ஷைத்தான் மனிதர்களை குழப்புவதற்கும் விலக்கப்பட்டவைகளில் அவர்களை வீழ்த்துவதற்கும் பெரும் ஆர்வம் கொண்டவன். இதனால்தான் அல்லாஹ் நம்மை இப்படி எச்சரிக்கிறான்: “நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்” (24:21). மனிதனின் இரத்தம் ஓடும் நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான். மனிதர்களை மானக்கேடானவற்றில் வீழ்த்துவதற்கு ஷைத்தான் கையாளும் வழிகளில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பதாகும். இதனால் தான் இறைமார்க்கம் இப்பாதையை அடைத்து விட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்த ஆணும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான்’ அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதி
பனூ ஹாஷிம்களில் சிலர் அஸ்மா பின் உமைஸ் (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது அஸ்மா (ரலி) அபூபக்கர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அபூபக்கர் (ரலி) வந்ததும் அவர்களைக் கண்டார்கள். கணவன் இல்லாத வீட்டிற்கு அவர்கள் வந்ததை அபூபக்கர் (ரலி) விரும்பவில்லை. அதனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். மேலும் நான் இதை (தவறாக அல்லாமல்) நல்லதாகவே கருதுகிறேன் என்றும் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திண்ணமாக அல்லாஹ் அவளைக் குற்றமற்றவளாக ஆக்கியிருக்கின்றான் எனக் கூறிவிட்டு மிம்பரில் ஏறி, ‘இதற்குப் பிறகு எந்த ஆணும் கணவன் வீட்டில் இல்லாத போது ஒரு பெண்ணிடம் செல்லக் கூடாது. அவருடன் ஒருவரோ இருவரோ சேர்ந்து சென்றாலே தவிர’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம்.
எனவே எந்த ஆணும் தம் சகோதரரின் மனைவி அல்லது வேலைக்காரி போன்ற அந்நியப் பெண்ணுடன் அல்லது பெண் மருத்துவருடனும் வீட்டிலோ அறையிலோ அல்லது காரிலோ தனித்திருப்பது கூடாது. ஆயினும் பெரும்பாலோர் இதில் அலட்சியமாகவே இருக்கின்றனர். தம் மீதோ பிறர் மீதோ நம்பிக்கை வைத்து இப்படி நடந்து கொள்கின்றனர். இதனால் மானக்கேடான காரியங்களில் அல்லது அதற்கான தூண்டுதல்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். மட்டுமல்ல குழந்தைகள் தவறான வழியில் பிறத்தல், சந்ததிக் கலப்பு ஏற்படுதல் எனும் வருந்தத்தக்க நிலையும் அதிகரித்து விடும்.