– Assheikh JM. Hizbullah Anvari (B.com Reading) –
இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் சிறுவர் கடத்தல் சம்பவங்கள், சிறுவர் கொலைகள், குழு மோதல்கள் போன்ற இன்னோரன்ன துஷ்பிரயோகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்சினையில் அனைவரும் மூழ்கியிருப்பதாலோ என்னவோ இத் துஷ்பிரயோக செயற்பாடுகளை பெரிபடுத்துவதிலோ, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலோ பலர் ஆர்வம் இன்றி காணப்படுகின்றனர். ஊடகங்கள் கூட இதுவிடயத்தில் அலட்சியப்போக்கைக் கையாள்வது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கின்றன.
ஒரு சில மனோ இச்சையாளர்களின் செயற்பாடுகளினால் அப்பாவி சிறார்களும், கல்வி பயிலும் வாலிபர்களும் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றனர். துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வழி முறைகளும், அதனை மீறுவோருக்கான தண்டனைகளும் சட்டரீதியிலும், சமூக ரீதியிலும் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த போதிலும், நாட்டின் ஏதோ ஓர் மூலையில் ஓர் சிறுவனோ, கல்வி பயிலும் ஓர் வாலிபனோ துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்பதை மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் அறிந்து, அதனைத் தடுப்பதற்கான உடனடிக்காரணி யாதென்பதைக் கண்டறிவதில் பெருமுனைப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது.
கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களை விட இவ்வருட முதல் எட்டு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் 318 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார். எட்டுமாத முடிவிலிருந்து இப்போது நாம் இருக்கும் நவம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தினுள் நாம் சமூகவலையத்தளங்கள் ஊடாகவே நிறைய சிறுவர் துஷ்பிரயோகங்களைப் பார்த்துவருகின்றோம். அவற்றையும் சேர்த்து அன்னளவாக எடை போட்டால் 350 ஆக இவ்வருடத்தின் முறைப்பாடுகள் உயரும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
அவ்வாறே கடந்த ஆண்டின் புள்ளிவிபரப்படி 3 ஆயிரத்து 785 சிறுவர் துஷ்பிரயோக குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 956 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான வன்மையான தாக்குதல்களாகவும், 602 முறைப்பாடுகள் குழந்தைகளின் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், 426 முறைப்பாடுகள் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும், 117 முறைப்பாடுகள் குழந்தைகளை மிகவும் மோசமான வகையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியமை தொடர்பிலும் 102 முறைப்பாடுகள் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியமை குறித்தும், 47 முறைப்பாடுகள் சிறுவர் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புபட்டது எனவும் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் 350 முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதானது மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு முறைப்பாடுகளிலும் சராசரி விகித அதிகரிப்பைக் காட்டுகிறது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படும் சிறுவன் நமது உறவுக்காரனாக இல்லாதிருப்பினும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய அறிவு கட்டாயம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். சிறுவர்களின் உரிமைகள் என்ன? சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன? சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணிகள் எவை? இத் துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்? போன்ற அறிவுடன் கூடிய விழிப்புணர்வு கட்டாயம் நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இன்று பாதிப்பிற்குள்ளானது ஏதோ ஓர் ஊரில், யாரோ ஓர் சிறுவனாக இருப்பினும் நாளை அது நம் குடும்பத்திற்கும் ஏற்படலாம். அப்போது நம்மையும், பாதிப்பிற்குள்ளான நமது சிறுவனையும் ஏதோ ஊர், யாரோ ஒரு சிறுவன் என பிறர் பார்த்திடக் கூடாது. அல்லாஹ் நம்மையும் நம் சிறார்களையும் பாதுகாப்பானாக..
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான அரசாங்க அங்கீகாரம்
சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும், சிறுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஒன்றியம் உருவாக்கப்பட்டு, அது 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் 1991ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினாலும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் யாவை என்பதை ஆராய்ந்து அவற்றை இச்சபை அங்கீகரித்துள்ளது. பொதுவாக ஓர் நடுநிலைப் பெற்றோரால் தமது பிள்ளைகளுக்கு பிறருக்கு தீங்கிழைக்காத வகையில் எவையெல்லாம் கட்டாயம் கிடைக்க வேண்டுமென்ற ஆசை இருக்குமோ அவை அனைத்தும் சிறுவர்களின் உரிமைகளாகக் கொள்ளப்படும்.
சிறுவர் துஷபிரயோகத்தின் வடிவங்கள்
சிறுவர் துஷ்பிரயோகமானது பல வடிவங்களில் அரங்கேற்றப்படுகின்றன. உடலியல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், உணர்வு ரீதியான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் என பல்வேறு கோணங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
அடித்தல், காயப்படுத்தல், கடத்திச் செல்லல், அங்கங்களை சிதைத்தல், கொலை செய்தல் போன்றவற்றின் மூலம் நிகழக்கூடியவை உடலியல் ரீதியான துஷ்பிரயோகமாகக் கருதப்படும். இது பெரும்பாலும் பெற்றோர்களினாலும், ஆசிரியர்களினாலும், பாதுகாவலர்களினாலும், அவர்களின் எதிரிகளினாலும் ஏற்படுகிறது. அளவுக்கு மீறிய உடலியல் துன்புருத்தல்கள் ஏற்படும் போது அச்சிறுவன் அதே கொடுமைகளை இன்னொருவருக்கு செய்ய வேண்டுமென்ற எண்ணத்திலே இருப்பான். பிள்ளைகளை அளவுக்கு மீறி அடித்து வளர்ப்பதால் அவர்களும் பெரிதாகி தமது பிள்ளைகளுக்கும், அல்லது தமது பொறுப்பிலுள்ள சகோதர சகோதரிகளுக்கும், அல்லது மாணவர்களுக்கும் அடி ஒன்றே மருந்து எனும் தியரியை கையிலெடுத்து செயற்பட இது வழிவகுக்குகிறது.
பொதுவாக சிறுவர்கள் சுயமாக விளையாடுதல், கற்றல், நாளாந்த கருமங்களைச் செய்தல், ஒளிவு மறைவின்றிப் பேசுதல், விருப்பங்களை வெளிப்படுத்துதல், அறியாத விடயங்களை அறிந்துகொள்ள முயலுதல், சுயமாகச் சிந்தித்தல், ஆராய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போது அவை பலவந்தமாகத் தடுக்கப்படுமிடத்து, உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாகுவார்கள்.
இதனால் அவர்களின் ஆற்றல், ஆளுமை, திறன், நுண்ணறிவு போன்ற உள நிலைகள் பாதிப்படையும். இது உளவியல் ரீதியான துஷ்பிரயோகமாக கொள்ளப்படுகிறது. அநேக பெற்றோர்கள் தமது ஆசைகளை பலவந்தமாக பிள்ளைகளின் உள்ளத்தில் திணிக்க முற்படுவதே இத்தகைய துஷ்பிரயோகம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது.
பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் இச்சைக்காக சிறுவர்களைப் பயன்படுத்துவது மாத்திரமின்றி சிறுவர்களை முறையற்ற விதத்தில் தொடுதல், வருடுதல், பொருத்தமற்ற பாலியல் சொற்களைப் பயன்படுத்துதல், பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்தல், பாலியல் செயற்பாடுகளை பார்ப்பதில் ஈடுபடுத்தல், ஆபாசப் படங்கள், புத்தகங்களை பார்க்கச் செய்தல் போன்ற செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடச் செய்வதானது பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது. இவைகள் பெற்றோரினதும், ஆசிரியர்களினதும், தமது பொறுப்புதாரிகளினதும் கண்காணிப்பை விட்டும் குறித்த சிறுவன் விலகும் போதும், தீய நண்பர்களுடன் சேரும் போதும் ஏற்படுகிறது. சில சமயங்களில் இத்தகைய பாலியல் செயற்பாடுகளை பெற்றோரிமிருந்து கூட சிறுவர்கள் கற்றுக்கொள்கின்றனர் என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் அதிகமான பாலியல் துஷ்பிரயோகங்கள் நெருங்கிய உறவினர்கள் மூலமாகவே ஏற்படுவதாக சமூகவியல் புள்ளிவிவர அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமென்பது வெளிப்படையாகவே மறுத்து விலக்குதல், தனிமைப்படுத்தல், அவமானப்படுத்தல், பயமுறுத்தல், கெடுத்தல், சுரண்டிப்பிழைத்தல், சூழலுடன் இடைத் தொடர்பை மேற்கொள்ளும் சிறுவர்களது பிரயத்தனங்களுக்கு தண்டனையளித்தல் போன்ற செயற்பாடுகள் உணர்ச்சி ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது. இதுவும் சமூகத்தில் நாம் அன்றாடம் சங்கமிக்கும் சூழலில் ஏற்படுவதை கண்கூடாக காணமுடிகின்றது.
அதே போல் ஒரு சிறுவனுக்குரிய உடை, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுகின்றபோது அச்சிறுவன் புறக்கணிப்பு ரீயிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றான்.
துஷ்பிரயோகங்கள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணி
மேற்குறிப்பிட்ட அனைத்து கோணங்களிலும் பாதிப்பிற்கு உள்ளாகும் சிறுவர்கள் காலப்போக்கில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, தம்மை ஒரு இழிபிறவி என எண்ணி, தனக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க இனி யாரும் வரப்போவதில்லை எனும் எண்ணம் மேலோங்கி, நான் தான் அதை தட்டிக்கேட்க வேண்டும் எனும் தைரியமாக அது உருமாறி, நான் இதற்காக மேற்கொள்ளும் வழிகள் சமூகத்தில் சரியா தவறா என்று பார்க்காமல் தனக்கு சரியென தோன்றுகிறது என்ற முடிவை எடுத்து கலத்தில் இறங்குவதே இத் துஷ்பிரயோகங்கள் மேலும் வளர்ந்து செல்வதற்கான காரணியாகத் திகழ்கின்றன.
தவறிழைக்கும் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் தான் பாதிக்கப்பட்டு, அசிங்கப்பட்டு, நொந்து நூலாகி, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சோக வரலாறுகளே அதிகம் இருக்கின்றன. இத்தகைய காரியங்களில் ஈடுபடுபவர்களை ஒரு வகை ஸைகோ என சமூகம் ஒதுக்கினாலும், அவர்கள் தமது பெற்றோர்களால், ஆசிரியர்களால், பொறுப்பாளர்களால் ஒழுங்காக நெறிப்படுத்தப்படவில்லை என்ற உண்மையை அநேகர் ஏற்க மறுக்கின்றனர். தாம் விட்ட தவறுகளை சரிசெய்ய பிள்ளைகளையும், மாணவர்களையும், தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்களையும் குற்றவாளிகளாக மாற்றுகின்றனர். சிலசமயங்களில் இவர்களின் தொந்தரவைத் தாங்காமல் பிள்ளைகளே வீட்டை விட்டு ஓடவும், பாடசாலையை துண்டித்திடவும் ஆயத்தமாகின்றனர். இவர்களே சுயநலமிக்க, மனோ இச்சையாளர்களான அந்த ஒரு சிலர்.
செய்ய வேண்டியது என்ன?
மேற்குறிப்பிட்ட முறையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆலாகும் பிரஜைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் போன்றவர்கள் பிள்ளைகளுக்கு உடலியல் தொந்தரவுகளை அதிகம் கொடுக்காமல் இருக்க வேண்டும். வளர்ப்பதற்கு தேவையான கண்டிப்புக்கள் இருக்கவேண்டிய அதே வேளை அளவுக்கு அதிகமான அதட்டல்கள் இருக்கக்கூடாது. தனது சொந்தப்பிரச்சினைகளில் ஏற்படும் கோபங்களைக் கூட பிள்ளைகள் மேல் காட்டக்கூடாது. அவர்கள் சொல்லக்கூடியதை காது தாழ்த்திக் கேட்பதோடு, அவர்களின் திறமைகளுக்கும், ஆசாபாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, தமது ஆசைப்படி அவர்கள் வளர வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றியமைத்திட வேண்டும். இத்தகைய கொடுமைகளை அதிகம் சந்திக்கும் சிறுசுகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்களை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமது உறவினர்களாக இருப்பினும், உறவினர் அல்லாதவராக இருப்பினும் அவர்களுடன் பழகும் விதங்களையும், தமது உடம்பில் தொடுவது தவறு என இருக்கும் உறுப்புக்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். தீய சகவாசங்களை விட்டும் அவர்களை எச்சரிக்க வேண்டும். பிள்ளைகளைப் பாராட்டுதல், அவர்களை வாழ்த்துதல், பரிசுகளை வாங்கிக்கொடுத்தல் போன்றவற்றால் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களைப் பயமுறுத்தி, அவமானப்படுத்திடக் கூடாது. அவ்களுக்கான உரிமைகளைச் சரிவர செய்திட வேண்டும்.
ஆக மொத்தத்தில் பொறுப்புள்ள தாயாகவும், நேர்மையான தந்தையாகவும் அவர்கள் முன்னிலையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். தனக்கான தலைசிறந்த வழிகாட்டி இவர்தான என தேர்ந்தெடுக்கும் வண்னம் அவர்களுக்கான வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பாதுகாப்பை எப்போதும் சிறந்த முறையில் வழங்கும் பாதுகாவளர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்களுக்காக மாறினால் மட்டமே உடலியல், உளவியல், உணர்வு, புறக்கணிப்பு போன்ற துஷ்பிரயோகங்களின் பல கோணங்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்து சமூகத்திற்கான சிறந்த பிரஜைகளைக் கொடுக்க முடியும்.
இதை இன்னொரு கோணத்தில் நோக்கினால் பாதிக்ப்பட்டு தவறுகள் செய்துகொண்டிருக்கும் குற்றவாளிகளை மேலும் மேலும் இக்குற்றங்களை செய்ய விடாது தடுக்கவும், ஏனைய சிறார்களை இவர்களின் பிடியிலிருந்து பாதுகாத்திடவும் இந்தத் தடுப்பு நடவடிக்கைப் பணிகள் சமூகப் பணியாக கருதப்பட்டு சமூகத்திலுள்ள ஒவ்வொரு பிரஜையும் இவை தொடர்பில் விழிப்புணர்வு பெறுவதுடன் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதை தமது பொறுப்பாகவும் உணர வேண்டும். இந்த உணர்வுகள் வெறுமனே வந்தடையாது. சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளும் செயற்பாட்டாளர்களும் சமூகத்தின் ஒவ்வொரு பிரஜையையும் சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது. இதற்கான காரணமென்ன, துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள். எத்தகையவர்களால் துஷ்பிரயோகம் ஏற்படுகிறது. துஷ்பிரயோகச் செயற்பாடுகளிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் அதற்கான முறையான பொறிமுறைகள் எவை போன்ற பூரண அறிவை பெறுவது அவசியமாகும்.
இவைகள் தூரநோக்குடன் கூடிய திட்டமிடல் விழிப்புணர்வாக இருப்பினும் இத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், பொறுப்பாளர்களையும் சார்ந்தது என்பதை யாரும் மறுத்திட முடியாது. சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளத்தில் தோன்றும் ஆவேசமும், துஷ்பிரயோகத்தினால் சிறுவர்களை இழந்தவர்கள் உள்ளத்தில் தோன்றும் ஆவேசமும், இத்தகைய பிரச்சினைகள் தோன்றாமல் இருக்க என்ன செய்யலாம் என நடுநிலையாக சிந்திக்கும் ஒருவரின் உள்ளத்தில் தோன்றும் வீரியமும் இயல்பாக வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளாகும். இவற்றை இஸ்லாம் குழந்தை வளர்ப்பு எனும் பகுதியில் ஆழமாக ஆய்வுசெய்துள்ளது.
இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் சமூகத்தையும், சமூகத்தின் இளமொட்டுக்களையும் துஷ்பிரயோகங்களிலிருந்து மீட்டெடுத்து, அவர்களுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் கைகளில் அவர்களை சேர்த்திடுவோம். தவறுசெய்தவர்களுக்கான முறையான தண்டனைகளை எவ்வித பாரபட்சமும் இன்றி பெற்றுத் தந்திட முனைப்புடன் செயற்படுவோம். இது போன்ற சிறுவர் துஷ்பிரயோக தவறுகள் இனியும் சமூகத்தில் தோன்றாமல் இருக்க பொறுப்பாளர்களாக இருக்கும் நாம், நம் பொறுப்புக்களை சமூகவியலை உணர்ந்து செயற்படுத்துவோம். அல்லாஹ்வே நம் அனைவருக்கும் துணைபுரியட்டும்.
“”எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு தலைவர்களாகவும் எங்களை ஆக்குவாயாக!” (அல்குர்ஆன் 25:74).