அநாதைகளின் சொத்து
‘அநாதைகளிடம் அவர்களின் சொத்துக்களை நீங்கள் கொடுத்து விடுங்கள். நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றிவிடாதீர்கள். உங்களுடைய சொத்துக்களுடன் (சேர்த்து) அவர்களின் சொத்துக்களை உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.’ (4:2)
சமுதாயத்தில் பலவீனமான ஒரு பிரிவினர்தான் அநாதைகளாவர்;. தந்தையை இழந்த சிறுவர் சிறுமியர் ‘யதீம்’ – அநாதை என்று கூறப்படுவர். இவர்கள் வறியவர்கள் என்றால் புறக்கணிக்கப் படுகின்றனர். செல்வந்தர்கள் என்றால் அநீதிக்குள்ளாக்கப் படுகின்றனர்.
இந்த வசனம் அநாதைகளின் செல்வத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறுகின்றது.
அநாதைகளின் சொத்தை பராமரிப்பவர் அநியாயமாக ஆக்கிரமித்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு ஆக்கிரமிப்பதை அல் குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கின்றது.
‘நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகின்றார்களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.’ (4:10)
ஒரு தந்தை செல்வத்தை விட்டு விட்டு மரணித்து அவருக்கு பல பிள்ளைகள் இருந்து மூத்தவன் இளையவர்களுக்கு சம பங்கு கொடுக்காமல் அனைத்தையும் அபகரித்துக் கொண்டால் அதுவும் இதில் அடங்கும். இத்தகைய கொடுமைகள் பல குடும்பங்களில் நடந்தேறி வருகின்றன.
அநாதையின் சொத்தை அவர்களிடம் எப்போது கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் தெளிவாகவே குறிப்பிடுகின்றது.
‘திருமணப் பருவத்தை அடையும் வரை அநாதைகளைச் சோதித்துப் பாருங்கள். அவர்களிடம் (நிர்வகிக்கும்) திறமையை நீங்கள் உணர்ந்தால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி விடுவார்கள்; என்பதற்காக வீண் விரயமாகவும், விரைவாகவும் அதனை உண்டு விடாதீர்கள். எவர் வசதியுடையவராக இருக்கின்றாரோ அவர் (அதிலிருந்து உண்ணாது) மன நிறைவு கொள்ளட்டும். யார் வசதியற்றவராக இருக்கின்றாரோ, அவர் நியாயமான முறையில் உண்ணட்டும். அவர்களிடம் அவர்களது சொத்துக்களை ஒப்படைக்கும் போது அவர்களுக்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் விசாரணை செய்யப் போது மானவன்.’ (4:6) அநாதைகள் தமது சொத்தைத் தாமே பராமரிக்கக் கூடிய பக்குவத்தை அடைந்த பின்னர் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் பராமரிப்பாளர் பணக்காரராக இருந்தால் அநாதையின் சொத்தில் இருந்து பராமரிப்புக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. வசதியற்றவர்கள் என்றால் நியாயமான முறையில் பராமரிப்புக்கான பணம் எடுத்துக் கொள்ளலாம். பணத்தை ஒப்படைக்கும் போது உரிய சாட்சிகள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் வழிகாட்டுகின்றது.
அநாதைப் பெண்ணும் திருமணத்தில் நீதமும்
‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:03)
இந்த வசனத்தின் முன் பகுதியில் அநாதைப் பெண்களை மணமுடித்து உங்களால் நீதமாக நடக்க முடியாமல் போகும் என்று நீங்கள் பயந்தால் என்று அல்லாஹ் ஆரம்பிக்கின்றான். ஒரு தந்தை இறந்து அவருக்கு ஒரு மகளும் சொத்தும் இருந்தால் அந்த அநாதைச் சிறுமியைப் பராமரிப்பவர் சொத்துக்காக அந்தப் பெண்ணை மணமுடிக்கும் நிலை இருந்தது. அவ்வாறு மணமுடிக்கும் போது அந்தப் பெண்ணுக்கு உரிய மணக்கொடை கொடுக்கப்பட மாட்டாது. அவருக்கு வேறு மனைவியர் இருந்தால் அந்த அநாதை மனைவிக்கு சம அந்தஸ்த்தும் கிடைக்காது. இந்த நிலையை இஸ்லாம் இந்த வசனத்தின் மூலமாக தடை செய்து அநாதைச் சிறுமியருக்குப் பாதுகாப்பு அளித்தது. ஒரு வேளை பராமரிப்பாளர் முடிக்காவிட்டாலும் அந்தப் பெண்ணுக்குத் தகுதியில்லாத உறவுக்கார ஆண்களுக்கு அவள் மணமுடித்துக் கொடுக்கப்படலாம். இந்த வழிமுறையையும் இந்த வசனம் தடை செய்கின்றது.