Featured Posts

மறுமை நாள் (அத்தியாயம்-1)

மறுமை நாள் அவசியமா?

பூமி என்ற இச்சிறிய கோளில் மனித ஆயுள் வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலம் மட்டுமே! ஆனால் வாழ வேண்டும் என்ற ஆசையோ அவனை விட்டு பிரிவதே இல்லை. நிரந்தரமாக அழியாது வாழ வேண்டும் என்ற எண்ணம் அவனது உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்ட இயற்கை உணர்வு.

அவன் உள்ளத்தில் உள்ள ஆசைகளோ எல்லையற்றவை. நிறைய ஆசைகள், எதிர்பார்ப்புகள், இலட்சியங்களோடு அவன் வாழ்கிறான். சொந்தங்களையும், உறவுகளையும், தோழர்களையும் உருவாக்கிக் கொள்கிறான். அவர்களை ஆழ்ந்து விரும்புகிறான். அவர்களை நிரந்தமாக பிரிய அவன் விரும்புவதில்லை.

வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித இயல்பாக இருக்க……..
எல்லையற்ற ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும்,
இலட்சியங்களையும் சுமந்திருக்க……………
பிரிய முடியாத உறவும் தோழமையும் இருக்க………
அவன் பிரிந்து செல்கிறான்……………….
மனிதன் மரணித்து விடுகிறான்.

இப்பிரிவுக்குப் பிறகு ஒரு சந்திப்பு இருக்காதா?…….
பிரிந்தவர்கள் ஒன்று கூடவே முடியாது போய்விடுமோ!!
அந்த இலட்சியங்களும், ஆசைகளும் அர்த்தமற்று அழிந்து
போவதுதானா?!                                  இது ஒன்று!

மனிதன் நன்மையையும், தீமையையும், நீதியையும், அநியாயத்தையும் புரிந்து கொள்கிறான். இது மனித இயற்கை. அந்த நன்மைக்கு நன்மையும், தீமைக்குத் தண்டனையும், அநியாயத்திற்குக் கூலியும் கிடைக்க வேண்டும் என்று ஆழ்ந்து விரும்புகிறான், எதிர்பார்க்கிறான்.

தீமை வாழ்வதை, நன்மை ஒடுங்கிப் போவதை, நீதி பின் தள்ளப்படுவதை, அநியாயம் கோலோச்சுவதை அவனால் சகிக்க முடிவதில்லை.

எனினும் இந்தப் பூமியில் நன்மையும், தீமையும், அநியாயமும் அவற்றுக்கான கூலியை பெறுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் தீமை மாலை போட்டு வரவேற்கப்படுகிறது. அநியாயம் சிம்மாசனமேறி ஆள்கிறது.

இதுதான் முடிவா? தீமையும், அநியாயமும் அவற்றிற்கான தண்டனையைப் பெற மாட்டாதா?

நன்மையும், நீதியும் அவற்றிற்கான வெகுமதியைப் பெற முடியாது போய்விடுமா?!

மனித உள்ளத்தின் ஆழ்ந்த அங்கலாய்ப்பு இது.   இது இரண்டாவது!!

மனிதன் இப்பிரபஞ்சத்தின் உயர்ந்த சிருஷ்டி. இதனை அவனால் சாதாரணமாகவே உணர முடிகிறது. அவனால் ஏனைய எல்லா உயிரினங்களையும், பொருட்களையும் பணிய வைத்துக் முடிகிறது. தனது நலன்களுக்கு பயன் படுத்திக் கொள்ள முடிகிறது.

முழுப் பிரபஞ்சமும் அவன் நலனுக்காக இயங்குவது போன்றே தெரிகிறது. அப்படியிருக்க, அவன் முடிவு ஒரு சாதாரண தாவரத்தைப் போல், ஒரு சின்னப் பூச்சி, ஒரு அற்ப மிருகத்தின்முடிவு போல் அமைய முடியுமா?

எல்லாம் மண்ணோடு மண்ணாய்ப் போய் விடும்…….
இதுதான் முடிவா?!

தனது தனிப் பண்புகளுக்கு, விஷேட தன்மைக்கு இயற்கை ஒரு வித்தியாசமான உயர்ந்த முடிவைய்த் தர வேண்டுமென மனித இயல்பை எதிர்பார்க்கிறது. அவ்வாறில்லாமலிருப்பதை அவனால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.      இது மூன்றாவது!!!

மனித உள்ளத்திலிருந்து, அவனது இயல்பிலிருந்து பிறக்கின்ற இம்மூன்று ஊற்றுக் கண்களிலிருந்து தான் மறு உலக வாழ்வு பற்றிய எண்ணம், மறுமை நம்பிக்கை ஊற்றெடுக்கிறது.

இந்த வகையில் மறு உலக வாழ்வு பற்றிய நம்பிக்கை மனித் இயல்பு. அந்த வாழ்வு அவனது ஆழ்ந்த எதிர்பார்ப்பு.

இப்பிரபஞ்ச இயக்கம் சட்ட விதிகளுக்குட்பட்டது. இங்கு விளையாட்டு, அர்த்தமினமை இருப்பதாக தெரியவில்லை. எங்கும் திட்டமிட்ட இயக்கம். சட்ட ஒழுங்குகளுக்கு ஏற்ப தொழிற்படும் செயற்பாடுகள். சின்னஞ்சிறு அணுவிலிருந்து மாபெரும் நட்சத்திரம் வரையில் இந்த உண்மை அவதானிக்கப்படுகிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தூரம், பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம், புவி ஈர்ப்புச் சக்தி, சூரியனை சுற்றி வலம் வரும் பூமியின் வேகம் இவையெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குகள். இரவு, பகல், பருவ காலங்கள் என்பன இவற்றின் விளைவுகளாகத் தோன்றுகின்றன. இங்கு எவற்றிலாவது ஏற்படும் ஒரு மாற்றம் விளைவுகளைத் தோற்று விக்காது போய்விடாது. அப்போது மனித, தாவர, மிருக வாழ்வு பூமியில் அழிந்து போகும் சூல்நிலை உருவாக முடியும்.

ஒரு விந்தணு, பெண் முட்டையோடு இணைந்து கருக்கட்டி, தொடர்ந்து கருப்பிரிவிலிருந்து மனிதன் உருவாகும் வரையிலான தொழிற்பாடுகள் வியக்கத்தக்க விதிகளினூடே இயங்குகின்றன என்பது மனிதன் நிதர்சனமாகக் கண்டு விட்ட உண்மை.

ஒரு தாவரத்தின் இலை ‘குளோரபோல்’ என்ற தன்னிடமுள்ள பொருளை பயன்படுத்தி சூரிய ஒளியினூடாக உணவு தயாரிக்கிறது. இதனை விஞ்ஞானம் ‘ஒளித்தொகுப்பு’ என அழைக்கிறது. சூரிய ஒளி என்ற சக்தியை பொருளாக மாற்றும் அத்தொழிற்பாடு மனிதனால் இதுவரை பூரணமாக புரிந்து கொள்ள முடியாத வியக்கத்தக்க இராசயனத் தொழிற்பாடாகும். இங்கு பல நுணுக்கமான விதிகள் தொழிற்படுகின்றன.

மனிதன் சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து காபனீரொட்சைட்டை வெளிவிடுகிறான். தாவரங்கள் காபனீரொட்சைட்டை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இப்படியொரு அழகான பரிமாற்றம் வளிமண்டலத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது.

மனிதன் உட்கொள்ளும் உணவு பதார்த்தங்கள் மனிதனின் சமிபாட்டுத் தொகுதியில் சுரக்கும் பல்வேறு (ஆசிட்) அமிலங்களால் கரைக்கப்பட்டு சமிபாடடைந்து குளுக்கோஸ் நிலைக்கு மாற்றப்பட்டு உடம்பில் சேர்கிறது.

இவ்வாறு மனிதன், மிருகம், தாவரம், கோள்கள், நட்சத்திரங்கள் என எவற்றை எடுத்து ஆராய்ந்தாலும் மிக நுணுக்கமாக விதிகளுக்கேற்ப, ஏற்கனவே திட்டமிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஒழுங்குகளுக்கேற்ப அவை இயங்குகின்றன என்பதில் சந்தேகமில்லை. தாவரவியல், இரசாயனவியல், மருத்துவம், வானவியல், புவியியல், புவிச்சரிதவியல் போன்ற விஞ்ஞானக் கலைகள் அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்தை, அதன் நுணுக்கமான தொழிற்பாட்டை, அங்கு காணப்படும் வியக்கத்தக்க விதிகளை, விளக்கும் கலைகளேயன்றி வேறென்ன?

