Featured Posts

பாடம்-01 | இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம்

இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம்.

லா இலாஹ இல்லல்லாஹ் என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. அவையாவன மறுப்பதும் உறுதிபடுத்துவதுமாகும்.

முதலாவது:

எல்லாப் புகழுக்கும் உரிய அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்க்கும் தெய்வீகத் தன்மை கிடையாது என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறும் ஷஹாதா மறுக்கிறது. அல்லாஹ்வை அன்றி ஏனையவைகள் மலக்குகள், நபிமார்கள், ஏனைய மனித இனங்கள், சிலைகள், உலகின் அரசியல் சக்திகள் ஆகிய எவையும் தெய்வங்களுமல்ல, அவற்றிற்கு தெய்வீகத் தன்மையும் கிடையாது. இவை அனைத்தும் தெய்வ உருவில் இன்றும் உலகில் இருப்பதை இறை நம்பிக்கை சாட்சியம் மறுக்கவில்லை. மாறாக மனிதனால் அவற்றிற்கு அளிக்கப்பட்ட தெய்வீகத் தன்மையை இந்த ஷஹாதா மறுக்கிறது.

இரண்டாவது:

லா இலாஹ இல் அல்லாஹ் என்ற சாட்சியம், தெய்வீகத் தன்மை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டென்பதை உறுதிப்படுத்துகிறது. அடியானாகிய மனிதன் உண்மை இறைவனாகிய அல்லாஹ்வை மாத்திரமே விசுவாசிக்க வேண்டும் என்பதோடு அவனுக்கு மாத்திரமே வணக்க வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பதையும் இந்த ஷஹாதா உறுதிப்படுத்துகிறது.

முஹம்மத் அர் ரசூல் அல்லாஹ் என்பதன் பொருள்:

‘யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னுடைய உண்மை தூதர் என்று சாட்சி கூறுகிறேன்’ என்று உள்ளத்தில் உறுதி கொண்டு நாவால் மொழியும் போது , அல்லாஹ்வின் கட்டளைக்குப்பின் மனிதர்கள் அனைவரும் பின்பற்றுவதற்குரியவர் அல்லாஹ்வின் கடைசித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என இந்த சாட்சியம் உறுதிப்படுத்துகிறது.

குர்ஆனில் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்:

‘உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது (ஸல்) தகப்பனாக இருக்கவில்லை: எனினும் அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு (கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார்’. 33:40

‘அன்றியும் (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்’. 59:7

‘(நபியே! மனிதர்களிடம்) கூறுவீராக. நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள்’. 3:31

எனவே அல்லாஹ்வின் குர்ஆனுக்கும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுக்கும் (சட்டங்கள், கட்டளைகள், வணக்க வழிபாடு முறைகள், கூற்றுக்கள்) பொறுத்தமானவையாக, ஏனைய மனிதர்களின் கூற்றுக்கள் இருந்தால் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

லா இலாஹ இல் அல்லாஹ் என்ற கலிமாவின் நிபந்தனைகள்.

1. அறிவு: வணக்கத்துக்கு உரிய ஒரே இறைவன் அல்லாஹ் ஒருவனே என்பதையும், அவனுக்கே சகல வணக்க வழிபாடுகளும் உரியன என்பதையும் அறிவதும், அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் ஏனையவைகள் நன்மையோ தீமையோ செய்ய எவ்வித சக்தியுமற்றவை என்பதனால் அப்படிப்பட்ட பிழையான வழிபாடுகளை விட்டும் நீங்க வேண்டும் என்ற அறிவு.

2. அல்லாஹ்வின் மீது எல்லா சந்தேகங்களையும் விட்டும் நீங்கிய உறுதி.

3. கலிமாவின் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளுதல்.

4. அல்லாஹ் மாத்திரமே ஒரே இறைவன் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கடைசி நபியும், தூதரும் ஆவார்கள் என்பதையும் மனமுவந்து விரும்பி ஏற்றுக் கொள்ளுதல்.

5. கலிமாவின் அவசியங்களை நேர்மையுடன் நிறைவேற்றல்.

6. சகல வணக்க வழிபாடுகளையும் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிறைவேற்றுதல்.

7. உயர்ந்தவனாகிய அல்லாஹ்விடம் பற்றுதல், அவனுடைய தூதரிடம் பற்றுதல், அவனுக்கு வணக்கம் புரியும் உண்மை அடியார்களிடம் பற்றுதல், என்பதன் மூலம் எல்லா முஸ்லிம்கள் மீது பற்றுதல் வைத்தல்.

இறுதியாக, அல்லாஹ் ஏவியவைகளை செய்வதிலும், அவன் தடுத்தவைகளை விட்டும் நீங்குவதன் மூலமும், அவனுடைய கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். அவன் மீது பற்றுதல் வைப்பதன் மூலம், அவனுடைய தண்டனைகளுக்கு பயப்படுவதன் மூலம், அவனிடம் பரிசு பெறும் ஆவலுடன் அவனுடைய மன்னிப்பை தேடுவதன் மூலம், அவனுடைய கடைசி நபியாகிய முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்றுவதன் மூலம், அல்லாஹ்வை அடிபணிய முடியும். கடைசி தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீயா, அதற்கு முன் வந்த சகல சட்ட திட்டங்களையும் வணக்க வழிபாடுகளையும் நீக்கியதுடன் அவை அனைத்திலும் உள்ள சிறந்த அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகும்.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *