குறைத்துக் காட்டப்பட்ட போர்ப்படை
‘(பத்ரில்) சந்தித்துக் கொண்ட இரு கூட்டங்களிலும் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அத்தாட்சியுண்டு. ஒரு கூட்டம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றது. மற்றதோ நிராகரிக்கும் கூட்டமாகும். அவர்கள் இவர்களைத் தம்மைவிட இரு மடங்காகக் கண்ணால் கண்டார்கள். அல்லாஹ், தான் நாடுவோரைத் தனது உதவி மூலம் பலப்படுத்துகிறான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினையுண்டு.’ (3:13)
இந்த வசனத்தில் பத்ர் களத்தில் ஒரு கூட்டத்திற்கு மற்றொரு கூட்டம் தம்மை விட இரு மடங்கு அதிகம் இருப்பதாகக் காட்டப்பட்ட தாகக் கூறப்படுகின்றது. ஆனால், பின்வரும் வசனத்தில் இரு கூட்டத்திற்கும் மறு கூட்டத்தினர் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
‘தீர்மானிக்கப்பட்ட விடயத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக (போரில்) நீங்கள் சந்தித்துக் கொண்ட வேளை உங்கள் கண்களில் அவர்களை சொற்பத் தொகையினராகக் காண்பித்ததையும் அவர்களது கண்களில் உங்களைக் குறைத்துக் காட்டியதையும் (எண்ணிப்பாருங்கள்.) அல்லாஹ்விடமே அனைத்துக் காரியங்களும் மீட்டப்படும்.’ (8:44)
இது இரண்டும் ஒன்றுக் கொன்று முரண்படுவது போல் தோன்றலாம். ஆனால், இரண்டும் ஒரே யுத்தம் ஒரே கூட்டம் பற்றிப் பேசினாலும் வேறு வேறு சந்தர்ப்பங்கள் பற்றிப் பேசுகின்றன என்று புரிந்து கொண்டால் முரண்பாடு நீங்கிவிடும்.
பத்ர் போர் என்பது திட்டமிடாமல் நடந்த போராகும். போர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நபித்தோழர்களிடம் காணப்பட வில்லை. போர்ப் படை அல்லது அபூசுப்யானின் வியாபாரக் குழு இரண்டில் ஒன்றை வெற்றி கொள்ளலாம் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட போது அவர்கள் வியாபாரக் குழுவை வெற்றி கொள்ள விரும்பினர். ஆனால், போரின் மூலம் இறை நிராகரிப்பாளர்களை வேரறுக்கவே அல்லாஹ் விரும்பினான். இது பற்றி குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.
‘(அபூசுப்யானின் வியாபாரக் கூட்டம், அபூஜஹ்லின் போர்ப்படை ஆகிய) இவ்விரு குழுக்களில் ஒன்றை, அது உங்களுக்கு உரியது என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த போது, நீங்களோ ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டமே உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென விரும்பினீர்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது வார்த்தைகளால் சத்தியத்தை நிலை நாட்டிடவும், நிராகரிப்பாளர்களை வேரறுத்து விடவுமே விரும்புகின்றான்.’ (8:7)
இந்த அடிப்படையில் போர் நடைபெற வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமாக இருந்தது. இதன் அடிப்படையில் காபிர்களின் அணியின் தொகையை முஸ்லிம்களுக்குக் குறைத்துக் காட்டினான். அப்போதுதான் போர் செய்யும் எண்ணத்தில் உறுதி இருக்கும். காபிர்கள் போர் வெறியுடன் வந்தார்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டினால் போர் செய்யாமல் அவர்கள் பின்வாங்கிவிடுவார்கள். எனவே. முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அவர்களுக்குக் குறைத்துக் காட்டப்பட்டது. எனவே, சின்னக் கூட்டம்தானே என்ற திமிரில் போரில் குதித்தனர்.
எனவே, போர் நடக்க வேண்டும் என்பதற்காக இரு சாராருக்கும் எதிர்த் தரப்பின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்ட தையே அல்குர்ஆனின் 8:44 ஆம் வசனம் பேசுகின்றது.
ஆனால், போர் நடக்கும் போது ஒரு கூட்டத்திற்கு மறு கூட்டம் இரு மடங்காகக் காட்டப்பட்டதாக அல்குர்ஆனின் 3:13 ஆம் வசனம் கூறுகின்றது. நடக்க முன்னர் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டது. போர் நடக்கும் போது இரு மடங்காகக் காட்டப்பட்டது எனும் போது முரண்பாடு இல்லை.
இதில் எந்த அணிக்கு மறு அணி இரு மடங்காகக் காட்டப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
முஸ்லிம்களுக்கு காபிர்கள் தம்மை விட இரு மடங்காகக் காட்டப்பட்டனர் என்றும் பொருள் செய்ய இடமுண்டு.
காபிர்களுக்கு முஸ்லிம்கள் தம்மை விட இரு மடங்காக இருப்பதாகக் காட்டப்பட்ட தாகவும் பொருள் செய்ய இடம்பாடுண்டு. எந்த அடிப்படையில் பொருள் செய்தாலும் குறைத்துக் காட்டப்பட்ட சந்தர்ப்பம் வேறு என்பதால் இரு மடங்காகக் காட்டப்பட்டது என்று இங்கே கூறப்படுவது முரண்பாடாகாது.
இருப்பினும் ஏன் இரட்டிப்பாகக் காட்டப் பட்டது என்ற வினா எழலாம்.
போர் நடக்க வேண்டும் என்பதற்காக எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டது. போரில் காபிர்கள் தோற்க வேண்டும் என்பதற்காக எண்ணிக்கை இரு மடங்காகக் காட்டப்பட்டது என்பதே இதற்கான விடையாகும்.
முஸ்லிம்களின் எண்ணிக்கை காபிர்களுக்கு இரு மடங்காகக் காட்டப்பட்டது என்று அர்த்தம் செய்தால் போர் நடக்க முன்னர் கொஞ்சமாக இருந்தவர்கள் போர் ஆரம்பித்த பின்னர் அதிகமாகக் காட்சி யளித்தால் அதுவும், தம்மை விட இரு மடங்காக மாறிவிட்டனர் எனும் போது காபிர்களின் உள்ளங்கள் கதிகலங்கிப் போகும். அதன் மூலம் வீரத்தோடு போராடும் தைரியத்தை இழந்து விடுவார்கள். போரில் மனபலம் முக்கியமாகும். இந்த வகையில் அவர்களின் மனபலத்தை உடைப்பதற்காக முஸ்லிம்களின் எண்ணிக் கையை அவர்களை விட இரு மடங்காகக் காட்டப்பட்டது என்பது அர்த்தமாகும்.
காபிர்களின் எண்ணிக்கை தம்மை விட இரு மடங்காக இருப்பதாக முஸ்லிம்களுக்குக் காட்டப்பட்டது என்று எடுத்துக் கொண்டால் அது உக்கிரமாகப் போராடத் தூண்டுவதாக இருக்கும். ஏனெனில், இந்தப் போரில் காபிர்கள் 1000 பேர் இருந்தனர். முஸ்லிம்கள் 313 பேர் இருந்தனர். அதாவது முஸ்லிம்களை விட காபிர்கள் மூன்று மடங்கு அதிகமாக இருந்தனர். மூன்று மடங்கு அதிகமாக இருந்த காபிர்களின் படை இரண்டு மடங்கு அதிகமாகக் காட்டப்பட்டால் நாம் சளைக்காமல் போராட வேண்டும், போராடினால் வெற்றி கிட்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு முஸ்லிம்கள் தீரத்தோடு போராட இது உதவி செய்யும் என்பது காரணமாக அமையலாம்.
அடுத்து, உங்களில் 100 பேர் இருந்தால் அவர்களின் 200 பேரை வெற்றி கொள்ளலாம் எனக் குர்ஆன் (8:65) குறிப்பிட்டுள்ளதால் முஸ்லிம்கள் தம்மை விட இரு மடங்காக இருக்கும் காபிர்களை வெல்லலாம் எனும் வேட்கையுடன் போராட இது உதவியாக அமையும். இப்படி நோக்கும் போதும் இந்த ஆயத்துக்களுக்கு இடையில் முரண்பாடு இல்லை.
காபிர்களுக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டது, முஸ்லிம்களுக்கு காபிர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டது என 8:44 வசனத்திற்கு தோதாக அர்த்தம் செய்வதென்றால் முஸ்லிம்களுக்கு தம்மை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகக் குறைத்துக் காட்டப்பட்டது காபிர்களுக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக கூட்டிக் காட்டப்படவில்லை என்று 3:13 வசனத்திற்கு அர்த்தம் செய்யலாம்.
அப்படி அர்த்தம் செய்யும் போது முஸ்லிம்கள் மிகவும் குறைவாக இருக்கின்றார்கள் என்பதால் வெற்றி நிச்சயம் என்ற இறுமாப்புடன் கவனயீனமாக காபிர்கள் போர் செய்வார்கள். காபிர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அல்லாது இரு மடங்காக பெருக்கிக் காட்டப்பட்டதால் முன்ஜாக்கிரதை யுடன் தீரத்துடன் முஸ்லிம்கள் போராடுவார்கள். அதனால் முஸ்லிம்களுக்கு வெற்றி கிட்டும் என்றும் அர்த்தம் செய்யலாம்.
இந்த அடிப்படையில் அர்த்தம் செய்யும் போது 3:13 இற்கு காபிர்களை முஸ்லிம்கள் தம்மை விட இரு மடங்காகக் கண்டார்கள் என்று மட்டுமே பொருள் செய்யலாம்.
இதில் எந்தக் கோணத்தில் பொருள் செய்தாலும் இரு வசனங்களிலும் முரண்பாடு இல்லாமல் இருப்பதுடன் தர்க்க ரீதியாகப் பார்க்கும் போது பொருந்திப் போகும் அமைப்பில் இருப்பதையும் உணரலாம்.