இப்பிரபஞ்சம் அர்த்தமிக்கது. இங்கு வீண் விளையாட்டுக் கிடையாது. இங்கு இயங்கும் சட்டங்களும், விதிகளும் தெளிவானவை. மிகுந்த கடுமையானவை. அவற்றுக்குப் புறம்பாக எதுவும் இயக்க முடியாது. அவ்விதிகளை அறுத்துக் கொண்டு எத்தொழிற்பாடும் நடந்து விட முடியாது என பிரபஞ்சம், அங்கு காணப்படும் பொருட்கள் பற்றிய ஆய்வுகள் சொல்கின்றன.

மனிதனும் இப்பிரபஞ்ச சிருஷ்டிகளில் ஒன்று. அவனும் இந்த பௌதீக விதிகளால் ஆளப்படுகிறான். திட்டமும், ஒழுங்கும், மிக ஒழுங்குப் படுத்தப்பட்ட விகிதாச்சாரம் கொண்ட பிரபஞ்சத்தில் பிறந்தியங்கும் அவனது வாழ்வுக்கும் பொருளும், கருத்தும் இருக்க வேண்டும். அர்த்தமற்ற, கருத்தின்றி, எந்த ஒழுங்குக்கும் உட்படாது அவனது வாழ்வு முடியக்கூடாதென மனித வாழ்வுக்குப் பின்புலமாக அமைந்துள்ள இப்பௌதீக உலகமும், அதனை இயக்கும் விதிகளும் உணர்த்துகின்றன.

மறு உலக வாழ்வு பற்றிய சிந்தனைக்கு அடித்தளமாக அமையும் முதலாவது அம்சம் இதுவாகும்.

மனித வரலாறு ஓட்டம் இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைகிறது. மனித வரலாற்றின் ஓட்டத்திற்கு சில விதிகளையும், சட்டங்களையும் வரலாற்றறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். நாகரிகத்தின் எழுச்சி, வீழ்ச்சிகள் குறிப்பிட்ட ஒழுங்குக்கும், விதிகளுக்கும் ஏற்ப இயங்குகின்றன என அவர்கள் விளக்குகின்றனர். இவை சமூகவியல் விதிகள் அழைக்கப்படுகின்றன.  இதுவும் மனித வாழ்வும், அதன் இயக்கமும் அர்த்தமற்று ஓடவில்லை.  சில ஒழுங்குகளையும், விதிகளையும் அவை பின்பற்றுகின்றன எனச் சொல்கிறது.

இப்பிரபஞ்சத்தோடும், அதன் இயக்கத்தோடும் சம்பந்தப்பட்ட இன்னொரு மிக முக்கிய உண்மை என்னவெனில் இவ்வுலகு பௌதீக விதிகளின் ஆளுகைக்குற்பட்டது. பௌதீக விதிகளே இங்கு மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் ஒழுக்க விதிகள் வரையறுத்த எல்லையையே இங்கு கொண்டிருக்கின்றன.

ஒரு மாங்காய் விதையை இங்கு நட்டினால் அது மாமரத்தை மட்டும் முளைக்கச் செய்யும். ஒரு போதும் அதில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் நன்மையொன்றை இவ்வுலகில் செய்தால் நன்மையின் விளைவு மட்டுமே இங்கு உண்டாகும் எனக் கூற முடியாது. மாறியும் அமையும் சந்தர்ப்பங்கள் பலவும் இங்குண்டு. அவ்வாறே தீமை செய்யும்போது தீய விளைவையே அது கொடுக்கும் என்று வரையறுத்த நிர்ணயம் கிடையாது. நன்மையான விளைவை உண்டாக்கி விடும் சந்தர்ப்பமும் இங்குண்டு.

நன்மையே செய்து வாழ்ந்தவன் அதற்கான எக்கூலியும் பெறாமல் போய்விடுவதும் உண்டு. தீமைகள் பல புரிந்து வாழ்ந்தவன் அதற்கான எத்தண்டனையும் பெறாமல் மரணித்து விடுவதும் உண்டு. பௌதீக விதிகளை அடிப்படையாகக் கொண்டெழுப்பிய உலகின் தவிர்க்கமுடியாத  விளைவு இதுவாகும்.

