அந்தச் சில மாதங்கள் பொருளாதார ரீதியாக எங்களுக்குச் சோதனை தருவதாகவே இருந்தன. ஆனால், ஒரு தெளிந்த நீரோடையைப் போன்றதொரு நிம்மதியினை உள்ளூர உணர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்னர், என்னால் பெறப்பட்டிருந்த இடருதவிக்கடனின் மாதாந்த அறவீட்டுத்தொகையைக் குறுகிய சில மாதங்களுக்குள் செலுத்தி, அதிலிருந்து விரைவில் விடுபடுவதற்கான ஒரு முயற்சியே அது.
சம்பள அதிகரிப்பிற்கான தேவையும் எதிர்பார்ப்பும் ஒருபுறமிருக்க, பல அசௌகரியங்களுக்கு மத்தியிலும் அந்தக் கடனை அடைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னைப் பல நாட்களாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.
சந்தர்ப்பவசத்திற்கு ஆட்பட்டு பலர் வட்டிக்கு கடன் பெறுகிறார்கள் என்பதற்காக அதை மேலும் சரிகாணவோ, எனது வாழ்விலும் தொடரவோ விரும்பவில்லை. எப்போதோ பெற்றுக்கொண்ட கடனாயினும், உடனே செலுத்த வேண்டும் என்னும் உறுத்தல் இருந்தே வந்தது. அதை முழுமையாகச் செலுத்துவதற்கு பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லையாதலால், எனது ஊதியத்தின் நான்கில் ஒரு பங்கினை மாதாந்தம் செலுத்தியாவது, அதிலிருந்து முற்றாக விடுபடுவதற்குள் இறைவன் ஆயுளை நீடித்துதர வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்! அவ்வாறே நாடிவிட்டான்.
உறுத்திக் கொண்டிருந்த கடனிலிருந்து முழுமையாக விடுபட்ட நிலையில், எனது அனுபவத்தினைப் பகிர்ந்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது, சில சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடந்தகாலங்களில் எனக்காக கடன் பிணையாளிகளாய் ஒப்பமிட்டிருந்தவர்கள் தற்போது தாங்கள் பெறப்போகும் அதே கடனுக்காகப் பிணைநிற்க அழைத்தார்கள். எனது மாற்றத்தை நளினமாக அவர்களுக்கு எடுத்துக்கூறினேன். அதனைக் கேட்டு,
மிகச் சிறிய வட்டியுடன் மாதாந்தம் சிறியளவிலான தொகைதானே அறவிடுகின்றார்கள். மொத்தமாகச் செலுத்த என்ன அவசியம் வந்துவிட்டது எனப் பலரும்,
ஆமாம், நானும் இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என்ற ஈமானிய எண்ணத்துடன் சிலருமாகப் பேசிச் சென்றார்கள்.
காரியாலயத்தில் கடமையாற்றும் மார்க்க அறிஞர்கள் பெருநாள் முற்பணத்தைத் தவிர, இதுபோன்ற கடன்களுக்கு முயற்சித்ததே இல்லை. அதனால், அவர்கள் மீது எனக்குள் தனிமரியாதையே இருக்கின்றது.
ஆனால், சாதாரண மனுஷியாக நான் அதிலிருந்து விடுபட நினைத்தபோதே பல சகஉத்தியோகத்தர்கள் விமர்சித்தார்கள். அரசாங்கம் எமக்கென்று இலகுபடுத்திக் கொடுத்திருக்கும் கடனைப் பெறுவதில் தயக்கம் தேவையில்லையே என்றார்கள். அவர்கள் “இலகு” எனக் கருதுவது அது குறைந்தவீத வட்டி என்பதனாலும்தான்.
பொதுவாக, எந்தத் தொழிலாயினும் ஓய்வூதியம்வரை கடமையாற்றித்தான் ஆகவேண்டும் என்ற உளவியல் அனைத்துப் பெண்களுக்குள்ளும் இருக்கிறது. தேவைக்கேற்ப சேவையாற்றிவிட்டு இடைவிலகல் செய்யலாம் என்ற விருப்பத் தேர்வினை யாரும் கவனத்திற் கொள்வதேயில்லை. அப்படி ஒரு முடிவை ஒரு குடும்பபெண் எடுத்தாலும், தான் எடுத்துவிட்ட கடன்களே அவளுக்கு தடையாகி விடுகின்றன.
அது ஒருபுறமிருக்க, சில நிறுவனங்கள் உத்தியோகத்தர்களுக்கென்றே இவ்வாறான கடன்கள் மற்றும் பொருட்கடன்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்வையே சுமையாக்கி விடுகின்றன. என்னைப் பொறுத்தவரை போதுமென்ற மனம்தான் எமது பொருளாதாரத்தினை வரையறுக்கின்றது என்பேன்.
ஆசைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பினைக் கொடுத்துப் பின்னர், கூடவே ஒரு வெறுமையையும் இலவச இணைப்பாக இணைத்து, பகட்டான ஒரு மாயவலையில் மனிதர்களை வீழ்த்தும் சக்தி இந்த வட்டிக்கடனுக்கு இருக்கிறது போலும். பலரது அனுபவங்களே இதற்குச் சான்று.
நானறிந்த இல்லத்தரிசி ஒருவர் ஆடைகழுவும் இயந்திரம் மற்றும் குளிரூட்டிப் பெட்டி என்பவற்றுக்கான தேவையுடையவராக இருந்தார். உண்மையிலே அதற்கான பணவசதி அவரிடம் இல்லை. நிறுவனமொன்றில் இணைந்து இரண்டையும் தவணை முறையில் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் செலுத்த வேண்டிய தொகையைக் கணக்கிட்டுப் பார்க்கையில் அப்பொருட்களின் நேரடி விலையிலும் பார்க்க அரைவாசி தொகை அதிகமாகச் செலுத்த வேண்டியிருந்தது. இதனால், மன உழைச்சலும் கூடவே சேர்ந்துவிடுகிறது.
நிறுவனத்தின் வரையறைகளுக்கிணங்கி ஒப்பந்தத்தில் ஒப்பமிட்ட பின்னர்தான் பொருளோ பணமோ பெறப்படுகின்றது என வைத்துக் கொண்டாலும், அதே ஒப்பந்தம்தான். குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்த சில வாகன உரிமையாளர்களைக் காலப்போக்கில் தற்கொலையைச் சிந்திக்கும் அளவிற்கு மாற்றியிருக்கின்றது.
ஒப்பந்தத்தின் வரையறைகளை மீறினால், நிறுவனத்தின் நடவடிக்கை எப்படி அமையும் என்பதைப் பற்றியோ, அதன் விளைவுகளைப் பற்றியோ, பெரும்பாலானோர் கவனத்திற்கொள்வதேயில்லை.
பொதுவாகக் கடன் பெறுவதென்பது சந்ததிகளின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்படும் விடயமாகும். மரணித்தவர் கடன்பெற்றவராக இருந்தமையினால், ஜனாசாத் தொழுகை நடத்த மறுத்த நபியவர்கள், மரணித்தவர் சார்பாக வேறு ஒருவர் பொறுப்பெடுக்க முன்வந்த பின்னரே அந்த ஜனாசாவை முன்னின்று தொழுவித்தார்கள். இந்த சம்பவம் ஒன்றிலிருந்தே கடன் எவ்வளவு பாரதூரமானது என்பதை உணரலாம்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட கடன் விடயமே மரணம் வரை தாக்கம் செலுத்தும்போது, அதையே வட்டிக் கடனாகப் பெற்ற நிலையில் மரணித்து, நம் உறவுகளையும் பாவத்திற்காளாக்க வேண்டுமா?
குடும்ப நிலைமையை உணராமல் அல்லது, உணர்த்தப் படாமல் வளர்க்கப்படும் பிள்ளைகள் தனது பெற்றோரை கடன் பழுவில் விழவைக்கின்றார்கள். இதற்கு எளிமையைக் கற்றுக் கொடுக்காத பெற்றோரே காரணமாகி விடுகிறார்கள்.
‘இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்”
என்று, கடனிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரக் கற்றுத் தந்த இஸ்லாம்,
“அழகிய கடன் கொடுங்கள்”
என்று கொடுக்கத் தூண்டவும் செய்கின்றது.
இஸ்லாம் வரையறுக்கும் கடன், மனச்சாட்சி சம்பந்தப்பட்டது. அந்தக்கடன் இறைவனின் பொருத்தத்தைத் தவிர வேறு எந்த நன்மையையும் எதிர்பார்க்காதது. எந்த நிறுவனமும் எந்தவொரு நன்மையும் இல்லாமல் கடன் வழங்க முன்வரமாட்டாது என்ற அடிப்படையினைப் புரிந்து கொண்டாலே வட்டிக் கடன் எது? வட்டியில்லாக் கடன் எது? என்பதை எம்மால் இனங்காண முடியும்.
இந்த புரிதலில் உள்ள வித்தியாசம் நம்மிடையே கருத்து வேறுபாடுகளை வளர்த்து விடுகிறது. எனவே, முஃமீன்களாகிய நாம் நம் துணைவரோ அல்லது, உறவுகளோ வட்டியிருந்து ஒதுங்கும்வரை, அல்லது, ஏற்கெனவே பெற்றதை சீக்கிரம் செலுத்தும்வரை பக்குவமாக எடுத்துக் கூறிக்கொண்டேயிருக்க வேண்டியது கடமையாகும். இறைவன் நம் முயற்சிகளைப் பொருந்திக்கொள்வானாக!
-பர்சானா றியாஸ்