-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
அ இ உலமா சபை கவனத்திற்கு !
சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் மாற்று மதத்தவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடிய அமல்களோடு அவர்களின் மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் அழைத்து அந்நிகழ்சியில் பங்கு பெற வைத்து அழகு பார்க்கிறார்கள். பொதுவாக சகல மனிதர்களோடும் சகஜமாக இரண்டரக்கலந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு பல வழிகளில் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அந்நியர்களோடு மனிதாபிமானத்துடனும், மனித நேயத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், அவர்களின் கஷ்டங்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் மிக தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பிறர் நலன் பேணும் விசயத்தில் ஒவ்வொரு இறை விசுவாசியும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
அதே நேரம் கொள்கை (மார்க்கம் ) என்று வரும் போது தன்னைப் பெற்ற தாயாக இருந்தாலும் கொள்கைக்கு மாற்றமாக அடிபணிய தாய் கட்டளையிட்டாலும் அதற்கு செவிசாய்க்க முடியாது. உலகத்தில் தாயை உச்சக்கட்டத்தில் வைத்து கண்ணியப்படுத்தும் அல்லாஹ் அதே தாய் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஏதாவது ஒரு செயல்பாடுகளில் பிள்ளைகளுக்கு கட்டளை இட்டால் அப்போது அந்த விசயத்தில் தாய்க்கு கட்டுப்படக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால், யாரை திருப்திபடுத்த இந்த இரட்டை வேடங்கள் இன்று இலங்கையில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.? பின் வரும் குர்ஆன் வசனத்தை நிதானமாக சிந்தியுங்கள்…
“நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” -31:14
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன். -31:15
இன்று சகவாழ்வு சமத்துவம் ஒற்றுமை போன்ற சில காரணங்களை காட்டி நமது கண்ணியமான மார்க்கம் பிறருக்காக தாரைவார்க்கபடுகிறது என்றால் இந்த விசயத்தில் அ இ உலமா சபை கூடுதலான கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளது. பின் வரும் குர்ஆன் வசனத்தை சற்று ஆழமாக கவனியுங்கள்.
“(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. -2:120
எனவே அவர்களை திருப்தி படுத்த நாம் எவ்வளவு தான் என்ன செய்தாலும் நாம் அவர்களின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாத வரை அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். அந்நிய மதத் தலைர்களை நமது பள்ளிகளில் அமர வைத்து பன சொல்ல வைப்பது, வெசாக் போன்ற அவர்களின் விசேச தினங்களில் சாப்பாடு சமைத்து கொடுப்பது மேலும் அவர்களின் விசேட வைபவங்களில் கலந்து மங்கள விளக்கு என்ற பெயரில் குத்து விளக்கு ஏற்றுவது. இப்படி மார்க்கம் என்ற பெயரில் எல்லை மீறி அல்லாஹ்வால் மன்னிக்கப்பட மாட்டாது என்று கூறும் பாவமான இணை வைத்தலை பகிரங்கமாக படித்த மௌலவிமார்களின் தலைமையில் அரங்கேற்றப்படுகிறது என்றால், பயிரே வேலியை சாப்பிடுவதை காண்கிறோம். மீன் கெட்டால் உப்பு போட்டு கருவாடாக மாற்றலாம், ஆனால் பதப்படுத்தக் கூடிய உப்பே கெட்டால்? துாக்கி வீசதான் வேண்டும். அது போல பொது மக்கள் தவறு செய்யும் போது படித்த மௌலவிமார்கள் அதை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்கலாம், ஆனால் படித்த இவர்களே பகிரங்கமாக தவறை செய்தால்? மக்களே! நீங்கள் இப்போது சிந்தியுங்கள்!
மிம்பரில் நின்று கொண்டு பாவம் செய்யாதீர்கள் என்று பொது மக்களைப் பார்த்து கை நீட்டி பேசும் மௌலவிமார்களே! பேசக் கூடியவருக்கு தான் முதல் உபதேசமாக இருக்க வேண்டும். கேட்க கூடியவர்கள் தான் சரியாக நடக்க வேண்டும். நான் எப்படியும் நடப்பேன் என்று மௌலவிமார்கள் இருக்க கூடாது.
தவறுகள் நடக்கும் போது கைகளால் தடுங்கள், அல்லது வாயினால் தடுங்கள், அல்லது மனதால் வெறுத்து ஒதுங்குங்கள். என்று இஸ்லாம் நமக்கு அழகான முறையில் வழிக்காட்டுகிறது. இதையெல்லாம் தெளிவாக படித்தவர்களே பாவங்களை கண்டு கொள்ளாமல் கூட்டாக சேர்ந்து சிரித்தவர்களாக பகிரங்கமாக செய்கிறார்கள் என்றால்? இதை யாரிடம் போய் சொல்வது?
தவறுகள் பகிரங்கமாக நடக்கும் போது அதை தடுக்காவிட்டால் எல்லோருக்கும் அழிவு தான் என்பதை நபியவர்கள் அழகான உதாரணத்தை எடுத்துக் காட்டி எச்சரிக்கிறார்கள். ஒரு கப்பலில் மேல் தட்டில் ஒரு சாராரும்,கீழ் தட்டில் மற்றொரு சாராரும் செல்லும் போது கீழ் தட்டில் உள்ளவர்கள் தண்ணீர் எடுக்க மேல் தட்டிற்கு போக வேண்டும். ஆனால் நாம் ஏன் மேலே போக வேண்டும் கப்பலின் ஒரு மூலையில் சிறிய துாவாரத்தை போட்டு கடலிலிருந்து தண்ணீரை எடுப்போம் என்று எடுக்கும் போது மேல் தட்டில் உள்ளவர்கள் எனக்கென்ன என்று பார்த்துக் கொண்டிருந்தால், இரண்டு சாராரும் சேர்ந்தே கடலில் மூழ்கடிக்கப்படுவார்கள் என்று நபியவர்கள் சொன்ன உதாரணத்தை சற்று நிதானமாக சிந்தியுங்கள்.
மார்க்கத்திற்கு முரணாணவைகள் பகிரங்கமாக நடக்கும் போது அதை செய்பவர்கள் நமது இனத்தை சார்ந்த அறிஞர்களாக இருந்தாலும், தவறை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்க வேண்டும். அதை அ. இ. உலமா சபை உடனுக்கு உடன் செய்ய வேண்டும். பாதிமா திருடினாலும் அவரின் கையை வெட்டுவேன் என்று கூறிய மார்க்கத்திற்குள் இருந்து கொண்டு மௌலவிமார்கள் பகிரங்கமாக செய்யும் பாவங்களை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்காமல் இருப்பது உலமா சபையின் இயலாத தன்மையைக் உறுதிப்படுத்துகிறது.
நாங்கள் தொலைபேசி மூலம் பேசிட்டோம், அல்லது சம்பந்தப்பட்டவர்களுடன் தனியாக பேசிவிட்டோம் என்று மீண்டும், மீண்டும் மாறி, மாறி பாவங்களை ஒருவருக்கு பின் ஒருவராக செய்ய வழி வைக்காதீர்கள். தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அவருடன் வேண்டுமானால் தனி பட்ட ரீதியில் தவறை சுட்டிக் காட்டி பேசிக் கொள்ளலாம். மாறாக பகிரங்கமாக செய்த ஷிர்க்கான பாவத்தை இனி மேல் யாரும் இப்படியான பாவத்தை செய்யக் கூடாது என்று அனைவருக்கும் விளங்கும் படி எடுத்துக் காட்டுங்கள்.
அ இ உலமா சபைக்கு மட்டும் இந்த பொறுப்பு கிடையாது, இன்று தஃவா களத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜமாஅத்துகளும், அல்லது அமைப்புகளும் இப்படியான தவறுகளை மக்களுக்கு நேரடியாக எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் தான் நன்மையை ஏவி, தீமையை தடுக்கிறோம் என்றால் இப்படியான விசயங்கள் தீமையாக தெரிய வில்லையா? நன்மைகள், தீமைகள், தெரியாமல்தான் இவ்வளவு காலம் தஃவா களத்தில் இருக்கிறீர்களா?
சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!