கேள்வி – பதில்
கேள்வி:
1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா?
ஸரீனா ஸலீம் – ஆசிரியை
(நிககொல்ல)
பதில்:
குழந்தைக்கு அழகிய பெயர் வைப்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது குறித்து நபியவர்கள் கூறும் போது,
‘எல்லாக் குழந்தைகளும் அதன் அகீகாவுக்காக அடகுவைக்கப்பட்டுள்ளன. ஏழாம் தினத்தில் அதற்காக அகீகா அறுக்கப்படும். அதன் தலை இறக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்கள்.
நூல்: அஹ்மத் 20083, 20193
அபூ தாவூத்: 2838, திர்மிதி: 1522,
நஸாஈ: 4220, இப்னுமாஜா: 3165
இந்த ஹதீஸில் ஏழாம் தினத்தில் பெயர் வைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
மர்யம்(ர) அவர்களது தாயார் மரியம் (ர) அவர்களை ஈன்றெடுத்த போதே மர்யம் எனும் பெயர் சூட்டியதாகக் குர்ஆன் கூறுகின்றது.
‘அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்த போது, ‘என் இரட்சகனே! நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்து விட்டேன்’ என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும், ஆண், பெண்ணைப் போலல்ல. இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். ‘அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து நிச்சயமாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்’ (என்றார்.)’ (3:36)
‘அபூதல்ஹா, உம்மு சுலைம் தம்பதி களுக்கு ஒரு குழந்தை கிடைத்த போது அந்தக் குழந்தையின் வாயில் ஈத்தம் பழத்தை மென்று வைத்துவிட்டு அதற்கு அப்துல்லாஹ் என நபியவர்கள் பெயர் வைத்தார்கள்.’
(புஹாரி: 5470)
‘இரவு எனக்கு ஒரு குழந்தை கிடைத்தது. எனது தந்தை இப்றாஹீமின் பெயரை அதற்கு நான் சூட்டினேன்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(வ)
நூல்: அபூதாவூத்: 3126
இந்த ஹதீஸ்களை வைத்துப் பார்க்கும் போது கட்டாயம் ஏழாம் தினத்தில்தான் பெயர் வைக்கப்பட வேண்டும் என்பதற்கில்லை. குழந்தை கிடைத்தவுடன் கூட பெயர் வைத்துக் கொள்ளலாம் என்பதைப் புரியலாம்.
பெயர் சூட்டுவதற்கென தனியான எந்த விழாவையும் இஸ்லாம் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கென எந்த துஆவும், பாதிஹாவும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
10.4*