தொகுப்பு : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், மேலும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.
அல்லாஹுத்தஆலா தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான். “வானங்கள், பூமிகள் படைக்கப்பட்ட நாட்களில் இருந்தே அல்லாஹ்வின பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும்.” (அத்தவ்பா:09)
அந்த அடிப்படையில் இஸ்லாமிய மாதங்களாக முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் போன்ற பன்னிரெண்டு மாதங்களில் நான்கு மாதங்களை அல்லாஹுத்தஆலா கண்ணியமிக்க மாதங்களாக ஆக்கியிருக்கின்றான்.
இந்த புனிதமான 04 மாதங்கள் எவைகள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபீ பக்ரா (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: அல்லாஹுத்தஆலா வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்து பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானிக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முழர் குலத்து ‘ரஜப்’ மாதமாகும். (புஹாரி : 4662)
அந்த அடிப்படையில் இந்த மாதங்களில் போராடுவது தடுக்கப்பட்டதின் ஊடாக கண்ணியப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று வேறுசில மாதங்களை வேறுவிடயங்களில் மூலம் அல்லாஹ்வினாலும் அவனது தூதரினாலும் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பொழுது நாம் இருப்பது சந்திர கணக்குப்படி எட்டாவது மாதமான ஷஃபான் மாதமாகும். இதன் சிறப்பைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
உஸாமதிப்னு ஸைத் (றழி) அவர்கள் நபியவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறியபோது, நபியவர்கள்; “மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்” எனக் கூறினார்கள். (அந்நஸாஈ)
குறிப்பு : இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்பதாக இமாம் அல்பானீ (றஹ்) அவர்கள் தனது இர்வாஉல் கலீல் எனும் நூலில் (பாகம்3 பக்கம்103) பதிவு செய்துள்ளார்கள்.
பொதுவான வாரநாட்களைப் பொருத்தவரையிலும் மனிதர்களுடைய செயல்கள் அல்லாஹுத்தஆவிடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் செயல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. எனவே, எனது செயல்கள் நான் நோன்பாளியாக இருக்கின்ற நிலைமையில் எடுத்துக்காட்டப்படுவதை விரும்புகின்றேன்” (அஹ்மத் , திர்மிதி , இப்னு மாஜா)
எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஷஃபான் மாதத்தில் அதிகமான நோன்புகளை நோற்றிருக்கின்றார்கள். இதனைப் பற்றி ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “நபியவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழுமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும்.” (புஹாரி, முஸ்லிம்)
உம்மு ஸலமா (றழி) அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் , ரமழான் ஆகிய இரு மாதங்களைத் தவிர வேறு மாதங்களில் தொடர்த்தேர்ச்சையாக நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை.” (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபானைத் தவிர வேறுமாதங்களில் அதிகம் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. அவர்கள் அதிலே சில நாட்களைத்தவிர மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்” (திர்மிதி, அந்நஸாஈ)
ஆயிஷா (றழி) அவர்கள் கூறுவதை அபதுல்லாஹ் பின அபீ கைஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும் அதனைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும்” (அபூதாவூத், நஸாஈ)
“நபியவர்கள் ஷஃபான் மாதத்தைப் போன்று வோறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்; உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது. நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள்.” (புஹாரி, முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட அனைத்து ஹதீஸ்களினூடாக விளங்குவது என்னவென்றால்.…… நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகமான நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதாகும். அத்துடன் நபியவர்கள் கூறியதுபோல் மக்களில் அதிகமானவர்கள் இம்மாதத்தில் அதிகமாக பாராமுகமாக இருக்கின்றார்கள்.
எனவே, நாம் இம்மாதத்தில் அதிகமான நோன்புகளை நோற்பதினூடாக இம்மாதத்தை உயிர்ப்பிப்பதுடன், ரமழானுக்குரிய ஒரு பயிற்சிப்பாசரையாக இதை அமைத்துக் கொள்வோம்.
மேலும், ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் நிலையில் இம்மாதத்தில் நோன்பு நோற்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு நோற்கும் ஒரு மனிதரைத்தவிர, அவர் (மாத்திரம்) அந்நாளில் நோன்பு நோற்கட்டும்.” (புஹாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸில் வரக்கூடிய வழமையாக நோன்பு நோற்கும் ஒரு மனிதரைத்தவிர என்ற வாசகத்தின் கருத்து என்னவென்றால் : ஒருவாpன் வழமையாக திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு வைப்பதாக இருக்கின்றது. எனவே, அவரைப் பொருத்தவரை அந்நாட்களில் நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது.
மேலும், சென்ற ரமழானில் விடுபட்ட நோன்புகளை நோற்பதற்குரிய சந்தர்ப்பமாகவும் இம்மாதத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதனைப் பற்றி ஆயிஷா (றழி) அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை” (புஹாரி, முஸ்லிம்)
ஆயிஷா (றழி) அன்ஹா அவர்களின் இக்கூற்றின் மூலமும் செயற்பாட்டின் மூலமும் விளங்குவது என்னவென்றால் : தகுந்த காரணங்களுக்காக ரமழான் நோன்பு விடுபட்டவர்கள் வேறு நாட்களில் அவர்கள் அந்த நோன்பை அடுத்த ரமழானுக்கு முன்பதாக நிறைவேற்ற வேண்டும். அந்த அடிப்படையில் ஷஃபான் வரை பிற்படுத்துவதற்கு அனுமதி இருக்கின்றது.
எனவே, நபியவர்கள் இம்மாதத்தை (ஷஃபான்) எவ்வாறு உயிர்ப்பித்தார்களோ அந்த அடிப்படையில் நாமும் உயிர்ப்பிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நபியவர்கள் காட்டித்தராத வழிவகைகளில் அதனுடைய நாட்களையும் இரவுகளையும் நாங்கள் நினைத்தாற்போல் உயிர்ப்பிக்க நினைத்தால் நன்மைக்குப் பகரமாக தீமையைத்தான் சுமந்துகொள்ள வேண்டிவரும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யார் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உருவாக்குகிறானோ அது நிராகரிக்கப்படும்” (புஹாரி, முஸ்லிம்)
மற்றுமொரு அறிவிப்பில்: “யாரேனுமொருவர் ஒரு செயலைச் செய்கிறார் அதிலே எங்களில் ஏவுதல் (அனுமதி) இல்லாதபோது அச்செயல் (நிச்சயமாக) நிராகரிக்கப்படும்.” (முஸ்லிம்)
எனவே, எச்செயலாக இருந்தாலும் அது அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்று அதன் மூலம் நம்மை கிடைக்க வேண்டும் என்றால் இரண்டு நிபந்தனைகள் உள்ளன:
- இஹ்லாஸ் எனும் மனத்தூய்மை அதாவது அல்லாஹ்வுக்காவே செய்கிறேன் என்ற நிலைப்பாடு.
- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்.
இவைகள் இரண்டும் இல்லையென்றால் நாம் எச்செயல்களை செய்தாலும் அது அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறமட்டாது, மாறாக அது நிராகரிக்கப்படும்.
எனவே, இந்த ஷஃபான் மாதத்தை பூரணமாக நபியவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பயன்படுத்த வல்லவன் அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக.
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!