இவை எப்படிப்பட்ட ஆபத்து எனில் தொழுகையாளிகளில் பலர் இவற்றிலிருந்து விடுபட முனைவதில்லை. காரணம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவதில்லை.
அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வின் திரு முன் உள்ளச்சத்தோடு நில்லுங்கள்” (2:238)
மேலும் கூறுகிறான்: “திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் தங்களின் தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்” (23:1,2)
தொழுகையில் சுஜூத் செய்யும் போது சுஜூத் செய்யுமிடத்தில் மணலை சமப்படுத்துவது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ‘நீ தொழுது கொண்டிருக்கும் போது மணலை சமப்படுத்தாதே! அவ்வாறு செய்துதான் ஆக வேண்டுமென்றால் பொடிப் பொடிக் கற்களை சமப்படுத்துவதற்காக ஒரு முறை செய்து கொள்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஅய்கீப் (ரலி) நூல்: அபூதாவூத்
தொழுகையில் அதிகமான அசைவுகள் தேவையில்லாமல் தொடர்ந்து நடைபெறுவது தொழுகையை வீணாக்கி விடும் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள். அவ்வாறாயின் அல்லாஹ்வின் திருமுன் நின்று கொண்டு வீணான காரியங்களைச் செய்பவர்களின் நிலை என்ன? அல்லாஹ்வின் திருமுன் நின்று கொண்டு அவர்கள் தம் கடிகாரத்தைப் பார்க்கின்றார்கள், ஆடையைச் சரி செய்கிறார்கள், விரலை மூக்கில் விடுகிறார்கள், இடது புறமும், வலது புறமும், மேல் நோக்கியும் பார்க்கிறார்கள், தம் பார்வை பறிக்கப்பட்டு விடும் என்றோ, தம் தொழுகையை விட்டும் ஷைத்தான் திசை திருப்பி விடுவான் என்றோ அவர்கள் அஞ்சுவதில்லை.