அல்லாஹ் மட்டும் அறிவான்
முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம்.
முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் கூற வேண்டிய தேவை வந்திருக்காது! எனவே, இரண்டுக்கு மிடையில் புரிந்து கொள்வதில் வேறுபாடு உள்ளது என அர்த்தம் செய்வதுதான் பொருத்தமான தாகும்.
அடுத்து, முதஷாபிஹத்தான் வசனங்கள் பற்றிக் கூறும் போது, அறிஞர்கள்ளூ ‘அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே!’ என்று கூறுவார்கள் என வந்துள்ளது. முஹ்கமான ஆயத்துக்களின் விளக்கம் அனைவருக்கும் பொதுவாகப் புரியும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கம் புரியாது என்றால்தான், புரிந்தாலும் புரியாவிட்டாலும் நாம் நம்புவோம் என்ற வார்த்தைக்கும், எல்லாம் எங்கள் இரட்சகனிடமிருந்து வந்தவையே என்று அவர்கள் கூறும் வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும்.
எனவே, முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தை, இறுதி முடிவை அல்லாஹ்வே அறிவான் என்று அர்த்தம் செய்வதுதான் சரியானது. நபித்தோழர்கள், தாபிஈன்கள் மற்றும் அறிஞர்களில் அநேகரும் இந்த நிலைப்பாட்டில்தான் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இருப்பினும் இதற்கு மாற்றமாக முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வும் அறிஞர்களும் விளங்குவார்கள் என அர்த்தம் செய்யும் சிலர் பின்வருமாறு சில வாதங்களை முன்வைக்கின்றனர்.
அல்லாஹ் மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத, வேண்டாத வேலையை இறைவன் செய்வானா என்பது இவர்களின் வாதமாகும்.
முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தை யாரும் அறிய முடியாது என்றால் அது பயனற்ற வேலை அல்ல. அந்த வசனங்களையும் நம்புவதன் மூலம்தான் பயனுள்ளது. அதை ஓதுவதன் மூலம் எழுத்துக்குப் பத்து நன்மைகள் உள்ளன. கேட்பதன் மூலம் எழுத்துக்கு ஒரு நன்மை உண்டு. விளக்கம் புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி இறைவனின் வார்த்தைகளை மனிதன் நம்புகின்றானா? இல்லையா? என்ற சோதனை அதில் உள்ளது. வேதத்தின் அடிப்படையான விடயங்கள் இல்லாத முடிவான விளக்கத்தைக் கூற முடியாத வசனங்களை வைத்து பித்னாவை உண்டாக்கும் நோக்கத்தில் குழறுபடிகள் செய்பவர்கள் யார் என்ற சோதனை அதில் உள்ளது. இப்படி நாம் அறியாத இன்னும் பல பயன்கள் அதில் இருக்கலாம். அவற்றையெல்லாம் சிந்திக்காமல் பயனற்ற வேலையை இறைவன் செய்வானா? என கேள்வி எழுப்புவது முட்டாள்தனமானதாகும்.
ஒருவருக்கும் புரியாத வசனம் குர்ஆனில் இருந்தால் மனிதர்களின் பார்வையில் அது உளரல் என்றே கருதப்படும் என்றும் வாதிடுகின்றனர்.
முதஷாபிஹத்தான வசனங்களுக்கு அர்த்தமே இருக்காது என்று யாரும் கூறவில்லை. முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கம் இறுதி முடிவு என்ன என்பதைத்தான் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று கூறுகின்றோம். பொருள் இருக்காது என்று யாருமே கூறியதில்லை. இத்தரப்பினர் முதஷாபிஹத்தான வசனங்களுக்கு கருத்தே இல்லை என நாம் கூறுவதாக எண்ணி வாதிடுகின்றனர்.
எனவேதான் ஏராளமான தமிழ் மற்றும் பிற மொழிபெயர்ப்புக்கள் வந்துவிட்டன. அம்மொழி பெயர்ப்புக்களில் எல்லா வசனங்களுக்கும் மொழி பெயர்ப்புச் செய்துள்ளனர். இது எங்களுக்கும் புரியவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டும்தான் புரியும் எனக் கூறி ஒரே ஒரு வசனத்தைக் கூட அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்யாமல் விடவில்லை என்று வாதிடுகின்றனர்.
எனவே, இத்தரப்பினர் முதஷாபிஹத்தான வசனங்களுக்கு அர்த்தம் ‘மஃனா’ – பொருள் இல்லை. அதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்ற அர்த்தத்தில் நாம் இருப்பதாக எண்ணி வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறானது. பொருள் இருக்கும் உண்மையான விளக்கம், இறுதி முடிவு என்ன என்பதை அல்லாஹ் மட்டும் அறிவான் என்று அர்த்தம் செய்வதே ஏற்றமானதாகும், ஏற்கத்தக்கதாகும்.