இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை. (ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு)
உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் என்று இமாம் அபூ ஸுர்ஆ அவர்கள் தனக்கு கூறியதாக இமாம் அஹ்மதின் புதல்வரான அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
இதனை இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஸியரு அஃலாமிந் நுபலா 11/187-ல் பதிவு செய்துள்ளார்கள்.
ஸஹீஹான், (புஹாரி, முஸ்லிம்) சுனன் அல் அர்பஆ (அபூ தாவுத், திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா) இவற்றுக்கு அடுத்த படியாக மிக நம்பத்தகுந்த ஹதீஸ் தொகுப்பாக இமாம் அஹ்மதின் “முஸ்னத்” நோக்கப்படுகிறது.
இமாம் அஹ்மத் அவர்கள் தமது முஸ்னத் அஹ்மதில் நாற்பதாயிரம் ஹதீஸ்களை திரட்டியுள்ளார்கள், அதில் பத்தாயிரம் ஹதீஸ்கள் மீட்டப்பட்டு வருவதனால் மொத்தம் முப்பதாயிரம் ஹதீஸ்கள் என கணிக்கப்படுகின்றது.
904 நபித்தோழர்களின் அறிவிப்புக்களை எழுதியுள்ளார்கள், நான்கு கலீபாக்கள், சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட நபித்தோழர்களின் அறிவிப்புக்களைக் கொண்டு முஸ்னதை ஆரம்பம் செய்துள்ளார்கள்.
முஸ்னத் அஹ்மதில் பலமான, பலவீனமான செய்திகள் இருக்கின்றன என்பது நம்பத்தகுந்த ஹதீஸ்கலை நிபுணர்களின் கருத்தாகும் ஆனால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் முஸ்னத் அஹ்மதில் இருக்கின்றன என்ற இமாம் இப்னுல் ஜௌஸி போன்றோரின் வாதம் வலுவற்றதாகும், இந்த இடத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் முஸ்னத் அஹ்மதில் கிடையாது என்ற ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி, இமாம் தஹபி போன்றோரின் வாதமே ஏற்புடையதாகும்.
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது “மின்ஹாஜுஸ் ஸுன்னா அந்நபவிய்யா” வில் பொய் சொல்லக் கூடியவர்கள் என்று அறியப்பட்டவர்கள் எவரிடமிருந்தும் செய்திகளை அறிவிப்பு செய்வதில்லை என்பதனை முஸ்னத் அஹ்மதின் நிபந்தனையாக இமாம் அஹ்மத் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள்.
ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முஸ்னத் அஹ்மதில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உண்டு என்ற வாதத்தை தகர்த்தெறியும் நோக்கில் “அல் கவ்லுல் முஸத்தத் பித் தப்பி அனில் முஸ்னத்” என்ற நூலையும் எழுதியுள்ளார்கள்.
முஸ்னத் அஹ்மதின் தனித்துவங்கள் குறித்து “ஹஸாயிஸு முஸ்னதில் இமாம் அஹ்மத்” என்ற பெயரில் ஒரு நூலையும் இமாம் முஹம்மத் பின் உமர் அபூ மூஸா அல்மதீனீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
அல்லாமா அஹ்மத் முஹம்மத் ஷாகிர், அல்லாமா ஷுஅய்ப் அல் அர்னாஊத், அல்லாமா அஹ்மத் மஃபத் அப்துல் கரீம் போன்றோர் முஸ்னத் அஹ்மதை திறனாய்வு செய்து நெறிப்படுத்தியுள்ளனர்.
இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது முஸ்னத் அஹ்மதை தொகுத்து முடிப்பதற்காக (ஹதீஸ்களைத் தேடி) முழு உலகையும் இரண்டு முறை வலம் வந்தார்கள் என இமாம் இப்னுல் ஜௌஸி ரஹிமஹுல்லாஹ்
அவர்கள் தமது ஸைதுல் ஹாதிர் – 246 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
எங்களுடைய அன்புக்குரிய இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவிகளையும் அவர்களுக்கு வழங்குவானாக.