Featured Posts

குடும்பப் பிரச்சினைகளுக்கு காட்டும் தீர்வு | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-38 [சூறா அந்நிஸா–15]

“பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதி யுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும், பெரியவனுமாக இருக்கின்றான்

இன்னும் அவ்விருவருக்குமிடையில் பிளவை நீங்கள் அஞ்சினால், அவனது குடும்பத்திலிருந்து ஒரு நடுவரையும், அவளது குடும்பத்திலிருந்து ஒரு நடுவரையும் (சமாதானம் செய்ய) அனுப்புங்கள். இவ்விருவரும் (அவர்களுக்குள்) நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்குமிடையில் இணக்கத்தை ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் மிக நுட்பமானவனாகவும் இருக்கின்றான்”

அல் குர்ஆன் 4:34-35

இந்த வசனங்கள் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்துப் பேசுகின்றது. இல்லற வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்றால் மனைவி கணவனை நிர்வாகியாக ஏற்க வேண்டும். மனைவி கற்பையும், கணவனின் செல்வக் குழந்தை களையும் பாதுகாப்பவளாக, அல்லாஹ்வுக்கும் கணவனுக்கும் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும்.

மனைவி கணவனுடன் முரண்பட்டால் கணவன்,

  1. அவளுக்கு நல்ல முறையில் போதனை செய்ய வேண்டும்.
  2. அதற்கு அவள் உடன்பட்டு வராத போது படுக்கையை விட்டும் அவளை ஒதுக்கி வைக்க வேண்டும். இது உளவியல் ரீதியில் அவளிடம் மாற்றத்தைக் கொண்டு வர உதவும்.
  3. அதற்கும் அவள் சரிப்பட்டு வராத போது அவளை அடித்துத் திருத்த வேண்டும். அடித்தல் என்பது கரடு முரடானதாக இருக்கக் கூடாது. ஹதீஸ்களை ஆராய்ந்தால் இலேசாக அடிப்பதையே இந்த வசனம் கூறுகின்றது என்பதை அறியலாம்.
  4. அதற்கும் அவள் சரிப்பட்டு வராத போது கணவனின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்பட்டு விசாரித்து அவர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். சரிப்பட்டு வராத போது கணவன் முதல் தலாக் சொல்ல வேண்டும். அப்படிக் கூறினால் இத்தாக் காலத்துக்குள் அவர்கள் இருவரும் சமாதானமாக இணங்கி வாழ விரும்பினால் இணங்கி வாழலாம். காலம் முடிந்த பின்னர் சேர விரும்பினால் புதிதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். இப்படியாயின் இரண்டு முறை இணைவதற்கான அவகாசத்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. மூன்றாம் தலாக் கூறிவிட்டால் அதன் பின் அவர்கள் இணைவதாக இருந்தால் அந்தப் பெண் வேறொருவரைத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து இயல்பாகப் பிரிய வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. தலாக்.. தலாக்… தலாக்…. எனக் கூறிவிட்டால் உறவு அத்தோடு முடிந்துவிடும் என மாற்று மத சகோதரர்கள் புரிந்து வைத்திருப்பது தவறாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *