Featured Posts

குழந்தைகள் அல்லாஹ்வின் அருட்கொடைகள்

அருளாக விளங்கும் ஒவ்வொன்றும் அமானத் ஆகும். சொத்து, செல்வங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள். அவை இஸ்லாத்தின் பார்வையில் அமானிதமாக நோக்கப்படும். தேக ஆரோக்கியம் ஓர் அருளாக இருப்பது போல் அது ஓர் அமானிதமுமாகும். இளமைப் பருவம் ஓர் அருள். அவ்வாறே அது ஓர் அமானிதமாக கருதப்படும். அந்த வகையில் அருளாக கிடைக்கப்பெற்ற குழந்தைகள் மிகப் பெரும் பாக்கியமும் அமானிதமுமாகும்.

உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் குழந்தைச் செல்வம். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் குழந்தைகளை ஸீனத் என்று வர்ணிக்கின்றான்.

“செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்.” (18: 46)

குழந்தைகள் இந்த உலகத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற ஒரு நிஃமத் (அருட்கொடை) என்றும் அல்லகுர்ஆன் குறிப்பிடுகின்றது.

“ஏராளமான பொருள்களையும் புதல்வர்களையும் (தந்து) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.” (17: 06)

கண்களுக்கு குளிர்ச்சியானவர்கள் (குர்ரதுல் அஃயுன்) என்றும் அல்குர்ஆன் குழந்தைகளை வர்ணிக்கிறது.

“மேலும் அவர்கள் எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரி டமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” (25: 74)

இவ்வாறு குழந்தைகளை அருளாக, அலங்காரமாக, செல்வமாக, பாக்கிய மாக, கண்குளிர்ச்சியாக, பரிசாக வர்ணிக்கின்ற அல்குர்ஆன் குழந்தைகள் சோதனையுமாகும் என்ற உண்மையையும் சொல்கிறது.

நிச்சயமாக உங்கள் செல்வமும் உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனை யாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.” (08: 28)

அருளாகக் கிடைக்கப்பெற்ற எமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டிய உரிமைகள், கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறினால் இவர்கள் எமக்கு இம்மையிலும் மறுமையிலும் கண்குளிர்ச்சியாக இருப்பதற்குப் பகரமாக பித்னாவாக மாறுவார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்,
“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஆண்மகன் குடும்பத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவன் வீட்டில் பொ றுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். வேலைக்காரர் தனது எஜமானனின் சொத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்.” (புஹாரி)

முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66: 06)

 

நல்ல குழந்தைகள் கிடைக்க துஆ செய்ய வேண்டும்:

இறைத்தூதர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!” என்று (ஸக்கரிய்யா) கூறினார். (19:6)

ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார். (3:38)

 

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்:

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும்.

இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்) (2 :128)

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.) (14 :40)

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர். (25 :74)

 

குழந்தைகளை சபிக்க கூடாது:

அன்சாரிகளில் ஒருவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்று விட்டது. அப்போது அவர் “ஷஃ’ என அதை விரட்டிவிட்டு, “உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!” என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?” என்று கேட்டார்கள். “நான்தான், அல்லாஹ்வின் தூதரே!” என்று அந்த அன்சாரி பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வர வேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக் கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)” என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 5736)

குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது. குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் சிரம சாத்தியமான பணியாகவே விளங்குகின்றது. அந்தவகையில் ஓவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை ஈருலகத்திலும் வெற்றிபெற்றவர்களாக வளர்த்தெடுப்பது அவர்கள் மீதுள்ள தார்மீகப் பொறுப்பாகும்.

மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2 comments

  1. “செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்.” (50: 46)

    வசன எண் தவறு 50வது அத்தியாயத்தில் மொத்தம் 45 வசனங்கள் தான்.

  2. நிர்வாகி

    Typo error corrected.

    it should be: 18:46

    Jazakallah khair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *