Featured Posts

மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு

“இன்னும் மாதவிடாய்ப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அது ஓர் தூய்மையற்ற நிலை, ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டும் விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்” (2:222) அவள் தூய்மையடைந்து குளிக்காத வரை அவளிடம் உறவு கொள்வது கூடாது. அல்லாஹ் கூறுகிறான்: “பிறகு அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்” (2:222)

இது எவ்வளவு பெரிய மோசமான பாவமென்பதை பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது. ‘யாரேனும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உறவு கொண்டால் அல்லது குறிகாரனிடம் சென்றால் முஹம்மதுக்கு இறக்கியருளப்பட்ட (வேதத்)தை அவன் நிராகரித்து விட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி

இதனை ஒருவர் வேண்டுமென்றே அல்லாமல் தவறுதலாக, (அதன் சட்டத்தை) அறியாமல் செய்து விட்டால் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. வேண்டுமென்றே (சட்டம்) அறிந்து செய்தால், சில அறிஞர்களின் கூற்றின் பிரகாரம் அவர் பரிகாரம் செய்வது அவசியமாகும். பரிகாரம் பற்றி கூறப்படக்கூடிய ஹதீஸை அவர்கள் சரி காணுகின்றனர். பரிகாரம் என்பது ஒரு தினார் அல்லது பாதி தினார் தர்மம் செய்வதாகும். இந்த ஒரு தினார் அல்லது பாதி தினார் கொடுப்பதிலேயும் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.

சிலர் கூறுகின்றனர்: அவ்விரண்டில் ஒன்றை அவர் தெரிவு செய்து கொள்ளலாம். அதாவது விரும்பினால் ஒரு தினாரோ பாதி தினாரோ கொடுக்கலாம். இன்னும் சிலர் கூறுகின்றனர்: மாதவிடாய் காலத்தின் கடைசி கட்டத்தில் உதிரப்போக்கு மிகவும் குறைந்து விடும்போதோ அல்லது அவள் குளிப்பதற்கு முன்போ அவளிடம் அவர் உறவு கொண்டால் அவர் பாதி தினார் கொடுக்க வேண்டும். உதிரபோக்கு அதிகம் ஏற்படுகின்ற மாதவிடாயின் ஆரம்ப கட்டத்தில் அவளிடம் அவர் உறவு கொண்டால் அவர் ஒரு தினார் கொடுக்க வேண்டும். ஒரு தினார் என்பது மக்களுடைய வழக்கத்தில் உள்ள அளவின்படி 4.25 கிராம் தங்கமாகும். இந்த அளவு தங்கத்தையோ இதன் மதிப்புக்கு ஈடான ரொக்கப் பணத்தையோ அவன் தர்மம் செய்யலாம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *