பக்கத்து தெருவில் தனியாக வசித்து வந்த தந்தையொருவர் திடீர் மரணத்தை தழுவியிருந்தார். உயிருடன் இருக்கும்போது அவரது மனைவி பத்து வருடங்களுக்கு முன் சட்டபூர்வமாய் பிரிந்து விட்டதால் தன் பிள்ளைகளுடன் மாத்திரம் குடும்ப உறவைப் பேணி வாழ்ந்தவர் அந்த தந்தை. அவரது மையித் அவரின் புதல்வரொருவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வருகை தந்திருந்த இரு பெண்மணிகள் இவ்வாறு பேசுகிறார்கள்
பெண்மணி 01-
மையத்த எந்நேரம் அடக்குறாம்…
பெண்மணி 02-
அசறோட அடக்கிருவாங்களாம்… நேத்து நல்லா இருந்த மனிசனுக்கு இப்பிடி திடீர் மௌத்து வந்த வெரத்த பாத்தியா மச்சி…
பெண்மணி 01-
பொண்சாதியும் அவசரப்பட்டு பசகு செய்துற்றா… பிரிஞ்சி இருந்து என்னத்த சாதிச்சிற்றாவாம்… பாவம்… எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார் அந்த மனிசன்… ஹ்ம்… கண்ண மூடினா எல்லாம் முடிஞ்சி…
இந்தக் கருத்துக்கு தலையாட்டும் கூட்டம் அந்தப் பெண்மணிகளுக்குப் பக்கத்தில் இல்லாமலில்லை.
மரணித்தவரின் மனைவி கணவரைப் பிரிந்ததற்கான காரணம் வலுவானதா? இல்லையா? என்பதை ஆராய்வதாயிருப்பினும்கூட அதை அந்தத் திருமணக்கலைப்பு நடப்பதற்கு முன்பாக அல்லவா இவர்கள் ஒத்திகை பார்த்திருத்தல் வேண்டும்? மாறாக, அதற்கான காலமும் கடந்த நிலையில் இவ்வாறானதொரு கேள்வியை புதுப்பித்தலின் நோக்கம்தான் என்ன?
எப்போதோ நடந்து முடிந்த விவாகக் கலைப்புக்கும் அதன் பிற்பாடு நடந்த அவரது மரணத்திற்கும் முடிச்சிபோட்டுப் பேசும் இந்தப் பெண்கள் தனது கருத்தில் எதைத்தான் சொல்ல வருகிறார்கள்?
ஆணுக்கு பிடிக்காத திருமணத்தை “தலாக்” கொண்டு இலகுபடுத்திய இஸ்லாம் பெண்ணுக்கு பிடிக்காத திருமணத்தை “குல்உ” கொண்டு இலகுபடுத்தியுள்ளதை மறுக்கின்றார்களா?
தனது துணைவருடன் வாழமுடியாத சூழலில் மனைவி தனது உச்சகட்ட பொறுமையிழப்பில்தான் காதியாரை நாடுகிறாள். காதியார் சரிகண்டு பிரித்துவிட்ட இந்த மணமுறிவை இவர்கள் மீள்பரிசீலனை செய்கிறார்களா?
கணவரைப் பிரிந்த நிலையில் இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்பிருந்தும் அதைத் தவிர்ந்து, ஊராரின் இட்டுக்கட்டல்களுக்கும் ஆளாகாமல் தன்னையும் பாதுகாத்து, தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்கு அந்தப்பெண் செய்துவிட்ட தியாகத்தில் அர்த்தமில்லை என்கிறார்களா?
பெண்ணுக்கே பெண் எதிரி என்பது என்றும் தொடர்வதொன்றா?
– பர்சானா றியாஸ்