Featured Posts

“மஹர்” எனும் மணக்கொடை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-28 [சூறா அந்நிஸா–05]

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً  فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏

“பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.” (4:4)

பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுகின்றனர். இது பெரும் குற்றமாகும். இஸ்லாம் பெண்ணுக்கு ‘மஹர்’ – மணக் கொடை கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.

இந்த மஹர் பணமாகவும், பொருளாகவும் இருக்கலாம். சில நபித்தோழர்கள் தோட்டத்தை, தங்கத்தைக் கொடுத்து திருமணம் முடித்துள்ளனர். மணப்பெண் எதை ஏற்றுக் கொள்கின்றாளோ அதுவும் மஹராக அமையலாம்.

அபூதல்ஹா(வ) உம்மு சுலைம்(வ); அவர்களைத் திருமணம் செய்ய விரும்பிய போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அதையே மஹராக ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

இவ்வாறே குர்ஆனின் சு+றாக்களைக் கற்றுக் கொடுத்து அதையே மஹராக நபி(ச) அவர்கள் ஆக்கியுள்ளார்கள். மஹர் என்பது பெண் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்.

ஒருவர் மணமுடித்து அந்தப் பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு பிரிய நினைத்தால் எவ்வளவுதான் மணக்கொடை கொடுத்திருந்தாலும் அதை மீளப் பெற முடியாது.

“ஒரு மனைவியின் இடத்தில் வேறொரு மனைவியை (விவாகரத்தின் மூலம்) மாற்றிக்கொள்ள நீங்கள் நாடினால் அவர்களில் ஒருத்திக்கு ஒரு செல்வக் குவியலையே (மஹராக) கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அநியாயமாகவும் பகிரங்கமான குற்றமாகவும் அதை நீங்கள் பறித்துக் கொள்வீர்களா?”

அவர்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்து, நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் அனுபவித்திருக்கும் நிலையில் அதை எப்படி நீங்கள் எடுக்க முடியும்?” (4:20,21)

ஒரு பெண் தனது கணவரை வேண்டாம் என்று கூறினால் அவர் கொடுத்த மணக் கொடையை மீளக் கையளிக்க வேண்டும்.

திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட முன்னர் ‘தலாக்’ – விவாகரத்து நடந்தால் குறித்த மஹரில் அரைவாசியை அப்பெண்ணுக்கு வழங்க வேண்டும். இதில் பெண் தரப்பு தனது பகுதியை விட்டுக் கொடுப்பதோ அல்லது மாப்பிள்ளை தனது மீதி 50¤ ஐ விட்டுக் கொடுத்து பேசிய படி முழு மஹரைக் கொடுப்பதோ அவரவர் நல்ல சுபாவத்தைப் பொருத்ததாகும்.

“நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டு வதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரைவாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும். மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்து விட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.” (2:237)

இஸ்லாம் விதித்த இந்த மஹர் தொடர்பான சட்டம் பெண்ணினத்திற்கு இஸ்லாம் கொடுத்த உரிமைகளில் ஒன்றாகும். இதை மீறுவறு குற்றமாகும். இதை மீறி பெண்ணிடம் வரதட்சணை வாங்குவது ஆண் இனத்திற்கே அவமானமாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *