தனது சொந்த ஊரில் மார்க்க கற்கைநெறி ஒன்றை ஆரம்பித்து அதனூடாக மாணவர்களுக்கு வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த சகோதரர் ஒருவர் அதற்கான கட்டிடம் அமைப்பதற்கு இடமொன்று தேடிக்கொண்டிருந்த வேளை, அவரை நன்கு புரிந்திருந்த ஓர் ஊர் பிரமுகர் தனக்குச் சொந்தமான இடத்தினை அந்த வேலைத்திட்டத்திற்கென்றே அன்பளிப்புச் செய்திருந்தார். அதைப் பெற்றுக்கொண்ட சகோதரர் முதற்கட்டமாக எளிமையான கட்டிடம் அமைத்து கற்கைநெறியை ஆரம்பிக்கவும் செய்தார்.
நல்லமுறையில் இயங்கிக்கொண்டிருந்த அந்த கற்கைநெறியின் தரத்தினைப் பார்த்துத் திருப்தியடைந்த கல்விமான்களும் அண்மையில் வசித்து வந்த பல பெற்றார்களும் தங்கள் பிள்ளைகளை அதில் இணைத்துவிட்டனர்.
மேலும் பல நிதியுதவிகளைப் பெற்றுக்கொண்டு அதனை அபிவிருத்தி செய்ய முயற்சி எடுக்கப்பட்டவேளை, ஐந்து தென்னை மரங்கள் அந்த கல்விக்கூடத்தை அவ்விடத்திலிருந்து எழுப்புவதிலேயே கரிசனையாயிருந்தன என்பதுதான் வேதனைக்குரிய விடயமாக இருந்தது.
ஆம், இந்த மரங்களின் தேங்காய், குரும்பை, ஓலை மற்றும் மட்டைகள் எல்லாமே கூடத்தின் வளவு எல்லைக்குள் விழுந்தது மட்டுமன்றி உயிர்ஆபத்து பற்றியதான அச்சத்தையும் தோற்றுவித்தது. இதனால் அந்தக் கல்விச்சாலையின் அமைவிடம் வேறோரிடத்திற்கு மாற்றப்பட்டதோடு, அதன் அருகாமையை நம்பி போய்வந்து கொண்டிருந்த மாணவர்கள் பாதியிலேயே நின்றுவிடுவதற்கும் காரணமாயிற்று.
இத்தனைக்கும் காரணமான அந்த ஐந்து தென்னை மரங்களும் பக்கத்துவீட்டு வேலியோரங்களில் அதன் பராமரிப்பாளர்களால் நடப்பட்டிருந்தவை. தென்னை மரங்களால் தொல்லை என்று இந்தச் சகோதரர் பக்கத்து வீட்டாருக்குப் பலமுறை உணர்த்தவும் செய்துள்ளார். அவர்கள் அதுபற்றி எந்தத் தீர்மானத்திற்கும் வராதிருந்தார்கள்.
ஒருநாள் தேங்காய் விழுந்து தனது காரியாலய அறையில் இருந்த கணிணி சேதமடைந்ததையடுத்து,
மீண்டும் அந்தச் சகோதரர் பக்கத்து வீட்டாரிடம் விடயத்தைக்கூறி, மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மற்றும் செலவுகளை தானே மேற்கொள்வதாகக் கேட்டிருந்தும் அவரது கோரிக்கையை உதாசீனப்படுத்தி விட்டார்கள்.
மரங்களை நடும்போதே அதன் வேர், கிளை மற்றும் அசைவுகள் என்பவற்றையும் கருத்திற்கொண்டு நிலஎல்லைகளை வரையறுத்து நட்டியிருந்தால் இப்படியான அசௌகரியங்களில் இருந்து அனைவரும் பாதுகாப்பு பெற்றிருக்கலாம்.
“எவனுடைய நாச வேலைகளிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ, அவன் சுவர்க்கம் செல்ல முடியாது”
என்ற நபிமொழி என்றோ அந்தப் பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டபோது, அதைக் கேட்டுவிட்ட அந்த ஐந்து தென்னை மரங்களும் இன்றும் அழுதுகொண்டே நிற்கின்றன. தாங்கள் அடுத்தவர்களுக்குத் தொந்தரவாய்ப் போனதையெண்ணி…
– பர்சானா றியாஸ்