Featured Posts

அழகிகளின் பேஜார் ஷோ

சமீப காலமாக, சென்னை நகரில் “ஃபேஷன் ஷோ” என்ற பெயரில் அழகிகளின் ஆபாச நடனம் அரங்கேறி வருகிறது. புத்தம்புதிய நகைகளை டிசைன் செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் ஜுவல்லரி முதல், உள்ளாடைத் தயாரிப்பாளர்கள் வரை இத்தகைய ஃபேஷன் ஷோக்களை நடத்துவது வாடிக்கையாகி விட்டது.

சென்ற வாரம் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாட்களாக நடந்த ஃபேஷன் ஷோவை நேரிலும், மீடியாக்கள் மூலமும் பார்த்தவர்கள், அதிர்ச்சியில் வாயடைத்துப் போனதென்னவோ நிஜம்.

“நிக்சான் இன்ஃபோ மீடியா” என்ற அமைப்பு நடத்திய, அந்த ஃபேஷன் ஷோவில் ரஷ்ய, இத்தாலி மற்றும் வட இந்திய அழகிகள் பலர் ஜட்டி, பிரா மட்டுமே அணிந்து வந்து ஆபாச நடனத்தை ஆடியிருக்கின்றனர்.

வெளிநாட்டு மோகம் கொண்ட இளம் பெண்கள் பயன்படுத்தும் லேட்டஸ்ட் ஜட்டி, பிராக்கள் போன்றவற்றை இந்த மாடல் அழகிகள் அணிந்து வந்ததுடன் நீச்சல் உடையுடனும் உள் அவயவங்கள் தெரியும் விதத்திலான மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தும் பார்வையாளர்களைத் திகைக்க வைத்தனர்.

கலாசார அத்துமீறலாகத் தோன்றிய இத்தகைய நிகழ்ச்சிகள், மேலைநாடுகளில்தான் பரவலாக நடந்துவந்தன. இப்போது மும்பை, டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் வியாபித்திருக்கும் இந்தச் சீரழிவான போக்கு, இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வக்கிர உணர்வைத் தூண்டிவிடுவதாக, ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இதுபற்றி பல்வேறு அழகிப் போட்டிகள் மற்றும் ஃபேஷன் ஷோக்களை நடத்திவரும் “விபா” என்ற அமைப்பின் நிறுவனர் ஷோபா நம்மிடம் பேசும்போது,

“பெண்களுக்கான உள்ளாடைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் வேறு எப்படித் தோன்ற முடியும் என்று எனக்குப் புரியவில்லை. முழுக்கமுழுக்க வணிக ரீதியான பிராண்டை, அதுவும் வெளிநாட்டுப் பொருள்களை அறிமுகப்படுத்தும்போது, குறிப்பாக உள்ளாடைகளான ஜட்டி, பிராக்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் சார்பில் தோன்றும் பெண்கள், இப்படித்தானே வரமுடியும்?

இந்த மாதிரி நடப்பது தவறு என்று குரல் கொடுப்பவர்கள், இந்தியப் பொருள்களை மட்டும் உபயோகிப்பவர்களா என்று பார்த்தால், அதுவும் கிடையாது. வெளிநாட்டுப் பொருள்களின் மீது மோகம் கொண்டவர்கள், வெளிநாட்டில் சென்று கல்வியைத் தொடர்பவர்கள், வெளிநாட்டுக்குச் சென்று வருவதையே பெருமையாகப் பேசுபவர்களெல்லாம் கூட்டாகச் சேர்ந்து, வெளிநாட்டு கலாசாரத்தைக் குறைசொல்வது வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

நான் நடத்தும் அழகிப் போட்டியில் ஜெயித்து, உலக நாடுகளிலுள்ள பல்வேறு அழகிகளுடன் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டுமானால் உடலின் வலிமையை, அழகை, வாளிப்பை நாசூக்காக வெளிப்படுத்தத்தான் வேண்டும். அது விதி. இதற்காகவே நீச்சல் உடையில் அதுவும் டூ பீஸில் சில சமயம் தோற்றமளிக்க வேண்டும். அதை ஆபாசமென்று கொச்சைப்படுத்துபவர்கள், பிற்போக்குவாதிகளாகவும் சுயநலம் படைத்தவர்களாகவும்தான் இருப்பார்கள்.

உலகம் முழுக்க நமது வலிமையும் பெருமையும் தெரிய வேண்டுமானால், இம்மாதிரியான உடைகளையும் அணிந்து காட்சியளித்துத்தான் ஆக வேண்டும். இதில் தவறே கிடையாது.

அந்த வகையில், நந்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் இருந்த விஷயத்தில் ஆச்சரியப்பட எதுவுமேயில்லை. எப்போதாவது நடக்கும் இம்மாதிரியான ஷோக்களைப் பார்த்துத்தான் இளைஞர், இளைஞிகள் கெட்டுப் போவார்கள் என்பதும் விதண்டாவாதம்.

இந்த விஷயத்தில் போலீஸ் கமிஷனர் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், “நடவடிக்கை எடுப்போம்” என்றெல்லாம் சொல்வது வியப்பாக இருக்கிறது. இதுபற்றி எங்களைப் போன்ற அமைப்பாளர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, நடவடிக்கை பற்றி முடிவெடுப்பதுதான் ஆரோக்கியமான காரியமாக இருக்கும்”

என்று கூறினார்.

இந்தக் கருத்தை மறுத்து நம்மிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வாசுகி

“உள்ளாடை என்பது உள்ளே அணியும் ஆடையைக் குறிக்கும். அது அந்தரங்கமானதும் கூட. அதனை அவையில் வெளிப்படுத்திக் காட்ட வேண்டியது அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஃபேஷன் ஷோக்களில் ஆபாசத்தின் எல்லைகள் தாண்டுவதும் நடக்கக் கூடியதுதான்.

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இன்றைய உலகமய ஸ்டைல் மார்க்கெட்டில், மக்களின் ரசனை உயர வேண்டுமென்பதோ, பக்குவப்பட வேண்டும் என்பதோ நோக்கமல்ல.

ரசனையை எவ்வளவு வக்கிரமாக்கினால் வியாபாரம் உயரும் என்பதே, இதன் நோக்கம். எத்தனை ஆபாசத்தையும் சமூகச் சீரழிவையும் அது நியாயப்படுத்தும்!

எனவே, இந்த மாதிரியான நிகழ்வுகளை முறைப்படுத்துவது தவறல்ல. ஆனால் இதற்கான விதிமுறைகளைப் பெண்கள் அமைப்புகள் மற்றும் இதர ஜனநாயக சமூக அமைப்புகளைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுதான் சரியாக இருக்கும். காவல் துறையின் கையில் இது ஒரு ஒடுக்குமுறைக் கருவியாக ஆகிவிடக்கூடாது.

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குப் போகிறவர்களும் வெளிநாட்டுப் பொருள்களை உபயோகிப்பவர்களும், இந்தமாதிரியான ஃபேஷன் ஷோக்களை எதிர்க்கக்கூடாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை.

தவிர, நம் பெருமையும் வலிமையும் இதுபோன்ற டூபீஸில் தான் இருப்பதாக நினைப்பது, நமது தேசத்தையே அவமானப்படுத்துவதாக இருக்கிறது”

என்று தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில் இம்மாதிரியான ஆபாச ஃபேஷன் ஷோக்களைத் தடை செய்யவோ, முறைப்படுத்தி கட்டுப்படுத்தவோ வழியிருக்கிறதா என்பதை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நட்ராஜிடம் கேட்டோம்.

“பொதுவாகவே இம்மாதிரியான ஃபேஷன் ஷோக்கள் என்கிற பெயரில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் முயற்சியில்தான் இருக்கிறோம்.

உள் அரங்கோ, வெளி அரங்கோ எந்த இடத்தில் கேளிக்கை விழா நடத்தினாலும், காவல்துறையினரிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும் என்பது சட்டவிதி. ஐம்பது பேருக்கு மேல் கூடி ஒரு நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கக் கூடிய எல்லா நிகழ்வுகளுக்கும் இது போன்ற காவல்துறை அனுமதியைப் பெற வேண்டும்.

நந்தம்பாக்கம் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, பொதுவான கேளிக்கை விழா என்று கூறி அனுமதி வாங்கியிருக்கிறார்கள். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்ச ஆபாசங்கள் அரங்கேறியிருப்பதாகப் பத்திரிகைகள் மூலம்தான் நானும் தெரிந்து கொண்டேன்.. இப்போது அதுபற்றி உடனடியாக விசாரித்து அறிக்கை தரச் சொல்லியிருக்கிறேன்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், “ஆபாசத்தின் எல்லை எது?” என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதற்குச் சட்டத்தில் தெளிவான விளக்கமிருக்கிறது. “காண்போரின் மனதைச் சலனப்படுத்துவதும் கிளர்ச்சியூட்டுவதும் மட்டுமின்றி அருவருப்புடன் முகத்தைச் சுளிக்க வைப்பதும்தான் ஆபாசம்”, என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், பலரின் முகத்தைச் சுளிக்க வைக்கக் கூடிய வகையில், சில ஃபேஷன் ஷோக்கள் நடப்பதாகத் தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஒழுங்கு படுத்தும் நோக்கில், நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரும்போது, முழுமையான நிகழ்வுகளை எழுதி வாங்கிக் கொள்ளவும் திட்டமிருக்கிறது.

தொடர்ந்து ஆபாசத்தை அரங்கேற்றுபவர்களை விரைவில் சட்டத்தின் பிடியில் மாட்டத் தயாராகி விட்டோம்!”

என்று கூறினார் போலீஸ் கமிஷனர் நட்ராஜ்.

-M. குமார்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 31 ஜுலை, 2005

7 comments

  1. அதிரைக்காரன்

    //பெண்களுக்கான உள்ளாடைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் வேறு எப்படித் தோன்ற முடியும் என்று எனக்குப் புரியவில்லை//

    கலாச்சார சீரழிவுக்கு இவர்களே போதும் என நினைக்கிறேன். இதுவரை உபயோகிக்கப்பட்டு வந்த உள்நாட்டு உள்ளாடைகளை விட என்ன புது தொழில் நுட்பத்தை வெளிநாட்டு ஜட்டியில் அறிமுகப்படுத்தி விட்டார்கள் என்று தெரியவில்லை.

    உள்ளாடைகளை பப்ளிக்கில் அணிந்து காட்டித்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது சுத்த பேத்தல். இனி வருங்காலங்களில் “சானிடரி நாப்கின்” எப்படி அணிவது என்று திறந்த வெளி அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எல்லாம் பெண்ணுரிமை படுத்தும் பாடு சாமி.

    முடிஞ்சா இந்த ஜட்டி மேட்டரையும் பாருங்க. :-)

  2. அதிரைக்காரன்

    மேற்கண்ட எனது கமெண்ட்டை அழித்து விடலாம் என நினைத்தேன். விசயம் எனது கமெண்டை விட பச்சையாக இருப்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

    வாழ்க பெண்ணுரிமை! வாழ்க ஜட்டி (ஜிப்) பார்க்கும் கலாச்சாரம்!!

  3. முகமூடி

    தேசத்துக்கு அவமானம், பெண்களுக்கு அவமானம், கலாசார சீரழிவு… அடா அடா…

    வீட்டுக்கும் வரும் F TVஐ கட்டுப்படுத்தி கிழித்துவிட்டு இதற்கு வரட்டும் கலாசார பாதுகாவலர்கள்… தமிழ் சினிமாவில் பாடல்களில் பாதிக்கு மேல் காபரே நடனம்தான்… கொஞ்சம் உடை அணிந்திருக்கிறார்கள் அவ்வளவுதான்… வீட்டின் வரவேற்பறையில் 10 வயது சிறுவர்/சிறுமியரிடம் அந்த பாடல்களை வெக்கம் இல்லாமல் நாமே பாட சொல்லுவோம்… இதெல்லாம் விட்டுவிட்டு உள்ளரங்கில் நடக்கும் ஒரு விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்.. ஒருவேளை நிருபருக்கு அனுமதியோ கவரோ தரவில்லையோ என்னவோ…

  4. சர்தார்

    அண்ணாச்சி முகமூடி…

    //”வீட்டுக்கும் வரும் F TVஐ கட்டுப்படுத்தி கிழித்துவிட்டு இதற்கு வரட்டும்”//

    FTV பத்தி கட்டுரை ஒண்ண எளுதி கிழிக்கலாம்-னு ஒரு ஐடியா வெச்சிருந்தேனுங்க. இப்ப நீங்க எழுதி இருக்கறத பாத்தா எங்க “மொதல்ல அழகிப்போட்டி நிறுத்தி கிழிச்சிட்டு அப்புறம் FTV பத்தி எழுதிக்கிழிங்கன்னு” சொல்வீங்களோன்ற பயத்தில அப்படியே உட்டுட்டேனுங்க!

    //”இதெல்லாம் விட்டுவிட்டு உள்ளரங்கில் நடக்கும் ஒரு விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்..”//

    ஒங்க வீட்டு FTV ய நீங்க தெருவில வச்சித்தாம் பாப்பீங்க போல…படா சோக்கா இருந்திச்சி ஒங்க பின்னூட்டம்!

  5. சுட்டுவிரல்

    , சர்தார்,
    நீங்க ரெண்டு பேரும் வாதிக்குறதுல ‘நியாயம்’காணாம போயிடப் போவுது.

    நியாயம் என்னன்னா: FTVயையும் போர்த்தி வைக்கோணும்.
    ஃபேஷன் ஷோன்னு படம் காட்டுறதயும் தடுக்கோணும்.

  6. சர்தார்

    சுட்டுவிரல் அண்ணே!

    இதப்பத்தி எழுதினா முதல்ல அதை சரிபண்ணிட்டு வாங்கன்னு குத்தம் சொல்றதும், அதப்பத்தி எழுதினா முதல்ல இதை சரிபண்ணுங்கன்னு வெட்டிப்பேச்சு பேசுறதும் சிலரின் வாடிக்கை. அதத்தேன் மேல எழுதியிருக்கேன்.

    முகமூடிகிட்டே தெரியாமத்தான் கேக்குறன்: ஆமா FTV யும் Fashion Show வும், ஒங்க பார்வையில வேற வேறயா? எதுக்கும் ஒருக்கா முகமூடிய கழட்டி, கண்ணைக்கழுவி சுத்தம் பண்ணிட்டு (முடிஞ்சா மனசையும்)திருப்பி மாட்டிக்குங்க.

  7. தஞ்சாவூரான்

    fashion show, valentines day, mothers day எல்லாம் அமெரிக்காகாரன் கண்டுபிடித்த பணம் பன்னும் வித்தை. கண்ணை மூடிக்கிட்டு வெளினாட்டு மோகத்துல ஆழ்ந்தா இது மட்டும் இல்ல, இன்னும் நிறைய கலாசார சீரழிவுகளும் நம்ம நாட்டுக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *