Featured Posts

மனிதனின் பலவீனம் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-36 [சூறா அந்நிஸா–13]

மனிதனின் பலவீனம்

يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا

“அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) இலகுபடுத்தவே விரும்புகின்றான். மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.” (4:28)

அடிமைப் பெண்களைத் திருணம் செய்ய அனுமதித்த பின்னர் அல்லாஹ் இலகுபடுத்த விரும்புகின்றான் என்பது கூறப்படுகின்றது. அத்துடன் மனிதன் பலவீனமானவனாகவும் படைக்கப் பட்டுள்ளான் என்றும் கூறப்படுகின்றது. இங்கே மனித பலவீனமாகக் கூறப்படுவது எது என்பது குறித்து அறிஞர்கள் விபரிக்கின்ற போது, பெண்கள் விடயத்தில் ஆண்களும் ஆண்கள் விடயத்தில் பெண்களும் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளனர். மனிதனின் இந்த இயல்பான பலவீனத்தின் காரணமாகவே இஸ்லாம் திருமணத்தைக் கடமையாக்கியுள்ளது. இல்லறம் இல்லாமல் துறவரம் பூணுவது என்பது சாத்தியமானது அல்ல. துறவிகளில் அதிகமானவர்கள் தமது துறவரக் கொள்கைக்கு துரோகம் செய்து வருகின்றனர் என்கின்றது.

மேலும், அடிமைப் பெண்கள் தமது எஜமானையே சார்ந்திருப்பவர்கள். அவர்களை அனுபவிக்க அனுமதிக்காவிட்டாலும் தப்பு நடக்கவே வாய்ப்புள்ளது. எனவே, அடிமைப் பெண்களை அவர்களது எஜமான்கள் மட்டும் பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளலாம். குழந்தை பிறந்தால் அவள் அடிமைத்துவத்திலிருந்து விடுபட்டு ‘உம்முல் வலத்” – குழந்தையின் தாய் எனும் அந்தஸ்தைப் பெறுவாள் என குர்ஆன் கூறியது.

பொதுவாக ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது அவர்கள் தப்புச் செய்யும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் மிக நல்லவர்களாகவும், பண்பாளர்களாகவும், பக்குவமானவர்களாகவும், நெருக்கமானவர்களாகவும், நேசமானவர்களாகவும் இருந்தால் கூட ஒரு நேரம் இல்லையென்றாலும் மற்றொரு நேரம் தப்பான எண்ணம் ஏற்படவும், தவறான தூண்டுதல் உண்டாகவும், தப்பு நடக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இயல்பிலேயே பெண்கள் விடயத்தில் ஆண்கள் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளனர் என இந்த வசனம் கூறுகின்றது.

எவ்வளவுதான் சோஷியல் (சமூகவியல்) பற்றிப் பேசினாலும் எல்லோரும் ஏதோ முன்னேற்றம் அடைந்து விட்டதாகவும் தம்பட்டம் அடித்தாலும் ஆண்’ பெண் விடயத்தில் பலவீனமானவன் என்பதை அன்றாட செய்திகள் உறுதி செய்கின்றன. வயது வேறுபாடு இல்லாமல், அந்தஸ்த்து வேறுபாடு இல்லாமல், உறவு வேறுபாடில்லாமல் நாட்டில் நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்கள் இதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

எனவே, போலிக் காரணங்கள் கூறி நம்மை நாமே அழித்துக் கொள்ளாமல் இந்த இயல்பான மனித பலவீனத்தைப் புரிந்து அதற்கு எற்ப செயற்பட வேண்டும். இஸ்லாம் கூறும் மஹ்ரமான உறவு அல்லாதவர்களுடன் தனித்திருப்பது, தனித்துப் பயணிப்பது அனைத்தையும் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானதும், ஆரோக்கியமானதுமாகும்.

தற்கொலை தீர்வாகாது!

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا‏

“நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு மத்தியில் பொருத்தத்தின் அடிப்படையில் நடைபெறும் வியாபாரத்தைத் தவிர, உங்கள் சொத்துக்களை உங்களுக்கிடையில் தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும், உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடன் நிகரற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.” (4:29)

இந்த வசனத்தில் உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்று கூறப்படுகின்றது. ஒருவரின் சொத்தை அடுத்தவர் அநியாயமாக அபகரிப்பது சமூகத் தற்கொலையாகும்’ அழிவுக்கு வழிவகுக்கும். அதே நேரத்தில் விற்பவர் -வாங்குபவர் இருவரும் திருப்தியுடன் செய்யும் வியாபாரத்தையே இஸ்லாம் வரவேற்கின்றது. நிர்ப்பந்த வியாபாரம் தடுக்கப்படுகின்றது.

இந்த வசனத்தின் இறுதியில் உங்களை நீங்களே கொன்று கொள்ளாதீர்கள்! என தற்கொலை தடுக்கப்படுகின்றது. இன்று உலகில் சர்வ சாதாரணமான விடயங்களுக்கெல்லாம் தற்கொலை நடைபெறுகின்றது. இஸ்லாம் கழாகத்ர் (விதி) பற்றிய நம்பிக்கையை வலியுறுத்துகின்றது. வாழ்வில் ஏற்படும் இழப்புக்கள், சோதனைகளுக்கு தற்கொலை என்றும் ஒரு தீர்வாக அமையாது. செத்தவன் பிரச்சினையிலிருந்து விடுபட்டாலும் அவனைச் சார்ந்தவர்கள் பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். உண்மையில் தற்கொலை செய்பவன் சுயநலவாதி! தான் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என்று தன்னை அழித்துக் கொள்கின்றான். ஆனால் அவனது மனைவி-மக்கள், குடும்ப உறவுகள் அதன் பின்னர் அடையும் சோகம், கஷ்டம் பற்றி அவனுக்கு அக்கறையில்லை.

தற்கொலை செய்பவன் கோழையாவான். பிரச்சினைகளை எதிர் கொள்ளும் துணிச்சல் இல்லாததால் அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கின்றான். மரணத்தைச் சந்திக்கத் துணிந்தவன் ஏன் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கத் துணியக் கூடாது? இஸ்லாம், தற்கொலை செய்பவன் தனது இம்மையை மாத்திரமன்றி தனது மறுமை வாழ்வையும் அழித்துக் கொள்வதாகக் கூறுகின்றது. அவன் மறுமையில் நரகம் செல்வான் என்பதை இஸ்லாம் உறுதியாகக் கூறுகின்றது.

தற்கொலை செய்யும் பலரும் எனக்கென இந்த உலகில் யாரும் இல்லை என்ற மனநிலைக்குச் சென்று தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலையைக் கண்டித்துவிட்டு, அல்லாஹ் உங்களுடன் அன்பாக இருக்கின்றான் எனக் கூறி உங்களுக்கு யார் இல்லாவிட்டாலும் அல்லாஹ் இருக்கின்றான்’ அவன் உங்களுடன் அன்பாக இருக்கின்றான் எனக் கூறி ஆற்றுப்படுத்துகின்றான், ஆறுதல் கூறுகின்றான்.

தொடரும்… இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *