Featured Posts

ஜூம்ஆ நாளின் சிறப்புகள், பேண வேண்டியவைகள், தொழுகைக்கு தயாராகுதல் | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-039]

ஜூம்ஆத் தொழுகை

வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜும்ஆ தொழுகை என்று கூறப்படும்.

அரபியில் ‘யவ்முல் ஜும்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜும்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா இணைந்தார்கள். உலகம் அழிக்கப்பட்டு தீர்ப்பு நாளுக்காக மக்கள் ஒன்று கூட்டப்படும் நாள். முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து தொழுதல் போன்ற பல காரணங்களால் இந்நாள் வெள்ளி- ஜும்ஆ நாள் என்று கூறப்படுகின்றது. ஆங்கிலத்தில் இத்தினத்தைக் குறிக்க குசனையல என்றுகூறப்படுகின்றது. ஆரம்பத்தில் னுயல ழக குசபபய என்று கூறப்பட்டு வந்தது. இது அன்புக்குப் பொறுப்பான கடவுளின் மனைவி ‘பரீகா’ என்ற அர்த்தத்தில் கூறப்பட்டு வந்ததாகக் கொள்வர்.

ஜூம்ஆ நாளின் சிறப்பு

01.
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.’
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
நூல்: புகாரி: 876, முஸ்லிம்: 856-22

நாம் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பிந்தியவர்கள். ஆனால், நமக்கு வெள்ளி, யூதர்களுக்கு சனி, கிறிஸ்தவர்களுக்கு ஞாயிறு என்று அமைந்துள்ளது. அவர்கள் எமக்குப் பின்னால்தான் வருகின்றனர். மறுமையிலும் இதே நிலைதான். இந்த அடிப்படையில் முஸ்லிம் உம்மத்திற்கு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆ தினமும் சிறப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது. 02. நாட்களில் சிறந்தது:

‘சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமை சிறந்த தினமாகும். அதில்தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதில்தான் சுவனத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அதில்தான் சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
நூல்: முஸ்லிம்- 854-17

‘அதில்தான் மறுமை நாள் ஏற்படும்.’
(அஹ்மத்: 10970)

03. துஆ அங்கீகரிக்கப்படும் நேரம்:
‘அதில் ஒரு நேரம் இருக்கின்றது. அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுது அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் கொடுக்காமல் விடுவதில்லை.’
(நூல்: அஹ்மத்- 10545)

04. ஆரம்(ர) மன்னிக்கப்பட்ட நாள்:
‘அந்த தினத்தில்தான் ஆதம்(ர) அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள். அதில்தான் அவர்கள் மரணித்தார்கள்.’
(நூல்: முஅத்தா- 106{364, அஹ்மத்- 10303)

‘உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். அதில்தான் ஆதம்(ர) படைக்கப் பட்டார்கள். அதில்தான் சூர் ஊதப்படும். அதில்தான் மயங்குவார்கள். அன்றைய தினம் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள். உங்கள் ஸலவாத்து எனக்கு எடுத்துக் காட்டப்படும்’ என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உக்கி மண்ணோடு மண்ணாக மாறிய பின்னர் எமது ஸலவாத்து எப்படி உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டார். அதற்கு நபி(ச) அல்லாஹுதஆலா நபிமார்களின் உடலை உண்பதை பூமி (மண்ணு)க்கு தடை விதித்துவிட்டான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ்(வ)
நூல்: இப்னுமாஜா- 1085, அஹ்மத்- 16162, அபூதாவூத்- 1047, 1531, நஸாஈ- 1374

(இமாம் அல்பானி அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்றும் இமாம் சுஅய்ப் அல் அர்னாஊத் (ரஹ்) அவர்கள் இதை ஸஹீஹ் லிகைரிஹி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.) குறிப்பிட்ட இந்த அனைத்து ஹதீஸ்களும் வெள்ளிக்கிழமையின் சிறப்பை உறுதி செய்கின்றன.

05. மார்க்கம் பூரணப்படுத்தப்பட்ட நாள்:

ஆதம் நபி முதல் முஹம்மது நபி வரை வஹி வந்து கொண்டே இருந்தது. இந்த மார்க்கம் வெள்ளிக்கிழமை அரபா தினத்தில் பூரணப்படுத்தப் பட்டது.

‘யூதர்களில் ஒருவர் உமர்(வ) அவர்களிடம் ‘அமீருல் முஃமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அதற்கு உமர்(வ) ‘அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.

‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்.’ (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(வ) ‘அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ச) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ச) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்’ என தாரிக் இப்னு ஷிஹாப்(வ) அறிவித்தார்.’ (புகாரி: 45)

வெள்ளிக்கிழமையில் தவிர்க்க வேண்டியவை.
வெள்ளிக்கிழமை சிறந்த நாள்தான். இருப்பினும் அதன் இரவை விஷேடமான தொழுகை மூலமோ வெள்ளிக்கிழமை பகலை நோன்பு நோற்பதன் மூலமோ சிறப்பிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது.

‘வெள்ளிக்கிழமை இரவை விஷேடமாகத் தொழுவதன் மூலம் ஏனைய இரவுகளில் இருந்து வேறுபடுத்தாதீர்கள். வெள்ளிக்கிழமை பகலை நோன்பின் மூலம் ஏனைய பகல்களில் இருந்து வேறுபடுத்தாதீர்கள்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
நூல்: அஹ்மத்- 24507, முஸ்லிம்- 1144-148 (அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்கின்றார்.)

வெள்ளிக்கிழமை தனியாக நோன்பு பிடிக்காமல் வியாழன், வெள்ளி அல்லது வெள்ளி, சனி என அத்துடன் மற்றுமொரு நாளையும் இணைத்துப் பிடிக்கலாம்.

வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியவைகள்:

1. ஜும்ஆத் தொழுகை:
வெள்ளிக்கிழமையின் அடிப்படையான கடமை ஸலாதுல் ஜும்ஆவாகும். இது குறித்து விரிவாக பின்னர் பார்க்கப்படும்.

2. சுப்ஹில் ஓத வேண்டிய சூறாக்கள்:
‘நபி(ச) அவர்கள் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகையின் முதல் ரக்அத்தில் அலிப் லாம் மீம் ஸஜ்தா (32) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் ‘ஹல் அதா அலல் இன்ஸான் (76) அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.’
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
நூல்: புகாரி 891, முஸ்லிம்- 880-66, நஸாஈ- 955

3. நபி(ச) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்வது:
‘அன்றைய தினம் என்மீது ஸலவாத்துச் சொல்வதை அதிகப்படுத்துங்கள். உங்கள் ஸலவாத்து எனக்கு எடுத்துக் காட்டப்படும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத், திர்மிதி, நஸாஈ)

மதீனா செல்லும் மக்களிடம் நபி(ச) அவர்களுக்கு ஸலாம் சொல்லி அனுப்பும் பழக்கம் மக்களிடம் உள்ளது. நீங்கள் வெள்ளிக்கிழமை அல்லாஹ்வின் தூதர் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள். உங்கள் ஸலவாத்து அவருக்கு எடுத்துக்காட்டப்படும். நீங்கள் யாரிடமும் சொல்லி அனுப்பவேண்டியதில்லை.

04. அதிகம் துஆச் செய்தல்:
அன்றைய தினம் துஆ அங்கீகரிக்கப்படத்தக்க ஒரு நேரம் இருப்பதாக நபி(ச) அவர்கள் கூறுவதால் அதிகமதிகம் துஆ செய்து அந்தப் பாக்கியத்தை அமைத்துக் கொள்ள முயல வேண்டும்.

ஜும்ஆத் தொழுகை

வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியஅடிப்படைக் கடமை ஜும்ஆ தொழுகையாகும். இது குறித்து குர்ஆனும் ஹதீஸ§ம் வலியுறுத்திப் பேசியுள்ளன.

‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.’

‘தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் நீங்கள் பரந்து சென்று, அல்லாஹ்வின் அருளிலிருந்து தேடிக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்.’

‘வியாபாரத்தையோ அல்லது வீணான தையோ கண்டால், உம்மை நின்றவராக விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடத்தில் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும்விட சிறந்ததாகும். உணவளிப் போரில் அல்லாஹ் மிகச்சிறந்தவன் என (நபியே!) நீர் கூறுவீராக!’
(62:9-11)

அதான் கூறப்பட்டால் அல்லாஹ்வின் திக்ரின் பால் விரையுங்கள் என்று கட்டளையிடப்படுகின்றது. இங்கே திக்ர் என குத்பா உரை கூறப்படுகின்றது. வியாபாரத்தை விட்டு விடுமாறும் ஏவப்படுகின்றது. அத்துடன் தொழுகை முடிந்து விட்டால் உலகில் பரந்து திரிந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுமாறும் கூறப்படுகின்றது. இதிலிருந்து வெள்ளிக்கிழமை திக்ர் எனும் குத்பாவும் தொழுகையும் இடம் பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. அதுவரை பொருளாதாரத்தைத் தேடுவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. இறுதி வசனத்தில் பொருளாதாரத்தை விட அல்லாஹ்விடம் இருப்பது சிறந்தது என்று கூறப்படுகின்றது.

எனவே, வெள்ளிக்கிழமை தினத்தில் குத்பா மற்றும் தொழுகை ஆகிய இரண்டும் இடம்பெற வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் பொருளா தாரத்தைத் தேடுவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பதும் கூறப்படுகின்றது.

பெண்கள், பருவ வயதை அடையாத சிறுவர்கள், பயணிகள், பள்ளிக்குச் சமுகமளிக்க முடியாத நோயாளிகள் போன்றோர் அல்லாத பருவ வயதை அடைந்த அனைத்து ஆண்கள் மீதும் ஜும்ஆவில் பங்கு கொள்வது கட்டாயக் கடமையாகும். பெண்கள் கலந்து கொள்ள உரிய எற்பாடுகள் இருந்தால் கலந்து கொள்ளலாம். ஆனால், அது அவர்கள் மீது கட்டாயம் இல்லை.

ஜும்ஆத் தொழுகைக்குத் தயாராகுதல்:

1. குளித்தல்:
ஜும்ஆவுக்கு சமுகம் தருவோர் குளிப்பது கட்டாயமாகும்.
‘இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்.’
அறிவிப்பவர்: இப்னு உமர்(வ)
நூல்: புகாரி: 877

‘இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’
அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி(வ)
நூல்: புகாரி: 879

குளிப்பது பற்றி அலட்டிக் கொள்ளாத கால கட்டத்தில் அதுவும் பாலைவனப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களுக்கு குறைந்தது வாரம் ஒரு முறையாவது குளிப்பது கட்டாயமானது என்று இஸ்லாம் போதிக்கின்றது.

2 வாசனை பூசுவது:
பெண்கள் அல்லது இஹ்ராமுடைய நிலையில் உள்ள ஆண்கள் தவிர்ந்த ஏனைய முஸ்லிம்கள் ஜும்ஆத் தொழுகைக்கு வரும் போது வாய்ப்பிருந்தால் நறுமணங்களைப் பூசிக் கொள்வது சுன்னத்தாகும்.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக் கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸி(வ)
நூல்: புகாரி: 883

3. நல்ல ஆடைகளை அணிதல்:
ஆலயங்களுக்குச் செல்லும் போது ஆடைஅணியாமல் செல்வதை சிலர் சிறப்பாகக் கொள்வர். இஸ்லாம் பள்ளிகளுக்குச் செல்லும் போது சிறந்த ஆடைகளை அணியுமாறு சொல்கின்றது.

இந்தக் கட்டளையைக் கடைப்பிடித்து தினமும் ஐந்து தடவை நேர்த்தியாக ஒருவன் ஆடை அணிந்தால் ஆடை விடயத்தில் அவனிடத்தில் நேர்த்தியான தன்மை ஏற்பட்டுவிடும்.

வெள்ளிக்கிழமை தினத்தில், இருக்கும் ஆடையில் நல்லதை அணிவது அதிலும் குறிப்பாக வெள்ளை நிற ஆடைகளை அணிவது சிறந்ததாகும்.

‘வெள்ளிக்கிழமை தினத்தில் ஒருவர் குளித்து பல் துலக்கி தன்னிடம் வாசனை இருந்தால் வாசனை பூசி தனது ஆடையில் நல்லதை அணிந்து பின்னர் மஸ்ஜிதுக்கு வந்து மக்களின் பிடரிகளைக் கடந்து செல்லாமல் விரும்பிய அளவு தொழுது இமாம் வந்ததில் இருந்து தொழுது முடியும் வரை மௌனமாக இருந்தால் அது அவருக்கு முந்திய ஜும்ஆவுக்கும் இந்த ஜும்ஆவுக்கும் இடைப்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக அமையும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா ஸஹ்ல் இப்னு ஹனீப்
நூல்: அஹ்மத்- 11768, 21539, 23571, இப்னு மாஜா- 1097, அபூதாவூத்- 343

‘நீங்கள் வெள்ளை (நிற) ஆடைகளை அணியுங்கள். அது உங்கள் ஆடைகளில் சிறந்தது. மரணித்தவர்களையும் அதைக் கொண்டு கபனிடுங்கள்…’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(வ)
நூல்: அஹ்மத் 3426, 20140, இப்னு மாஜா 3566, அபூதாவூத் 3878, 4061, திர்மிதி 994, 2810,
நஸாஈ 1986

(இந்த அறிவிப்பை இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்று குறிப்பிடுகின்றார்கள்.)

இன்று சிலர் குத்பா ஓதுபவர் வெள்ளை ஆடை அணிவதையே பித்அத் போன்றும் மூட நம்பிக்கை போன்றும் பார்க்கத் துவங்கிவிட்டனர். ஜும்ஆவுக்கு சமுகம் தருகின்றவர்களும் நல்ல ஆடைகளை அணிவதை இஸ்லாம் விருப்பத்திற்குரியதாகப் பார்க்கின்றது.

04. கெட்ட வாடைகளைத் தவிர்த்தல்:
பள்ளிக்குச் செல்லும் போது நல்ல வாசனையுடன் செல்வது சிறந்தது. பிறருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அருவருப்பான வாசனைகளுடன் செல்வது வெறுக்கத்தக்கதாகும். வெங்காயம், வௌ;ளைப்பு+ண்டு போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு பல் துலக்காமல் செல்வது, சிகரட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் பாவித்துவிட்டுச் செல்லுதல், வியர்வை வாசம் வீசும் நிலையில் செல்வது என்பவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தொடரும்…. இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *