தொடர்-19: தோப்பில் முஹம்மது மீரான்
யார் அஞ்சுவண்ணத்தார்?
அஞ்சுவண்ணத்தாரைப் பற்றியும், மணிக்கிராமத்தாரைப் பற்றியும் இரண்டாவது செப்பேட்டின் முதல் பக்கத்தில் 34, 35 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரு வியாயார அமைப்புக்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடில்லை. ஆனால் எது யாருடைய அமைப்பு என்பதில்தான் குளறுபடிகள்.
இந்த இடத்தில் சற்று நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இதை அணுகவேண்டும்.
அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பு (Trade Association) என்றும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய வியாபார அமைப்பு என்றும் சொல்லி முற்றுப்புள்ளி போட்டு விட்டனர். பஹ்லவி, கூபிக் ஹீப்ரு மொழிகளில் எழுதப்பட்ட செப்பேட்டில் காணப்படும் ‘கூபி’ லிபியில் எழுதப்பட்ட பெயர்களை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நொண்டி சாக்குக் கூறி அப்படியே விட்டுவிட்டார்கள்.
இங்கு சொல்லப்படும் வியாபார அமைப்புகளில் முஸ்லிம்களைப் பற்றியோ முஸ்லிம்களுடைய அமைப்புகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. சுருங்கக்கூறின் துவக்க காலத்திலேயே வரலாற்றிலிருந்து முஸ்லிம்களைத் துடைத்து அப்புறப்படுத்துவதற்காக நடந்த பல சதித்திட்டங்களில் இதுவும் ஒன்று.
வியாபார அமைப்புக்கள் என குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சுவண்ணத்தாரையும், மணிக்கிராமத்தாரையும் அறுநூற்று பேரையும் (நாயர் அமைப்பு) ஈசோ சபீருக்கு வழங்கும் உரிமைகள் (அதிகாரங்கள்) முறையாக செய்யப்படுகின்றனவா என்று மேற்பார்வை செய்ய அதிகாரப்படுத்தியதாக செப்பேட்டில் காணப்படுகிறது. (செப்பேட்டில் 32-36 வரிகள்)
“32 க்கடவராகவும் உல்கு (கூ)ட்டுஞ்சரக்கு இவைகளை வச்சு உல்குவிடுப்பதாகவு —
33 ம் சரக்குமி (வி) லையிடுமிடத்தும் மற்றுமே ஸாமிகரியம் எக்காரியமும்
34 வைகளைக் கூட்டியே செய்வதாகவும் அன்றன்று படுமுல்கு — அஞ்சுவண்ணமும்
35 மணிக்கிராமமும் இலக்கிச் சுவைப்பதாகவும் நாலு வாதிலகத்து —
36 ம் விலக்கும் பூமியாக காராண்மைக் கொடுக்குமெடத்து கோப்பதவாரங் —
37 கோயில ……….”
மேலேயுள்ள செப்பேட்டு வரிகளை டி.ஏ. கோபிநாத் ராவ் மொழிபெயர்த்துத் தருகிறார்.
“the levying of customs on dutiable articles should be done only in their presence. (Similarly) the apprising of articles and all other business of the Lord (The Kind) shall be done in company with their people. The Anjuvannam and the Manigramam shall take care of the customs collected every day.’ (T.A.S. Page 84)
சுங்கவரி வசூலிப்பதை அஞ்சுவண்ணத்தார்களும் மணிக்கிராமத்தார்களும் கண்காணிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை செப்பேட்டின் 34, 35 வரிகளில் பார்த்தோம். அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பாகவும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய அமைப்பாகவும் இருப்பின், கிருத்தவரான ஈகோ சபீருக்கு வழங்கப்பட்ட மானியத்தில் கிருத்தவர்களை சாட்சிகளாகவும் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்ய வாய்ப்பு இருக்காது. கிருத்தவர்களுக்கு வழங்கிய மானியத்தில் கிருத்தவர் அல்லாத வேறு மூன்று மதப்பிரிவினரைக் கொண்டு சாட்சி கையெழுத்துப் போட வைத்திருக்கின்றனர். ஈப்ரு மொழியில் கையொப்பம் போட்டவர்கள் யூதர்களும், பஹ்லவி மொழியில் கையொப்பம் போட்டவர்கள் பாரசீகத்தைச் சார்ந்த வணிகர்களும், கூஃபி லிபியில் கையொப்பம் போட்டவர்கள் அரேபியர்களான முஸ்லிம்களும் ஆவார்கள்.
இனி அஞ்சுவண்ணம் முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பாக இல்லாவிட்டால் கூஃபி லிபியில் கையொப்பம் போட்ட அரபி தெரிந்த வியாபாரிகள் யார்? அதில் காணப்படும் 11 முஸ்லிம் பெயர்கள் அதில் எப்படி இடம்பெற்றன? இந்த முஸ்லிம்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? இந்தக் கேள்விகளுக்கு முன் இப்போது வரலாற்று ஆசிரியர்கள் மவுனம் சாதிக்கின்றனர். அஞ்சுவண்ணம் என்பது முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பை அல்லது முஸ்லிம்களைக் குறிக்கும் சொல்லாகும்.
அஞ்சுவண்ணம் என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாகவும், அவ்வூரைச் சார்ந்த மக்கள் அஞ்சுவண்ணத்தார்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் டாக்டர் Dr. HULTZSCH என்பவர் குறிப்பிடுகிறார். சிலர் அஞ்சுவண்ணம் என்பது யூதர்களுடைய காலனி என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். கிருத்தவ மதத்திற்கு மதம் மாறி வந்த ஐந்து சாதியைத்தான் அஞ்சுவண்ணம் என்ற சொல் குறிப்பிடுவதாக திரு.வெங்கய்யா என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். திரு.வெங்கய்யா குறிப்பிடும் ஐந்து சாதியினர் 1) ஈழவர் 2) தச்சர் 3) வெள்ளாளர் 4) வண்ணார். ஐந்தாவது சாதி பெயர் கோட்டயம் செப்பேட்டில் (தரிசாபள்ளி செப்பேட்டில்) தெளிவாகத் தெரியவில்லை என்று கூறி முடித்துக் கொண்டார்.
இங்கு குறிப்பிடப்பட்ட நான்கு சாதியினரும் பெயர் தெரியாத ஐந்தாவது சாதியும் தான் அஞ்சுவண்ணத்தார் என்றால் கிருத்தவர்களாக மதம் மாறிய இவர்கள் எப்படி யூத அமைப்பாக குறிப்பிடப்பட்ட அஞ்சுவண்ணத்தார்கள் ஆனார்கள்?
மதம் மாறிய மேற்குறிப்பிட்ட ஐந்து சாதியாளர்களை ‘அஞ்சுவண்ணத்தார்’ என்று ஏற்றுக்கொள்வோமேயானால் யூதர்களுடைய அமைப்பாக சொல்லப்படும் அஞ்சுவண்ணம் எது?
தொடரும்…
மக்கள் உரிமை வாரஇதழ் – ஜனவரி, 20 – 26 , 2006
Please post rest of the history (Islam in India). We are much existed to know the true Islam introduction in India.
Assalamu Alaikum may allah gives long healthy life to publisher …..plz coud you publish islam in srilanka & USA in tamil
Thanks
Please post rest of the history (Islam in India). We are much existed to know the true Islam introduction in India.