Featured Posts

பொய் சாட்சி சொல்லுதல்

அல்லாஹ் கூறுகிறான்: “எனவே விக்கிரகங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்தும் விலகியிருங்கள். அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காது, அவனுக்கே ஒருமனப்பட்டவர்களாய்த் திகழுங்கள்” (22:30,31)

அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். புகாரி (5976), முஸ்லிம்.

பொய் சாட்சி சொல்வதைப் பற்றிய எச்சரிக்கை இங்கு திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருப்பதற்குக் காரணம் மக்கள் அதை சாதாரணமாக எண்ணுவதும், அதன்பால் தூண்டக்கூடிய பகைமை, பொறாமை போன்ற காரணங்கள் அதிகமாக இருப்பதாலும், அதனால் பெரும் தீமைகள் விளைவதாலும் தான். பொய் சாட்சியால் எத்தனை உரிமைகள் பாழாகியுள்ளன! எத்தனை நிரபராதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்! அதுமட்டுமா பொய் சாட்சியினால் எத்தனையோ பேர் தங்களுக்கு உரிமை இல்லாதவற்றை அடைந்துள்ளனர்! எத்தனையோ பேருக்கு போலியான குடும்ப உறவு ஏற்பட்டுள்ளது.

பொய் சாட்சி சொல்வதை சாதாரணமாகக் கருதுவதில் இதுவும் அடங்கும். சிலர் நீதிமன்றங்களில் தான் சந்திக்கும் (முன் பின் தெரியாத) ஒருவரிடம் எனக்கு நீ சாட்சி சொல், உனக்கு நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறுகின்றனர். பிறகு உண்மை நிலவரம் என்ன, சூழ்நிலை என்ன என்று தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களிலும் கூட எதுவும் தெரியாமலேயே ஒருவருக்கு ஒருவர் சாட்சி கூறிக் கொள்கின்றனர்.

உதாரணமாக இவந்தான் இந்த நிலத்துக்கு அல்லது இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன், அல்லது இவன் குற்றமற்றவன் என்று சாட்சி சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் அவனை (முதல் முறையாக) நீதிமன்ற வாசலிலோ அல்லது தெருவிலோ தான் சந்தித்திருப்பார்கள். இது பொய்யான, போலியான சாட்சியாகும் சாட்சி கூறுவதென்பது “நாங்கள் அறிந்ததை வைத்தே சாட்சி சொல்கிறோம்” (12:81) என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பது போல அமைய வேண்டும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *