சிகிச்சைக்காக அறையினுள்ளே நுழைந்த அந்த முஸ்லிம் பெண் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது, தடுமாற்றத்துடன் காணப்பட்டார். அத்துடன், தனது மேலங்கியினால் ஒருபக்க கையை மூடுவதற்கு மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டதையும் அவதானித்தேன். அப்பெண் எனக்கு அறிமுகமற்றவராக இருந்தமையினால் ஒரு புன்னகையுடன் கடந்து விட்டார். அது மாவட்ட வைத்தியசாலை என்பதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் தாதியர்களுமே அதிகம்பேர் இருந்தார்கள். நானும் ஒரு சேவை நாடியாக அங்கே காத்திருப்பு வரிசையில் உட்கார்ந்திருந்த பொழுதில்தான் அந்தப் பெண்ணை அவ்வாறு காண நேர்ந்தது.
பின்னர், பக்கத்திலிருந்த மற்றொருவர் மூலமாக அதன் காரணத்தினை அறியக் கிடைத்தது. அந்தப்பெண் அணிந்திருந்த ஆடை ஊசிமருந்தேற்றத் தடையாக இருந்ததனால் தோள்ப்பட்டையின் மேற் பகுதியில் இருந்த ஹபாயாவின் துணியைக் கத்தரிக்கோலால் வெட்டி சிகிச்சை செய்திருந்தார்களாம். அந்தப்பெண்ணுக்கு மட்டுமல்ல பல பெண்களின் கசப்பான அனுபவமாக இது மாறிப் போயிருந்ததையும் மேற்கொண்டு அறிய முடிந்தது.
இந்தச் சம்பவத்தினைக் கூறியவர்களின் வார்த்தைகளில்,
“ஆடையை வெட்டினார்கள்… ஆக்ரோசமாக வெட்டினார்கள்…” என்ற இனவாதச் சாயமும் கலந்திருந்தது. தாதியர்கள் தனது சேவைகளை அனைவருக்கும் வழங்க வேண்டியவர்கள். அதற்கு ஒத்துழைப்பது சேவைநாடிகளின் கடமையாகும். அதற்கு இடைஞ்சல் கொடுக்கும் விதமாக இவ்வாறு இறுக்கமான ஆடையணிந்து அதை வெட்ட வேண்டிய சந்தர்ப்பத்தினை தாங்களாகவே அவர்களுக்கு வழங்கிவிட்டுப் பின்னர் நடந்த சம்பவத்திற்கு இனவாத முலாமிடுவதை எவ்வாறு ஏற்பது?
கடந்துபோன ஒரு பண்டிகைக்கு ஆடை கொள்வனவுக்காக நகர்க் கடைப் பக்கம் சென்றிருந்தோம். அதன் உரிமையாளர் ஒரு பெண். அங்கிருந்த ஹபாயா ஒன்றினை எடுத்துப் பார்த்தபோது அதன் மணிக்கட்டுப் பகுதியில் அலங்கார வேலைகளை முன்னுரிமைப்படுத்தியும் நீண்டு கொடுக்க முடியாத துணியினாலும் அதன் கைப்பகுதி மிக இறுக்கமாகப் பொருத்தப்பட்டிருந்தது. அதுபற்றி அந்த பெண் உரிமையாளரிடம் வினவியபோது,
“இப்போ இதுதான் லேற்றஸ்…”
என்றார்.
“சரி இந்த ஆடை முஸ்லிம் பெண்களுக்கென்றுதானே வருகிறது…
இதையணிந்துகொண்டு எவ்வாறு வுழு செய்வது…”
எனக் கேட்டேன்.
“துணிக்கு மேலாகச் செய்கிறார்கள்…” எனப் பதிலளித்தார் அப்பெண்.
அப்பெண் கூறியதில் எனக்கு எதுவுமே புரியவில்லை. அத்துடன், பல நுகர்வோர் இருந்தமையினாலும், எனது வீட்டாரின் அவசரத்தினாலும் அங்கிருந்து வெளியேறினேன்.
காலுறைக்கு மஸஹு செய்ய இஸ்லாம் வழங்கியுள்ள அனுமதியை அந்தப்பெண் கையுறையாக மாற்ற முனைந்தாரா? அல்லது, துணியுடன் சேர்த்தவாறே கையை நனைப்பதாக கூறினாரா? எதுவாயினும் ஆடைகளை விற்பனை செய்தேயாக வேண்டும் என்ற உறுதியும் நோக்கமுமே அந்தப் பெண்ணிடம் இருந்தது.
இந்நிலைமையே பெரும்பாலான ஆடையகங்களில் தொடர்கிறது. வீட்டில் இருந்து புறப்படும்போது, தான் கொள்வனவு செய்யப்போகும் ஆடை பற்றிய அழகிய கனவு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கவே செய்கிறது. ஆனால், எல்லாம் முடிந்து திரும்பி வரும்போது,
“இருந்ததில் பிடித்ததை எடுத்தேன்…”
என்று மனதைத் தேற்றி ஆடைக்காக கொள்கைகளை தியாகம் செய்யவேண்டியிருக்கிறது.
இந்த அவசர உலகில் உள்ளூர் தையல்காரர்களின் சேவையைப் பெறுவதாயின், துணியையும் தன் உடலளவையும் கொடுத்துவிட்டுப் பின்னர் சில நாட்கள் காத்திருந்து, தாமதமானால் அதை ஆளனுப்பியேனும் ஞாபகப்படுத்தி பெறவேண்டியிருக்கும். அத்துடன்,
“இவ்வாறுதான் தையுங்கள்…” என ஏற்கெனவே துணிச் சொந்தக்காரரால் கூறப்பட்டிருந்தும் அதனைச் சற்று திருத்தம் செய்து ஆடைச் சிக்கனம் செய்வதிலும் பெரும்பாலான தையல்காரர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
காரணம் கேட்டால்,
” அதுதான் இப்ப பெசன்…” என்று பாடம் நடத்துவார்கள்.
இவையெல்லாம் தாண்டி அது நம்மிடம் வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுவதனாலும், நேர விரயத்தை தவிர்ப்பதற்காகவுமே றெடிமேற் ஆடைகளை நோக்கி பெரும்பாலானோர் படையெடுக்கின்றனர்.
பயநுகரிகளின் இந்த உளவியலும், ஆடைக் கடைக்காரர்களின் உளவியலும் முரண்படும் இடம்தான் தற்போது இஸ்லாமிய ஆடைக்கலாசாரம் விமர்சனத்தை நோக்கி நகரும் முக்கிய தளமாக இருக்கின்றது.
ஆடையையும் மனிதனையும் எவ்வாறு பிரிக்க முடியாதோ, அதுபோல ஒரு இஸ்லாமியனின் வாழ்வையும் தொழுகையையும் பிரிக்க முடியாது. அந்தத் தொழுகையின் திறவுகோலாக வுழு இருக்கின்றது. வுழுவில் இரு கைகளையும் முழங்கைவரை கழுவுதல் கடமை. ஐவேளைத் தொழுகைக்கும் மேலதிகமாக வுழுவைத் தொடராக பேணுதல் என்பதும் எமக்கு சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாழ்வியலை கருத்திற்கொண்டாலே எமது ஆடைகளின் கைகளை முழங்கைக்கு மேலே உயர்த்தும் அளவுக்கு இடைவெளிவிட்டுத் தைத்துக்கொள்ளும் அவசியத்தை உணரலாம்.
வீட்டில் தைக்க நினைப்பவர்கள் கைப்பகுதியினை தளர்வாகத் தைத்து மணிக்கட்டில் இலாஸ்ரிக், பட்டன், கொக்கி, ஐலட் போன்றவைகளைப் பொருத்துவதன்மூலம் நோக்கத்தை பேணலாம்.
அடுத்து, எம்மையறியாமலே தொழுகை நேரம் வந்தடையும். பலர் தொழுகைக்கென பிரத்தியேக ஆடையை வைத்திருப்பர். நாம் அன்றாடம் அணியும் ஆடையே தொழுகைக்குரியதாக இருந்தால் அதுவே எமது அவ்றத்தின் நிபந்தனைகளையும் பேணிவிடும்.
வேலைத்தலங்களில் சாரி அணிந்து செல்பவர்களுக்கு அதை உடுத்தும் முறை காரணமாக மறைக்க வேண்டிய சில பகுதிகள் தன்னையறியாமல் வெளிப்பட இடமுண்டு. அத்துடன், சாரி இறுக்கமாக உடுத்தப்படுவதனால், அதற்கு இன்னுமோர் மேலாடையும் அவசியப்படுகிறது.
அதேபோல், கடைகளில் கொள்வனவு செய்யும் ஹபாயாக்கள் எமது முழு விருப்பப்படி அமைவதில்லை. உடலோடு ஒட்டியதாக அமைந்துவிடுவதுண்டு. அவற்றை விலைகொடுத்து வாங்கிவிட்டோமே என வருந்துவோர் அதற்கு மேலாக தளர்வான கோட் ஒன்றைச் சேர்த்து அணிந்து கொள்ளலாம்.
இறையளித்த அருள்கள்தான் நிறங்கள். நமக்காகவே அருளப்பட்டவை. வெளியில் போகும்போது மாத்திரம் பார்வையை ஈர்க்கும் நிறங்களை தவிர்த்து அணியலாம்.
மேலும், அணியும் துணிகள் பற்றிய அறிவின்மையால், பெரும்பாலான பெண்கள் உடலுக்கு சுகாதாரமான துணிகளை விலக்கிவிட்டு ஆடம்பரத்திற்கு அடிமையாகி உடல் உபாதைக்கு உள்ளாவதுமுண்டு. அத்தோடு, ஈமானின் பாதியான சுத்தத்தினை கடைப்பிடிக்காமல் அதை மறைக்கும் கருவியாக ஹபாயாவை பயன்படுத்தும் சில பெண்களும் எமது சூழலில் இருக்கிறார்கள். மற்றைய சமூகங்களுக்கு முகச்சுழிப்பையும் மரியாதைக் குறைவையும் ஏற்படுத்துவதாக இது அமைகிறது.
ஹபாயா அணிவதில் நேரச்சிக்கனத்தை உணர்வதாக வேலைக்கு போகும் பெண்கள் அனுபவத்தில் கூறுகிறார்கள். இதை இஸ்லாமியர்கள் அணிந்து பழக்கப்பட்டதற்காய் ஏனையவர்கள் அணியக்கூடாது என்ற உளவியலை வளர்ப்பது தேவையற்றது. பொதுவாக பெண்கள் மறைத்தல் என்பதை தன்னம்பிக்கையாக அன்றி, சுமையாக நினைக்காத வரையும் அவளுக்கு ஆடையே பெரும் துணையாக இருக்கும்.
கடந்த வருடம் 2017.07.25 இல் கர்ப்பிணி ஆசிரியைகளுக்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 27/2017 ஆம் இலக்க சுற்று நிரூபம் மூலம் அவர்கள் அணியவேண்டிய ஆடை அமைப்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பதை புகைப்படத்துடனேயே வெளியிட்டது. அதாவது, கழுத்துப் பகுதியில் சேர்த்துத் தைக்கப்பட்டு கீழ்நோக்கி தொங்கவிடப்பட்ட முன்துண்டொன்றுடனும் வயிற்றுப்பகுதியில் பிளக்கப்பட்ட மேலாடையுடனும் கூடிய அரைநீளச் சட்டையும் காற்சட்டையுமாகும். இதனை முஸ்லிம் பெண்கள் விரும்பினால் அணியலாம் என்ற விருப்பத்தேர்வும் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்கள் இவ்வாறு கௌரவப்படுத்தப்படுவதற்கு காரணம் அவர்களின் மகத்துவமே!
இத்தா இருக்கும் பெண்களுக்கு சாயமூட்டப்பட்ட ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளது. என்றால் கணவருடன் வாழும் பெண்களுக்கு அது ஆகுமாக்கப்பட்டிருக்கும் இரகசியம் என்ன? எத்தனையோ வகையான அலங்கார ஆடைகள் இருக்க “சாயமூட்டப்பட்ட ஆடை” என்று இறைவன் குறிப்பாகக் கூறுவதன் காரணம் என்ன?
சுஜுதுக்கு செல்லும்போது பின்புறம் அவ்றத் வெளிப்படும் ஆடைகளை இளம் ஆண்கள் பள்ளிவாயலுக்குள் அணிந்து வருவதாக முதியோர் குற்றஞ் சாட்டுகிறார்கள். இவ்வாறு இறுக்கமான காற்சட்டைகளை அணிந்து அதனால் உடல் வளர்ச்சியை கெடுத்துக் கொள்ளும் இளம் தலைமுறையினர் எதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்?
பெசன் என்ற பெயரில் உடற்சுகாதாரத்தினைக் கெடுக்கும் மனப்பாங்கிலிருந்து நுகர்வோரை கடைக்காரர்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.
எந்த வகை ஆடையாயினும் அதன் வடிவமைப்பு இஸ்லாம் எடுத்துரைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுகின்றதா? எனப் பரீட்சிப்பதும், நியமிக்கப்பட்ட ஒரு குழுவினர் அதில் திருப்தியடைதலும் என்ற அமைப்பில் ஆடை வடிவமைப்பாளர்களுக்கு அது பற்றிய பயிற்சியை ஊட்டுவதற்கு ஒரு பாடத்திட்டம் தயாராக்கப்படல் வேண்டும் என்பது பலரது கருத்துக்கள்மூலம் முன்வைக்கப்படும் ஆதங்கமாகும்.
Assalaamu alaikkum. Sister Rizwana has highlighted a very valid point. Instead of blaming others, we need to see ourselves first.