்பதற்கும் இந்தப் பொருளாதாரம்தான் காரணம் என்று அவர்கள் நினைப்பதால் பொருளாதாரத்தில் இவர்களைப் பின்தள்ளிவிட்டால் இவர்களின் அத்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் என்று நினைக்கின்றனர்.

உண்மையில் முஸ்லிம்கள் எல்லோரும் பொருளாதாரத்தில் வளத்தோடு உள்ளவர்கள் அல்லர். நிறைய ஏழை-எழிய மக்களும் உள்ளனர். முஸ்லிம்களின் உண்மையான சக்தி அவர்களின் மார்க்கமேயாகும்.

இப்போது பௌத்த மக்கள் கல்வியில் பெரும் கவனம் செலுத்தி அதில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் பொருளாதாரத்திலும் மிளிர்ந்து வருகின்றனர். அது வரவேற்கத்தக்கதே!

ஆனால், எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் அழிக்க நினைக்காமல், அடக்கி ஒடுக்க நினைக்காமல் முன்னேற முயன்றால் நாடும் நாட்டு மக்களும் முன்னேற முடியும். தனித்தனி இனமாக, சமூகமாக சிந்திக்காமல், இலங்கையர் என்ற இதயபூர்வமான எண்ணத்துடன் முயன்றால் இலங்கை சுவர்க்க பூமியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

இந்த நாட்டில் இதுவரை நடந்த இன, மத மோதல்கள் மற்றும் பயங்கரவாதப் போர்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால் இலங்கை எவ்வளவு பெரிய முன்னேற்றம் கண்டிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எனவே, அழகான இயற்கை எழில் கொஞ்சும் இச்சிறிய இலங்கை நாட்டுக்குள் நாமெல்லோரும் இலங்கையர் என்ற ஒன்றுபட்ட இதயத்துடன் ஒற்றுமையாக தாம் சார்ந்த இனம், மதம், மொழி எனத் தனித் தனியாகச் சிந்திக்காமல் நாட்டு நலனை முன்னிறுத்தி செயற்பட முனைவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *