பெண் பெண்களுக்கு இமாமத் செய்தல்
பெண் பெண்களுக்கு இமாமத் செய்வது “ஜாயிஸ்” (ஆகுமானது) என்பதுதான் சரியான கருத்தாகும். இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்.
- ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பிக்கும் பொதுவான ஹதீஸ்கள் பெண்ணும் பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதை உணர்த்துகின்றது.
- பெண் இமாமத் செய்வதைத் தடுக்கக் கூடிய எந்த ஆதாரமும் வரவில்லை. தடை இல்லை என்பதால் பொதுவான அங்கீகாரத்திற்குள் அவர்களும் வருவார்கள். எனவே, பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும்.
- ஆயிஷா(ரலி) உம்மு ஸலமா(ரலி) போன்ற பெண்கள் இமாமத் செய்ததாக வரக் கூடிய செய்திகளும் இக்கருத்துக்கு வலுசேர்க்கின்றது.
“உம்மு ஸலமா(ரலி) அவர்கள் பெண்களுக்கு தொழுகை நடாத்தினார்கள். அப்போது அவர்கள் வரிசையின் மத்தியில் நின்றார்கள்.”
(நூல்: முஸ்னத் ஷாபீ 315,303, பைஹகீ 555, 5357)
“ஆயிஷா(ரலி) அவர்கள் பெண்களுக்கு பர்ழுத் தொழுகையை இமாமத் செய்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நின்று தொழுகை நடாத்தினார்கள்.”
(நூல்: முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் 5086)
இந்த அறிவிப்புக்களில் சின்னச் சின்ன குறைபாடுகள் உள்ளன. இருப்பினும் ஏனைய செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏற்கத்தக்க நிலையை அடைகின்றன. எனவே, மேற் சொன்ன மூன்று காரணங்களால் பெண் பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதை அறியலாம்.
ஒரு ஆண் தனது மனைவி அல்லது மஹ்ரமான உறவுடைய பெண்ணுடன் தனித்து ஜமாஅத்தாகத் தொழலாம். ஆனால், ஒரு அந்நியப் பெண்ணுக்கு ஒரு ஆண் தனியாகத் தொழுவிக்க முடியாது. ஏனெனில், ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருப்பதை மார்க்கம் தடுத்துள்ளது.
இதே வேளை, பல பெண்களுக்கு ஒரு ஆண் ஜமாஅத் தொழுவிக்கலாம். பல பெண்கள் இருக்கின்ற காரணத்தினால் தனித்திருத்தல் என்ற வட்டத்திற்குள் அது வராது. இருப்பினும் இதுவும் ‘பித்னா” ஏற்படாது என்ற நிலையில் மட்டுமே அங்கீகரிக்கப்படும். இவ்வகையில் பெண்கள் மத்ரஸாவில் ஆண் ஒருவர் அவர்களுக்கு ஜமாஅத் நடாத்துவதென்றால் அது ஜாயிஸாகும். இருப்பினும் பித்னாவுக்கு வாய்ப்பு இருந்தால் பெண்களே பெண்களுக்கு இமாமத் செய்து கொள்ளலாம். பெண் இமாமத்தை சில அறிஞர்கள் வெறுத்துள்ளனர். மற்றும் சிலர் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் தமது இஃலாமுல் முஃசினீன் எனும் நூலில் சுன்னாவை மறுப்பவர்களுக்கு உதாரணங்கள் கூறும் போது 51 வது உதாரணமாக பெண்கள் ஜமாஅத்தாகத் தொழுதல் என்ற தலைப்பில் இதை மறுத்து எழுதியுள்ளார்கள்.
பெண்கள் பள்ளிக்கு வருவதன் ஒழுங்குகள்: பெண்கள் ஜமாஅத்துத் தொழுகையில் கலந்து கொள்வதென்றால் அதற்கான தனியான ஒழுங்குகள் உள்ளன.
01. கணவனின் அனுமதி:
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்:’ உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர்: உமர்(வ) | நூல்: புகாரி: 5238, முஸ்லிம்: 442-34
பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் தடுக்காதீர்கள் என்ற இந்த ஹதீஸ் பள்ளிக்குச் செல்ல பெண் அனுமதி கேட்க வேண்டும் என்பதை உணர்த்தி, தடுப்பதற்குத் தக்க காரணம் இல்லையென்றால் பெண்ணின் பொறுப்பாளர் தடுக்கக் கூடாது என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
02. வாசனை, மேலதிக அலங்காரம் என்பவற்றைத் தவிர்த்தல்:
“(பெண்களே!) நீங்கள் இரவுத் தொழுகையில் கலந்து கொண்டால் வாசனை பூச வேண்டாம்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்: 443-141
03.ஆண்-பெண் கலப்பதைத் தவிர்த்தல்:
பள்ளிக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஆண்-பெண் கலப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக நபி(ச) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் சிறிது தாமதிப்பார்கள். ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து அகன்று விடுவார்கள். பெண்கள் சென்ற பின் ஆண்கள் பள்ளியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற ஒழுங்கைப் பேணியுள்ளார்கள். இந்த அடிப்டையில் ஆண்-பெண் கலப்பு ஏற்படாவண்ணம் ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஆண்கள் பள்ளிக்குச் செல்வதன் ஒழுங்குகள் சிலவற்றையும் இங்கே நோக்குவது பொருத்தமாகும்.
04. தொழுகைக்காக செயல்களை நிறுத்துங்கள்:
“நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நபி(ச) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நபி(ச) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.”
அறிவிப்பவர்: அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) | நூல்: புகாரி- 676-5363, 6039
05. வீட்டில் வுழூச் செய்து பள்ளிக்கு நடந்து செல்லல்:
“யார் தன் வீட்டில் வுழூச் செய்து கொண்டு பின்னர் தனது கடமையான ஒரு தொழுகையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஒரு வீட்டிற்குச் செல்கின்றாரோ அவரது ஒரு எட்டு பாவத்தை அழிக்கும் மறு எட்டு அவரது அந்தஸ்த்தை உயர்த்தும்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ) | நூல்: முஸ்லிம் 666-282
இந்த ஹதீஸின் அடிப்படையில் வீட்டில் வுழூச் செய்துவிட்டுச் செல்வது ஏற்றமாகும். அவ்வாறே நடந்து செல்ல முடியுமாக இருந்தால் நடந்து செல்வதே நல்லதாகும். குறிப்பாக இன்றைய காலத்தில் ஜம்ஆத் தொழுகைக்காக அதிகமானவர்கள் வாகனங்களில் வருவதால் பாரிய இடநெருக்கடியும் சிரமமும் ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரை வாகனத்தைத் தவிர்த்து நடந்து வருவது நல்லதாகும்.
06. தொழுகைக்காக நேரகாலத்துடன் செல்லல்:
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: “பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகிவிடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்று வதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸ§புஹ் தொழுகையிலும் இஷா (ஜமாஅ)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.”
அறிபிப்பவர்: அபூ ஹுரைரா(வ) | (புகாரி: 615, 654, 721, 2689)
இந்த ஹதீஸ் பள்ளிக்கு நேரத்துடன் செல்வதன் சிறப்பைச் சொல்கின்றது.
07. பதற்றமில்லாமல் நிதானமாகச் செல்லல்:
பள்ளிக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பதற்றத்துடன் ஓட்டமும் நடையுமாகச் செல்வதை இஸ்லாம் விரும்பவில்லை.
‘நாங்கள் நபி(ச) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ச) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் ‘உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)” என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ‘(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்” என்று பதில் கூறினர். ‘அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும் போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்” என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ கதாதா(வ) | நூல்: புகாரி: 635
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.’
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ) | நூல்: புகாரி: 636
08. பள்ளிக்குச் செல்லும் போதும் பள்ளிக்குள் நுழையும் போதும் ஓதவேண்டிய துஆக்களை ஓதுதல்:
நபி(ச) அவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது, “நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி(ச) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர்ப் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (வுழூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள்.
பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப் பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள் பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால்(வ) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள்.
அப்போது நபி(ச) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள். ‘அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன்.
பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(வ) கூறினார்.
(உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படுத்திடுமாறு நபி(ச) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(வ) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(வ) | நூல்: புகாரி: 6316
பள்ளிக்குள் நுழையும் போது வலது காலை முன்வைத்து : اللَّهُمَّافْتَحْلِيأَبْوَابَرَحْمَتِكَ
வெளியேறும் போது இடது காலை முன்வைத்து : اللَّهُمَّإِنِّيأَسْأَلُكَمِنْفَضْلِكَ
09. பள்ளிக்குள் நுழைந்ததும் தஹிய்யதுல் மஸ்ஜித் இரண்டு ரக்அத்துக்கள் தொழாமல் அமரக் கூடாது
நபி(ச) கூறினார்கள்: “உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் இரண்டு ரகஅத்துக்கள் தொழாமல் அமர வேண்டாம்.”
(ஸஹீஹூல் புகாரி : 1097)
10. இகாமத் சொன்னதன் பின் வேறு நபில் தொழுவதைத் தவிர்க்க வேண்டும்:
“தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டுவிட்டால் பர்ழான தொழுகையைத் தவிர வேறு தொழுகை இல்லை”யென நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 710, அபூதாவூத் 1266, நஸாஈ, திர்மிதி, 421)
அதான் கூறிய பின்னர் பள்ளியை விட்டும் வெளியேறியவரைப் பார்த்து அபூ ஹுரைரா(வ) அவர்கள் இவர் அபுல் காஸிம் (நபி(ச) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்கள்” என்று கூறினார்கள்.
(முஸ்லிம்)
ஏதேனும் அவசியத் தேவை இருந்தால் பள்ளியை விட்டும் வெளியில் செல்லலாம். அவ்வாறே தொழுகைக்கு வரும் நோக்கில் வெளியில் சென்றாலும் குற்றமாகாது. நபி(ச) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றதைப் பின்வரும் ஹதீஸ் மூலம் அறியலாம்.
“இகாமத் சொல்லப்பட்டு, வரிசைகள் சரி செய்யப்பட்டவுடன் நபி(ச) அவர்கள் (தொழுகை நடத்த) வந்தார்கள். அவர்களின் இடத்தில் நின்றதும் அவர்கள் தக்பீர் சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ‘உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். அவர்கள் குளித்துவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும் வரை நாங்கள் அப்படியே நின்றிருந்தோம்.”
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ) | நூல்: புகாரி- 639
ஜமாஅத்துத் தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு வரும் போது இது போன்ற ஒழுங்குகளைப் பேணிக் கொள்வது சிறப்பானதாகும்.