குற்றம் புரிந்தவனைக் கண்டுபிடிப்பதற்கும் இப்பௌதீக உலகு போதிய உதவி செய்வதில்லை. அவ்வாறே அவனுக்கு ஒளிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் அது அமைத்துக் கொடுக்கிறது. சட்டத்தின் பிடியில் அகப்படாது தப்பிவிட்ட குற்றவாளிகள் தான் எத்தனை பேர்!

குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, பல முயற்சிகளின் பின்னர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட போதும் அவனுக்கு போதிய, உரிய தண்டனை கிடைக்கும் எனவும் கூற முடியாது. வீட்டில் பலர் உறங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவன் வீட்டுக்கு நெருப்பு வைத்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் எரிந்து, இறந்துப் போக காரணமாக இருக்கிறான் என வைத்துக் கொள்வோம். இந்த கொடிய குற்றவாளி பிடிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாலும் அவனுக்கு கிடைக்கும் தண்டனை அவனையும் அவனது குடும்பத்தாரையும் அவனது வீட்டிலேயே போட்டு எரிப்பதாக அமையாது. அவனுக்கு கொலை தண்டனை விதிப்பதாக மட்டுமே அமையும். உண்மையில் இது அவனது குற்றத்துக்கு போதுமான தண்டனையல்ல என்பது தெளிவு!

ஒருவன் பல்லாயிரம் பேரைக் கொன்று விடுகிறான். அவனை என்ன செய்ய முடியும்? அவனை ஒரே ஒரு முறை மட்டுமே கொல்ல முடியும். பல்லாயிரம் முறை கொலை செய்ய முடியாது. ஒரு மனிதனின் நடவடிக்கைகளால் பல சந்ததிகளே தீமைக்கு உட்படுகின்றன என வைத்துக் கொண்டாலும் அந்த மனிதனை தண்டிக்க பல நூறு ஆண்டுகள் வாழ வைக்க வேண்டும். அது சாத்தியமாவதில்லை.

இவ்வாறு இந்தப் பௌதீக உலகில் ஒழுக்க விதிகளின் வியாபிக்க முடிவதில்லை. அதன் வீச்சு பூரணமாக அமைவதில்லை. இந்நிலையில் மனித வாழ்வு இவ்வுலகோடு முடிந்து விடுகிறது. மண்ணோடு மண்ணாய்ப் போய்விடுகிறது, எனின் மனிதனுக்கு இயல்பாக உள்ள ஒழுக்க உணர்வு அதனை ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வாறே மிகுந்த நுணுக்கமான விதிகளும், சட்டங்களும் கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் இயங்கும் இப்பௌதீக உலகில் இப்படியொரு அர்த்தமற்ற, ஒழுங்கற்ற செயல்பாடு காணப்படும் என்பதையும் ஏற்க முடிவதில்லை.

நிச்சயம் இந்த ஒழுக்க விதிகள் வியாபிக்க, தனது முழு விளைவையும் காணத்தக்க வேறொரு உலகம் காணப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இப்பௌதீக உலகம் ஒரு கட்டம் மட்டுமே. இதற்கு இன்னொரு கட்டம் உள்ளது. அப்போதுதான் இந்த மனித வாழ்வுக்கான அர்த்தம் பூரணமாகும்.

இந்த வகையில் இந்தப் பௌதீக உலக ஒழுங்கும், மனித வாழ்வின் அமைப்பும் இன்னொரு வாழ்வை வேண்டி நிற்கின்றன என்பது தெளிவு. அதாவது மறுவாழ்வு பற்றிய நம்பிக்கை மனித இயற்கை என்பதோடு அது பகுத்தறிவு ஏற்கின்ற தர்க்க ரீதியான உண்மையும் கூட என்று இதிலிருந்து தெளிவாகின்றது.

இப்பிரச்சனையை இன்னொரு வகையிலும் நோக்க முடியும். ஒரு குறிப்பிட்ட விடயம் நம்பிக்கையான ஒருவரின் செய்தியாகவும் நம்மிடம் வர முடியும். அப்போது செய்தியை கொண்டு வந்தவர்மிகுந்த நம்பிக்கைக்குரியவராகவும், அவர் சொல்வது பகுத்தறிவுக்குப் புறம்பாக இல்லாமலும், அத்தோடு அவர் நேரடியாகப் பார்த்த ஒரு விடயத்தையே சொல்கிறார் எனவும் உறுதியாகும் போது அச்செய்தியை நாம் நம்புகிறார்.

மறுமை நாள் வாழ்வு பற்றிய இந்தச் செய்தி நபிமார்கள் கொண்டு வந்த செய்தி. அந்த நபிமார்களின் வாழ்வு தூய்மையானது. அவர்கள் சமூகத்தில் மிகுந்த புத்திக்கூர்மையுடன் வாழ்ந்தவர்கள். உலக வாழ்வின் இன்பங்களை அவர்கள் சற்றேனும் பொருட்படுத்தவில்லை. அதிகாரம் கையில் கிடைத்த போதும் அதனை அனுபவிக்காதவர்கள் அவர்கள். இத்தகையவர்கள் கொண்டுவரும் செய்தி பொய்யாயிருப்பது எந்த வகையிலும் சாத்தியமில்லை.

அவர்களில் குறிப்பாக முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறிப்பிடலாம். ஏனெனில் ஏனைய நபிமார்களின் வரலாறு பூரணமாகப் பெறப்படவில்லை. அவர்களது செய்திகளில் இடைச்செருகல்கள் நடந்திருக்கின்றன.

முஹம்மத் (ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் அவரது வரலாறு மிகப் பூரணமாக மிகுந்த ஆதாரபூர்வமாக தொகுக்கப்பட்டுள்ளது. அவர் கொண்டு வந்த அல்குர்ஆன் எந்த இடைச்செருகல்களும் ஏற்படாதவாறு, எத்தகைய சந்தேகமுமன்றி தொகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தூய்மையான, என்றுமே பொய் பேசாத, எந்த உலக இலாபங்களையும் பொருட்படுத்தாத, அந்த நபர் மறு உலக வாழ்வு பற்றிய செய்தியைக் கொண்டு வருகிறார் எனில் அது மிகவும் நம்பத்தகுந்த செய்தி என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்த செய்தியைக் கீழ்வருமாறு அழகாக முன்வைத்தார்.

ஸபா மலை மீது ஏறி நின்ற அவர் தனக்கு முன்னால் நிற்கும் மக்களைப் பார்த்துக் கேட்கிறார்: இந்த மலையின் பின்னால் உங்களைத் தாக்க ஒரு படை நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

மக்கள்: ‘ஆம், நம்புவோம்’
முஹம்மத் (ஸல்): ‘ஏன் நம்புவீர்கள்’
மக்கள்: ‘ஏனெனில் நீர் பொய் சொன்னதில்லை’
முஹம்மத் (ஸல்): ‘அவ்வாறாயின் இவ்வுலகுக்குப் பின்னால் வரும் இன்னொரு வாழ்வு பற்றியும் அங்கு காத்திருக்கும் தண்டனைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.’

(ஆதாரநூல்: ரஹீகுல் மக்தூம்)

மலைக்கு முன்னால் நிற்கும் உங்களால் மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது. மலையின் மீது நிற்கும் என்னால் பார்க்க முடியும். எனவே மலையின் பின்னால் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள என்னை நம்புவதே வழி. மறைவான உலகுக்கும் உங்களுக்கும் இடையே நான் நிற்கிறேன். அவ்வுலகை நீங்கள் பார்க்க முடியாது. நான் பார்க்கிறேன். அவ்வுலகோடு நான் நேரடித் தொடர்பு வைத்திருக்கிரேன். இப்போது நீங்கள் என்னை நம்புவீர்களாயின் நான் சொல்லும் அவ்வுலகையும் நம்புங்கள். என்றுதான் இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்கள் விளக்க முனைந்தார்கள்.

இதனை முஹம்மத் (ஸல்) அவர்கள் வேறொரு வகையில் கீழ்வருமாறு சொன்னார்கள். ‘மக்களே! பாலைவன வழிகாட்டி தன்னோடு வருபவர்களிடம் பொய் பேசுவதில்லை. நீங்கள் தூங்குவது போன்றே மரணிப்பீர்கள். விழித்தெழுவது போன்றே நிச்சயமாக மரணத்தின் பின்னர் எழுப்பப்படுவீர்கள். ஒன்று, அது நிரந்தரமான நரகமாக அமைந்து விடும். அல்லது நிரந்தரமான சொர்க்கமாக அமைந்து விடும்.’

இங்கு முஹம்மத் (ஸல்) தம்மை பாலைவன வழிகாட்டிக்கு ஒப்பிடுகிறார்கள். அரபிகள் பாலைவனத்தில் பிரயாணம் செய்யும்போது மிகுந்த நம்பிக்கைக்குரிய வழிகாட்டியொருவரைத் தேடிக்கொள்வர். ஏனெனில் பாலைவனத்தில் வழி தவறினால் அழிவு நிச்சயம். பாலைவனத்தைப் போன்றே இந்த உலக வாழ்வும். எங்கு போக வேண்டுமெனத் தீர்மானிப்பது கஷ்டமானது. அதற்கென ஒரு நம்பத்தகுந்த வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டி நானே என முஹம்மத் (ஸல்) அவர்கள் இங்கு சொல்லி, இந்த வாழ்வு எங்கே போய் முடிகிறது என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறார்.

இக்கருத்தை அல்குர்ஆன் பல இடங்களில் விளக்கியுள்ளது. அதில் ஸூரா நஜ்மின் இக்கருத்தை விளக்கியுள்ள பாணி மிக அழகானது.

முஹம்மத் (ஸல்) அவர்கள் அரபு மக்களோடு கூட இருந்த அவர்களது தோழர். அவர் மனோஇச்சையின் காரணமாகவோ, அல்லது வேறு வகையிலோ, வழி தவறி விட்டார் எனக் கொள்ள முடியாது. அவர் பேசுவது இறைவனால் அறிவிக்கப்படும் செய்தி. அவரிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் வருகிறார். அத்தூதரை முஹம்மத் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகக் காண்கிறார். அவர் சொல்வதைக் கேட்கிறார்.

இவ்வாறு ஸூரா நஜ்மின் 10 வசனங்களிலும் சொல்லிவிட்டு அல்குர்ஆன் மேலும் சொல்கிறது:

“கண் பார்த்ததனை உள்ளம் பொய் என்று சொல்லவில்லை. அப்படியிருக்க அவர் கண்ணால் பார்க்கும் விஷயத்திலா அவரோடு நீங்கள் வாதாடுகிறீர்கள்?!” (ஸூரா நஜ்ம்: 11, 12)

என, இது கண்ணால் அவர் பார்க்கும், அறிவால் தெளிவாக விளங்கும் உண்மை. பகுத்தறிவு ரீதியான ஆய்வோ, சில எடுகோள்களின் முடிவோ அல்ல. அவர் தெளிவான கண்ணால் பார்த்துச் சொல்வதை நீங்கள் இல்லை என்று எப்படி மறுத்துப் பேச முடியும்? என ஸூரா வினவுகிறது.

எனவே இங்கே இருப்பது இரண்டே இரண்டு நிலைப்பாடுகள் தான். ஒன்று முஹம்மதை உண்மையாளர் என்று ஏற்க வேண்டும். அதுவே உண்மை. இறைவனிடமிருந்து தனக்குச் செய்தி வருவதாக ஒரு பொய்யைச் சொல்லி ஒருபோதும் உலகமே ஏற்கும் மிகப்பெரும் வெற்றியாளராக அவர் மாறியிருக்க முடியாது. ஏன் அவர் பொய் சொல்ல வேண்டும்? அதிகாரத்தையும், செல்வத்தையும் அனுபவித்து வாழவா? செல்வமும், அதிகாரமும் அவர் முன்னால் குவிந்தபோது அவற்றை ஏறெடுத்தும் அவர் பார்க்கவில்லை. அனுபவிக்கவே இல்லை. இந்த வகையில் மறு உலக வாழ்வு என்ற இம்மாபெரும் செய்தியை ஏற்க, நம்பிக்கைக் கொள்ள இப்படியொரு இலகுவான வழியும் காணப்படுகிறது.

மறு உலக வாழ்வு பற்றிய நம்பிக்கை பகுத்தறிவு ரீதியானது. இப்பிரபஞ்ச ஒழுங்கும், அதன் கீழ் வாழும் உயர்ந்த சிருஷ்டியான மனிதனும் எப்பொருளுமற்றுப் போக முடியாது. இப்பிரபஞ்சத்தின் ஒழுங்கு, சீரிய இயக்கம், நுண்ணிய சட்டங்கள் இங்கு நிகழும் எதுவும் பொருளின்றிப் போக முடியாது என்று சொல்கின்றன. இந்தப் பின்னணியில் மறு உலக வாழ்வென்பது தவிர்க்க முடியாதது. இவ்வுலக ஒழுங்கில் தர்க்கரீதியான விளைவே அதுவாகும் என ஏற்கன்வே பார்த்தோம். இதே கருத்துப் பின்னணியில் தான் அல்குர்ஆனும் மறுமை நாள் பற்றிய சிந்தனையை முன்வைக்கிறது:

அல்குர்ஆன் பேசுகிறது:

“வானங்கள், பூமியையும், அவற்றிடையே இருப்பவற்றையும் நாம் விளையாட்டாக படைக்கவில்லை. அவற்றை சத்தியத்தின் அடிப்படையிலேயே நாம் படைத்தோம்.” (ஸூரா துகான்: 38,39)

ஸூரா ரஹ்தின் 2ம் வசனத்திலிருந்து10ம் வசனம் வரை இந்த உண்மையை அல்குர்ஆன் விளக்குகிறது. கீழ்வருமாறு அது ஆரம்பிக்கிறது:

“அல்லாஹ் தான் வானங்களை நீங்கள் பார்க்கக் கூடிய தூண்கள் இன்றி அமைத்தான்……..”

பின்னர் பூமியின் தரைத்தோற்ற அமைப்பு, தாவரங்கள், இரவு பகல் மாறிமாறி வரல் போன்ற பல்வேறு பௌதீக இயக்கங்களைச் சொல்லி விட்டு:

” நீர் ஆச்சரியப்படுவதாயின் நாம் மண்ணாகிப் போனால் புதிதாக நாம் படைக்கப்படுவோமா? என அவர்கள் கேட்பது கண்டு தான் ஆச்சரியப்பட வேண்டும்” என முடிகிறது.

அதாவது இவ்வளவு அழகான, நுணுக்கமான பௌதீக ஒழுங்குகள் அவற்றிடையே தோன்றியுள்ள மனித வாழ்வு எல்லாம் அர்த்தமற்று மண்ணோடு மண்ணாய்ப் போகும் என நினைக்கிறார்களே! நாம் இறந்ததன் பின்னர் திரும்பப் புதிதாக படைக்கப்படுவோமா என கேள்வி கேட்கிறார்களே! அதுதான் ஆச்சரியத்திற்குரியது. ஏனெனில் இவ்வழகிய ஒழுங்கு, நுணுக்கமான இயக்கங்கள் அர்த்தத்தோடு முடிவது தான் பகுத்தறிவு ரீதியானது, இயல்பானது. அந்த வகையில் மறு உலக வாழ்வு பற்றி அதனை மறுப்பது போல் கேள்வி எழுப்புவது தான் ஆச்சரியத்திற்குரியது என இங்கே அல்குர்ஆன் விளக்குகிறது.

இக்கருத்தை மனிதனோடு சம்பந்தபடுத்தி ஸூரா கியாமாவின் கடைசிப்பகுதியில் அல்குர்ஆன் விளக்குகிறது:

“மனிதன் எப்பொருளுமற்று வீணாக விடப்பட்டு விடுவான் என நினைக்கிறானா? அவன் செலுத்தப்பட்ட இந்திரியத் துளியாக இருக்கவில்லையா? பின்னர் அவனைப் படைத்து அவன் சீராக்கினான். அதிலிருந்து ஆண், பெண் என்ற ஜோடியையும் ஆக்கினான்.”

மனித வாழ்வு எப்படி அர்த்தமற்று முடிய முடியும்? அவன் உருவாக்கிய ஒழுங்கு எவ்வளவு நுணுக்கமானது? இந்திரியத்திலிருந்து சீரான மனிதனாக ஆகும் வரை எத்தனை நுண்ணிய கட்டங்களை அவன் தாண்டி வந்தான். இவ்வாறு திட்டமிட்ட மிக ஆழ்ந்த விதிகளுக்கேற்ப உருவான அவன் வாழ்வு எப்படி பொருளற்றுப் போக முடியும்? எனக் கேட்கிறது அந்த இறைவசனம்!

மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *