-பர்சானா றியாஸ்-
தொழிற் சுதந்திரம் முழுமையாகக் கட்டவிழ்க்கப்பட்ட நிலைமையில் வாழும் எம் பெண்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும் அதேவேளை, அதன் பின்புலத்தில் சில சமுதாயக் கட்டமைப்புகள் சிதைவடையும் நிலைமை உருவாகியிருப்பதை யாரும் கண்டுகொள்ளாதிருப்பது அறியாமையா? அல்லது சுயநலமா? எனும் கேள்வி எழுகிறது.
பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும் என்பதற்கான காரணத்தை பெண்னிலைவாதிகள் கீழ்குறிப்பிடும் சில கூற்றுகளால் முன்வைக்கின்றனர்
- பெண் தொழில் செய்வதற்காக கட்டாயம் வெளியே செல்ல வேண்டும். அவர்கள் முடங்கியிருந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.
- பெண்ணின் ஆளுமை விருத்திக்கு தொழில் அவசியம்.
- ஒரு பெண் வளர்ந்து வருகின்றபோது தந்தையை இழக்கலாம் திருமண பந்தத்தில் இணைந்ததன் பின்னர் திடீரென்று கணவன் விவாகரத்துப் பெறலாம் அல்லது கணவனை இழக்கலாம். இப்படியான நிலையில் அவளுக்கு மிகப் பெரும் பாதுகாப்பு ஆயுதமாக அவளது தொழில், உழைப்பு விளங்குகின்றது
என அவர்களின் வாதங்களை முன்வைக்கின்றனர். விரும்பத்தக்க மாறுதல் வந்து அனைவரும் உளமாற ஏற்றுக் கொள்ளும் பொழுது, விரும்பத் தகாதவையும் இலவச இணைப்பாக (package) வந்து ஒட்டிக்கொள்வதைப் போன்று இந்த வாதங்களில் ஒரு சில நியாயங்கள் இருக்கின்றபோதும் அதன் மறுதாக்கங்கள் என்ன? பாரதூரம் என்ன? என்பவற்றையும் கவனத்திற் கொள்ளவேண்டி இருக்கிறது.
பெண்கள் வேலைக்குப் போக தேர்ந்தெடுக்கும் காரணங்கள் பல.
- ஆடம்பரத்திற்காக
- தனது குடும்ப சுமைக்காக
- நிம்மதிக்காக
- ஆத்ம திருப்திக்காக
- ஆணுக்கு நிகராக
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
அது எந்த நோக்கமாகவேனும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அதுவே அவளுக்கு சுமையாக மாறிவிடும் துரதிஸ்டத்தைத்தான் இங்கு அலச வேண்டியுள்ளது.
தன்னுடைய உரிமை என்பதற்காக நியமனம் தொடக்கம் ஓய்வூதியம் வரைக்கும் தொழிலைச் செய்தே தீர வேண்டும் என்ற மனப்பாங்கு அந்தப் பெண் முதற்கொண்டு கணவன் மற்றும் குடும்பத்தினரின் மனதில் ஆழமாய் வேரூன்றி விடுகிறது. இந்த ஒரு எண்ணமே மீளமுடியாக் குழியில் அவளை வீழ்த்துவது மட்டுமன்றி, வாழ்வின் பல பக்கங்களை அவள் அனுபவிக்காமற்போக ஏதுவாகிறது.
- “வேலைக்கி போற உம்மாவ கஸ்டப்படுத்த வேணாமே” என்று விலகியே இருக்கும் குழந்தையின் பாசத்தினை அவள் இழந்து நிற்கும் அதேவேளை, நெறிபிறழ்ந்த குழந்தையை அவள் சமுகத்திற்கு ஒப்படைக்கும் கசப்பான தருணங்கள் ஏற்படலாம்.
- குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில், பல குழந்தைப் பேறுகளையும் எதிர்காலச் சந்ததிகளையும் அவள் இழக்கலாம்
- தன்னையே சுற்றிச் சுற்றிவரும் கணவரின் மனதில் போடப்பட்டிருந்த அன்பெனும் அரியாசனத்திலிருந்து அவள் இறக்கப்பட்டு சூழ்நிலையின் கைதியாக வெள்ளத்தில் அடிபட்டு ஓடும் சருகுபோல அவளது இல்லற வாழ்க்கை மாறலாம்.
- நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்படும் கவர்ச்சியான கடன் உதவிகளைப் பெற்றபின் கடன் மீள்நிரப்பியாகவோ அல்லது, பெற்றுக்கொண்ட சீட்டு மீள் நிரப்பியாகவோ அவளது மாத ஊதியம் பயன்படுத்தப்படலாம்.
இவற்றில் ஒன்றிலோ பலவற்றிலோ ஒவ்வொரு வேலைக்குப் போகும் பெண்ணும் அங்கம் வகிக்க வாய்ப்புண்டு.
எனவே, ஒருபெண் வேலைக்கு போவதென்றால், அவள் ஒரு மனுசியாக மட்டும் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை.
- தன் குழந்தைக்குச் சென்றடைய வேண்டிய தாய்மையைக் களவாடிப் போகிறாள்
- தனது கணவருக்குச் சேரவேண்டிய நிம்மதி குளிர்ச்சிகளையெல்லாம் தன்னோடு எடுத்துப் போகிறாள்.
- எவற்றை இழந்தோம் என்பதுகூட தெரியாமல் தன் குடும்பத்தின் ஆயுள்களை காரியாலயப் பொழுதுகளில் காலாவதியாக்கி விடுகின்றாள்.
இதன் இணைப்பாக அலசப்பட வேண்டிய மற்றொரு வேதனைக்குரிய விடயம், வயதான தனது பெற்றார்களையும் இதில் சேர்த்துக் கொண்டு அவர்களின் கையில் குழந்தை வளர்ப்பைத் திணித்து விடுவது.
அவர்களின் முதிர்ச்சியான அன்பும் அரவணைப்பும் குழந்தைகளுக்கு மருந்தைப் போன்றது. அதேவேளை ஓய்வும் ஆரோக்கியமும் வயோதிபர்களுக்கு இன்றியமையாதது. இருந்தும் இப்பொறுப்பினை அவர்கள் சிரமேற்கொண்டு உள்ளுக்குள் அவதியுறுகின்றனர்.
ஆனால், விதிவிலக்கான சில விடயங்கள் பற்றியும் இங்கு பேசலாம். அதாவது, பெண்மகப்பேற்று வைத்திய நிபுணர்(VOG), பெண் ஆசிரியைகள், பெண் விரிவுரையாளர்கள்… போன்ற பெண்களுக்கென்றே விசேடமாக வேண்டப்பட்ட பதவிகளுக்குத் தேவைப்பாடுள்ள சமுதாய இலட்சியங்களை மனதில் சுமந்த பெண்களும்,
அதேபோன்று, “எனக்கு ஆண்துணை இல்லை… நான் பணம் சம்பாதித்தால்தான்… என் குடும்பச் செலவை சமாளிக்கலாம்…” என்று சூழ்நிலை காரணமாகச் சம்பாதிக்க போகும் பெண்களும்,
இவர்கள் அத்தியவசியமாகத் தொழில் செய்ய எதிர்பார்க்கப்படுபவர்களாக இருக்கலாம். இவர்களின் இலட்சியங்களுக்கு துணையாக பெற்றாரென்ன? உற்றாரென்ன? சமுகமே சிறந்த ஊக்கியாகச் செயற்பட வேண்டியிருக்கிறது.
அதேவேளை, மேற்கூறிய காரணங்கள் தவிர கணவர், குழந்தை மற்றும் குடும்பங்களின் தொல்லைகளிலிருந்து தன்னை விடுவித்து பொழுதை இனிதே கழிக்கலாம் என்றெண்ணி வேலைக்குப் புறப்படும் பெண்களும்,
“வேலைக்கு போக வேண்டும்… கைநிறைய சம்பாதிக்க வேண்டும்…” என்ற நோக்கத்துடன் தன் பொறுப்புகளை மூன்றாம் நபர்களுக்கு பங்கிட்டு கொடுத்து விட்டுப் புறப்படும் பெண்களும், மறுமையில் இறைவனிடம் கேள்விக்கு உட்படுத்தப்படுவது யார்? என்பது பற்றிய தெளிவைப் பெற்றிருப்பது அவசியமாகும்.
ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் பொறுப்பு பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்.
ஆண்மகன் குடும்பத்தின் பொறுப்பு பற்றியும் பெண் தனது வீட்டின் பொறுப்பு பற்றியும் விசாரிக்கப்படுவார்.
என்னதான் மனைவி சம்பாதிப்பவளாக இருந்தாலும், குடும்பத்தின் பராமரிப்புக்கு சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் கணவனுக்குரியது என்கிறது இஸ்லாம். அதேபோல, குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது பெண்ணுக்குகடமையாகிறது. இரண்டையும் சமாளிக்க தன்னால் முடியும் என்பதுதான் இன்றுகளில் பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ள பெரும் சவால்.
- நாட்டின் எப்பாகத்திலும் வேலை செய்வேன் என்ற ஒப்பந்தத்தின் பின்னணியில் தூரப் பிரதேசத்தில் இடமாற்றம் கிடைத்தல்
- வேறு சில வரையறைகளின்கீழ் உடன்பாடற்ற இடமாற்றம் கிடைத்தல்
- திருமணத்திற்கு பின்னர் வீடா? அலுவலகமா? என்ற கேள்வி எழுதல்
- இவை தவிர வேறு பிரச்சினைகளைப் பெண் சந்தித்தல்
போன்ற தருணங்களில் தொழிலைத் தொடர்வதா? நிறுத்திக் கொள்வதா? அல்லது வேறு தொழிலுக்கு முயற்சிப்பதா? போன்ற கேள்விகளுக்கு முதலில் அவள் தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டியிருக்கும். வேலையைத் தொடர்தல் என்பது அவளது விருப்பத் தேர்வுக்குட்பட்டது.
ஒருவேளை, வேலையை நிறுத்திக் கொள்ளப்போகிறேன் எனும் முடிவுக்கு அவள் வருவாளாகில் அதற்கும் சாதகமாய் அமையும் வண்ணமான பொருளாதாரச் சூழலை முன்கூட்டியே உடனிருப்போர் ஏற்படுத்தியிருந்தால், அதுதான் அவளுக்கு இதுவரை வழங்கப்பட்ட சுதந்திரங்களுள் பூரணம் பெற்ற சுதந்திரம் எனலாம்.