இலங்கையில் மீண்டும் இனவாதப் பேய் தனது கோர முகத்தை வெளிக்காட்டத் துவங்கியுள்ளது. இந்த இனவாதப் பேய்களுக்குப் பின்னால் அரசியல் அரக்கர்கள் இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது.
ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்த பெரும்பான்மை சமூகத்தாலும், இனவாதத்தை எதிர்த்த தமிழ் முஸ்லிம் சமூகங்களினாலும் இலங்கையில் ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இனவாதத்தால் இழந்த அரசியல் பலத்தை அதே இனவாதத்தைப் பயன்படுத்தியே மீண்டும் கையில் எடுக்க ஒரு கூட்டம் முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆட்சியைப் போன்றே இந்த ஆட்சியிலும் சிறுபான்மை சமூகங்கள் நசுக்கப்படுகின்றன என்ற எண்ணத்தை ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியவர்களது உள்ளத்தில் ஏற்படுத்திவிட்டால், இந்த அரசின் செல்வாக்கு சரிந்து விடும்; பலம் குன்றிவிடும் என்பதற்கான அரசியல் காய் நகர்த்தல்களாகவே அண்மைக்கால இனவாத செயற்பாடுகள் நோக்கப்படுகின்றன.
இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர்… என அனைவரும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் சந்தர்ப்பத்திலேயே சிறுபான்மை இனங்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்கும் இனவாத ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டிருப்பதும், கண்டி ஊர்வலத்தின் போது குறித்த சில வர்த்தக நிலையங்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு பகிரப்பட்ட சூழ்நிலையில் பெபிலியான Fashion Bug வர்த்தக நிலையம் எரிந்து போனமையும் அரசின் பலவீனமான நிலையை எடுத்துக்காட்டுகின்றது.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளரின் பேட்டிகளும், கருத்துக்களும் அப்பட்டமான இனவாதமாக இருந்தும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கும் நிலையில்தான் அரசின் பலமும் நாட்டு நிலவரமும் உள்ளது. இது குறித்து முஸ்லிம் சமூகம் மிக நிதானமாகச் சிந்தித்துணர்ந்து செயற்பட வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் பௌத்த தேரர்கள் பெரும் அரசியல் அழுத்தக் குழுவாக செயற்பட்டு வருகின்றனர். அவர்களைப் பகைத்துக் கொண்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாத நிலை நீடித்து வருகின்றது.
பௌத்த மதகுருக்கள் அவமதிக்கப் படுவதை பௌத்த மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். இதனால்தான் கடந்த காலங்களில் காவி உடையினர் காட்டு தர்பார் நடாத்திய போதும் காக்கிச் சட்டையினர் அடங்கியே வாசித்தனர். ஜனாதிபதியாக இருந்தாலும் ஒரு பௌத்த மதகுருவை அவமதித்து நடக்க முடியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் நாட்டில் உள்ள யதார்த்த நிலையாகும்.
எனவே, பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுகின்றது. அதனால் பெரும்பான்மை சமூகம் கொதிப்படையும் எனப் பயம் கொள்கின்றது. பாதுகாப்புப் படையில் பணியாற்றும் சிங்கள சிப்பாய்களும் இதே மனநிலையில்தான் இருப்பார்கள் என்பது அரசுக்குத் தெரியும். எனவே, பின்விளைவுகள் விபரீதமாக அமைந்துவிடக் கூடாது என்பதால் அரசு இவர்களை மிகக் கவனமாகத்தான் கையாளும். இதையும் புரிந்து கொண்டுதான் எமது சமய சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அண்மையில் புளுP10 வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிப்பதாகக் கூறி அதற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. இது தொடர்பில் நீதி அமைச்சரது அறிவிப்புத்தான் இந்தப் பிரச்சினையை முதலில் பூதாகரமாக்கியது.
ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் செய்ய உரிமை உண்டு! ஆனால், இந்தப் பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியதில்லை. இது முறையாகப் பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. இது பூதாகரமாக்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக BBS செயலாளர் கருத்து வெளியிட்டார். ஒரு சாரார் ஆர்ப்பாட்டம் என அறிவித்தால் அந்த ஆர்ப்பாட்டத்தால் பிரச்சினை வரும் என்றால் அதைத் தடுக்குமாறு அரசிடம் வேண்டுவதற்கான உரிமை இந்நாட்டுக் குடிமக்களுக்கு உண்டு. ஆனால், இது வேண்டுதலாக அமையவில்லைளூ ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டால் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவோம் என்ற எச்சரிக்கையாகவே அமைந்தது. இது ஜனநாயக மீறலாகும். ஆனால், அரசால் அதைத் தடுக்க முடியாது போய்விட்டது.
குடும்பத்தில் மூத்த மகனுக்கும் இளைய மகனுக்குமிடையே பிரச்சினை வரும் போது, மூத்தவனைக் கண்டித்தால் பிரச்சினை வரும் என அஞ்சும் தந்தை பொறுமையாக இளையவனைக் கண்டித்து நீ கொஞ்சம் சும்மா இரு என்று கூறும் நிலையில்தான் அரசு உள்ளது. நாம் இந்த யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நபி(ச) அவர்கள் கூட அப்துல்லாஹ் பின் உபை இப்னு ஸலூல் போன்றவர்கள் மீது இது போன்ற காரணங்களால் நடவடிக்கை எடுக்காது விட்டுள்ளார்கள். இது இன்றைய இலங்கையிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய முன்மாதிரியாக உள்ளது.
ஆர்ப்பாட்ட முடிவில் பேசப்பட்ட இஸ்லாமிய பண்பாட்டுக்கும் நாட்டு நிலைமைக்கும் முரணான பேச்சுக்கள் இனவாதிகளை மீண்டும் உசுப்பேற்றிவிட்டுள்ளன. ஞானசார தேரர் நீண்ட காலம் பிரச்சாரம் செய்து அவரது சமூகத்தில் அவருக்குக் கிடைக்காத ஆதரவை, இந்த உரை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது என்பதே கசப்பான உண்மையாகும்.
– செத்துப் போன அமைப்பாக, பல் பிடுங்கப்பட்ட பாம்பாக BBS விமர்சிக்கப்பட்டது. இல்லை, நாம் சாகவில்லை வீரியமாகத்தான் உள்ளோம் எனக் காட்டும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
– உங்கள் சமூகத்திலேயே உங்களுக்கு இடமில்லை என்று கூறப்பட்டது. இல்லை, எமது சமூகத்தில் எமக்கு இடமுண்டு எனக் காட்டும் நிலைக்கு அவர்களைத் தள்ளியது.
– எங்களை அடக்க உங்களாலும் முடியாது உங்களது அப்பனாலும் முடியாது என்று கூறப்பட்டது. பொறுத்திரு அடக்கிக் காட்டுகின்றோம் என அவர்களை அது உசுப்பேற்றியது.
– ஞானசார நோணசார போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவர்களின் இரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் அடங்கிக் கிடந்த இனவாதப் பேயை தட்டி எழுப்பியுள்ளனர்.
‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்பார்கள். சமூகத்தின் உரிமையைப் பெற்றுத்தரப் போகின்றோம் என்று வீராவேஷம் பேசி முழு முஸ்லிம் சமூகத்தையும் இரையாக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
சிலருக்கு புத்தி சொல்லப் போவது, குரங்கிற்குக் கூடு கட்டச் சொன்ன குருவியின் நிலைக்குத் தள்ளிவிடும். குறைமதியும், குதர்க்க புத்தியும் கொண்டவர்கள் குதறியெடுத்துவிடுவர். சிலருக்குப் பட்டால்தான் புரியும், சிலருக்குப் பட்டாலும் புரியாது!
இஸ்லாம் என்ன சொல்கின்றது என்பதை மாத்திரம் இந்நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
உலகத்தில் மிகப் பெரும் கொடுங்கோலனாக இருந்தவன்தான் பிர்அவ்ன். தன்னை மிகப் பெரும் கடவுள் என்று பிரகடனம் செய்தவன்,இஸ்லாம் மேலோங்குவதை அடக்குவதற்கு பச்சிளம் பாலகர்களை வெட்டிப் படுகொலை செய்தவன். இவனிடம் மூஸா, ஹாரூன் ஆகிய இறைத்தூதர்களைப் பிரச்சாரத்திற்காக அனுப்பும் போது அவனுடன் நளினமாகப் பேசுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
‘நீங்கள் இருவரும் அவனிடம் மென்மையான வார்த்தையால் பேசுங்கள். அதனால் அவன் நல்லுபதேசம் பெறவோ, அல்லது அஞ்சவோ கூடும்.’ (20:44)
இன்றுள்ள பௌத்த மதகுருக்கள் விடயத்திலும் இந்தக் கட்டளையைக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ளோம். 1000 அல்லது 2000 மக்கள் கூட்டத்தைக் கண்டதும் மதகுருக்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஏக வசனத்தில் பேசி அனைவரையும் பகைவர்களாக்கிக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்காது.
அல்லாஹ்வைப் பற்றி தவறாக வர்ணிப்பவர்களுடனும் நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறே அல்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
‘எது மிகச் சிறந்ததோ அதன்மூலம் தீமையைத் தடுப்பீராக! அவர்கள் வர்ணிப்பவற்றை நாமே மிக அறிந்தவர்கள்.’ (23:96)
‘நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக! அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகி விடுவார்.’ (41:34)
இந்த வழிமுறை மூலம் எதிரியும் நண்பனாவான் என்று குர்ஆன் கூறுகின்றது. குர்ஆனின் இந்தப் போதனை மீறப்பட்டதால் நடுநிலைவாதிகளும் எதிரியாகியுள்ளனர். இது நீடித்தால் நண்பர்களும் எதிரிகளாவார்கள்.
‘யூதர்கள் (சிலர்) நபி(ச) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று (முகமன்) கூறினர். உடனே நான், ‘(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும், அல்லாஹ் தன்னுடைய கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்களின் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்’ என்று (அவர்களுக்கு பதில்) சொன்னேன். (அப்போது) நபி(ச) அவர்கள், ‘ஆயிஷா! நிதானம்! (எதிலும்) நளினமாக நடந்துகொள். மேலும், வன்மையுடன் நடந்து கொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை எச்சரிக்கிறேன்’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ச) அவர்கள், ‘நான் (அவர்களுக்கு அளித்த பதிலை) நீ கேட்கவில்லையா? (‘அஸ்ஸாமு’ எனும் சொல்லைத் தவிர்த்து ‘வ அலைக்கும்’ – அவ்வாறே உங்களின் மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு பதிலளித்துவிட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது’ என்று கூறினார்கள் என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புஹாரி: 6030)
இங்கு நபி(ச) அவர்களது அழகிய வழிமுறை கவனிக்கத்தக்கது. யூதர்கள் உபயோகித்த கெட்ட வார்த்தையை நபி(ச) அவர்கள் பயன்படுத்தவில்லை. இஸ்லாமிய சட்டத்தைப் பாதுகாக்கப் போகின்றோம் என்று இத்தகைய இஸ்லாமிய வழிகாட்டல்களை மீறுபவர்கள் கோஷம் போடுவது வெறும் வேஷம் போன்று தெரியவில்லையா?
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் நடந்த ஒரு கூட்டத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள், தாம் இவர்களுடன் கதைத்ததாகவும், தாம் பேசியது தவறு என்பதை அவர்கள் ஒத்துக் கொண்டதாகவும் கருத்து வெளியிட்டார்.
அடுத்து, ஊடகங்களில் அவர் வெளியிட்ட கருத்தில் கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் நடந்த தவறுகளை அவர் சுட்டிக்காட்டியதாகவும் சம்மாந்துறை ஆர்ப்பாட்டத்தில் அவை தவிர்க்கப்பட்டதாகவும் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த வகையில் அவர் காத்திரமான ஒரு பங்களிப்பைச் செய்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
தனியாகப் பேசும் போது தனது பேச்சில் தவறு இருப்பதை ஒப்புக் கொண்டவர்கள், முன்னைய ஆர்ப்பாட்டத்தில் விட்ட தவறை அடுத்த ஆர்ப்பாட்டத்தில் திருத்திக் கொண்டவர்கள், உளப்பூர்வமாக தாம் பேசியது தவறு என்பதை உணர்ந்து கொண்டே இப்போது தமது பேச்சை நியாயப்படுத்தி பகிரங்கமாகப் பேசுகின்றனர் என்றால் சமூக வலைத்தளங்களில் அந்தப் பேச்சை புகழ்ந்து தள்ளுகின்றனர் – என்றால் இவர்களது உண்மை நிலை என்ன? தனிநபருக்காக அல்லது தமது அமைப்பைப் பாதுகாக்க சமூகத்தையே பலிக்கடாவாக்கத் துணிபவர்கள் எப்படி சமூக நலன் விரும்பிகளாக இருக்க முடியும்?
இனவாதிகளை உசுப்பேற்றிவிட்ட தனது பேச்சுக்காகத்தான் தன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டே, ‘இறை பணிக்காக சிறைப்பயணம்’ என்று மாற்றிப் பேசுபவர்கள் எப்படி சமூகப் பிரச்சினைகளைக் கையில் எடுக்கத் தகுதிபெறுவார்கள்?
மார்க்கத்திற்கு முரணாக பிற மதகுருவை அவமதித்துப் பேசிவிட்டு, அதை ‘இறைபணி’ என்று இறை பணியையே அவமதிக்கலாமா என்பதையெல்லாம் சமூகம் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் தமது அமைப்பல்லாத அனைவரையும் முஸ்லிம்கள் அல்லர் எனக் கூறும் இக்கூட்டம், முஸ்லிம்களின் பொதுப் பிரச்சினையைக் கையில் எடுக்கத் தகுதியில்லாத கூட்டமாகும்.
சென்ற இனவாத செயற்பாட்டின் போது முஸ்லிம்கள் மிக நிதானமாக அதைக் கையாண்டார்கள். முஸ்லிம்கள் தரப்பில் ஒரு குறையும் கூற முடியாத நிலையில் இனவாத சக்திகள் இருந்த போது, புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டார் எனப் பேசி அவர்களுக்கு ஒரு நியாயத்தை எடுத்துக் கொடுத்தவர்கள் இவர்கள்.
ஞானசார தேரர் தனது இனவாத செயற்பாட்டிற்கு பௌத்த தலைமையின் அங்கீகாரத்தைப் பெற இந்தப் பேச்சு வீடியோவைத்தான் போட்டுக் காட்டி அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார். அது அலுத்கம கலவரத்தில் முடிந்தது. இப்போது மீண்டுமொரு நியாயத்தை அவர்களுக்கு இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இவர்களது சமூக நோக்கற்ற விளம்பர மோகம் கொண்ட செயற்பாடுகள், முழு உம்மத்திற்கும் ஆபத்தாக அமைவதால் முஸ்லிம்களது பொது விவகாரங்களை இவர்கள் கையில் எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். இவர்கள் முஸ்லிம்களின் பொது விவகாரங்களில் ஒரு நிதான நிலைக்கு வராத பட்சத்தில் எமக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எல்லா அமைப்புக்களும் பகிரங்கமாக அறிவித்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இதே வேளை, இந்த இனவாதத் தீயை குர்ஆன் கூறிய, அழகிய வழிகளினூடாக நாம் கையாளவேண்டியுள்ளது. அபூலஹபின் மனநிலையில் இருப்பவர்களையும் அபூதாலிப் நிலைக்கு மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் இஸ்தீரத் தன்மையை சீர்குலைக்க முனையும் தீய சக்திகளின் சதிவலையில் நாம் சிக்கிவிடாது, முஸ்லிம்களை ஒரு கலவரத்துக்குள்ளாக்கி அவர்களது பொருளாதாரத்தை சூறையாடி, இவர்களைக் கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும் என்று அலையும் இனவாதிகளுக்கு இரையாகிவிடாமல் நிதானமாக நாம் பயணிக்க வேண்டி உள்ளது.
எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு எம்மை எதிர்நோக்கியுள்ள இந்த ஆபத்தில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோமாக!
யா அல்லாஹ்! இஸ்லாத்தின் எதிரிகளான சூழ்ச்சிக்காரர்களினதும், நயவஞ்சகர்களினதும், பொறாமைக்காரர்களினதும், சுய இலாபக்காரர்களினதும்,… சதிவலைகளிலிருந்து முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பாதுகாப்பாயாக!
‘அவர்கள் போருக்காக நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.’ (5:64)
அஸ்ஸலாமு அலைக்கும்.
கட்டுரை நீண்டிருந்தாலும், தேவையான கருத்துகளை உள்ளடக்கியதாக, உண்மையை உரத்துக் கூறுவதாக, பாரபட்சமற்றதாக அமைந்துள்ளது. நான் நினைக்கிறேன், இந்த இனவாதப் பேய், இலங்கைக்கு இந்திய பாசிசப் பேய்களான RSS வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று. அல்லாஹ் முஸ்லிம்களைக் காப்பாற்றுவானாக!. நம்மவர்களுக்கு விவேகத்தையும் பொறுமையையும் தந்தருள்வானாக! ஆமீன்.